Pages

Wednesday, November 18, 2009

கற்பின் விலை எட்டு லக்ஷம் ?

"போலீஸ் அதிகாரியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணுக்கு, எட்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தொகையை வட்டியுடன் தமிழக அரசு வழங்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் நாகல்குளம் கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் சுப்புலட்சுமி. நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டராக 1984ம் ஆண்டு பணியாற்றியவர் மங்கள தனராஜ். சுப்புலட்சுமிக்கும், அவரது உறவினருக்கும் இடையே வீட்டுத் தகராறு இருந்தது. உறவினருக்கு எதிராக புகார் கொடுப்பதற்காக, நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு சுப்புலட்சுமி கணவருடன் மாலை 6 மணிக்கு சென்றார்.


போலீஸ் நிலையம் அமைந்துள்ள கட்டடத்தில் இன்ஸ்பெக்டருக்கான வீடும் உள்ளது. சுப்புலட்சுமியின் கணவரிடம், "நீங்கள் போகலாம்; உங்கள் மனைவியை விசாரித்து விட்டு அனுப்புகிறேன்' என இன்ஸ்பெக்டர் மங்கள தனராஜ் கூறியுள்ளார். பின், சுப்புலட்சுமியை இன்ஸ் பெக்டர் பாலியல் பலாத்காரம் செய்தார். மறுநாள் காலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.


பாதிக்கப்பட்ட பெண், டி.எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தார். பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டருக்கு எதிராக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம், 1984ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி நடந்தது. சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடந்தது. அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு, இன்ஸ்பெக்டர் மீது குற்ற நடவடிக்கை, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் மங்கள தனராஜ் டி.எஸ்.பி.,யாக பதவி உயர்வு பெற்றார்.


இந்த வழக்கை தென்காசியில் உள்ள உதவி செஷன்ஸ் நீதிபதி விசாரித்து, மங்கள தனராஜ்க்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். சுப்புலட்சுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசும் உத்தரவிட்டது. தனக்கு ஒன்பது லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் சுப்புலட்சுமி மனு தாக்கல் செய்தார். சுப்புலட்சுமி சார்பில் வக்கீல் சித்ரா சம்பத் வாதாடினார்.


மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன் பிறப்பித்த உத்தரவு: போலீஸ் அதிகாரியின் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண், தான் அடைந்த மன உளைச்சல் மற்றும் வேதனைக்காக நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் முடிந்து விட்டன. நீதியைத் தேடி கோர்ட்டுக்கு வந்துள்ளார். போலீஸ் அதிகாரியின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையால், மனுதாரர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார். அவரது வாழ்க்கை மிகவும் துயரமானது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்த பெண், அனைத்து அவமானங்களையும் அனுபவித்துள்ளார்.


போலீஸ் அதிகாரிக்கு தண்டனை விதிக்கப்படும் வரை, வழக்கை இவர் நடத்தியுள்ளார். 12 ஆண்டுகளாக இத்தகைய போராட்டத்தை நடத்தியுள்ளார். வழக்கை நடத்துவதற்காக சொந்த வீட்டையும், சொத்துகளையும் விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளார். அப்போதும் கூட போலீஸ் அதிகாரிக்கு, சட்டப்படி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து போராடியுள்ளார்.


போலீஸ் அதிகாரி விடுத்த சவால்களை மனுதாரர் எதிர் கொண்டுள்ளார். அவரது உறுதியான போராட்டத்தினால், போலீஸ் அதிகாரி செய்த தவறுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். பெண் சமூகத்திற்கு இவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். இவரது நடவடிக்கையை அரசு பாராட்டியிருக்க வேண்டும். இவரைப் போன்ற பெண்கள் இருந்தால், மங்கள தனராஜ் போன்றவர்களுக்கு இத்தகைய குற்றத்தில் மீண்டும் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் வராது.


ஒன்பது லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இவர் வழக்கு தொடுத்துள்ளார். ஒரு லட்சம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது. இவருக்கு பண உதவி வழங்கியதன் மூலம் கண்ணியத்தை மீட்டுத் தர முடியாது என்றாலும், இந்த நஷ்ட ஈடு அவருக்கும், குடும்பத்திற்கும் உதவிகரமாக இருக்கும்.


கடந்த 84ம் ஆண்டு ஜூன் மாதம் சம்பவம் நடந்துள்ளது. கிரிமினல் வழக்கு விசாரணை முடிய 12 ஆண்டுகளாகி உள்ளது; 96ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸ் அதிகாரி தண்டிக்கப்பட்டுள்ளார். இவர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை 2004ம் ஆண்டு ஐகோர்ட் டிஸ்மிஸ் செய்துள்ளது. மனுதாரர் சார்பில் பல்வேறு மனுக்களை அரசுக்கு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.


மனுதாரருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், அவரது கண்ணிய வாழ்க்கைக்கும் ஏற்பட்ட பாதிப்பை பணத்தால் அளவிடுவது என்பது கஷ்டமானது. சம்பவம் நடக்கும் போது, சுப்புலட்சுமிக்கு வயது 28. போலீஸ் அதிகாரியின் மனிதாபிமானமற்ற செயலினால், இளம்பெண்ணின் சகஜ வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. இருந்தாலும், நீதியின் பிடியில் இருந்து குற்றவாளி தப்பக்கூடாது என்பதற்காக அனைத்தையும் உறுதியாக எதிர் கொண்டுள்ளார்.


இந்த வழக்கின் பின்னணி முழுவதையும் பரிசீலித்து, அவருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். எனவே, அரசு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதால், மீதி எட்டு லட்சம் ரூபாயை இந்த ரிட் மனு தாக்கல் செய்த நாள் முதல், 9 சதவீத வட்டியுடன் சேர்த்து தமிழக அரசு அளிக்க வேண்டும்.


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்து, பாதுகாக்க வேண்டியது போலீசாரின் கடமை. போலீஸ் காவலில் வன்முறை, போலீஸ்காரரே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாய் உள்ளது. போலீசார் அனைவரையும் குறை கூற முடியாது. இத்துறையில் இருக்கும் சில "கறுப்பு ஆடுகள்' தான், துறைக்கே கெட்ட பெயர் உருவாக்குகின்றனர். இவ்வாறு நீதிபதி சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment