Pages

Sunday, November 29, 2009

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும்

"அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.




இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா, அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து போட்டியிடப் போவதாக கடந்த சில மாதங்களாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வந்தன.எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு தெரிவித்தன. இருந்தாலும், பொன்சேகா இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வந்தார்.




இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து நான் போட்டியிடுவது உறுதி. துவக்கத்தில் அரசியலில் குதிக்க எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால், நாட்டின் அரசியல் சூழ்நிலை என்னை அரசியலில் குதிக்க வைத்து விட்டது. மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்.போர்க்களத்தில் இதுவரை நான் தோல்வியை சந்தித்தது இல்லை; தேர்தலிலும் தோற்க மாட்டேன். அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து வெற்றி பெறுவேன். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியின் பயன், ஒரு குடும்பத்துக்கு மட்டும் (ராஜபக்ஷே குடும்பம்) சொந்தமானது அல்ல.வரலாற்று ரீதியாக இலங்கை, சிங்கள மக்களுக்கு சொந்தமானது. அதே நேரத்தில், தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.




எனக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை இலங்கை அரசு குறைத்து விட்டது.சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, என் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், நான் மட்டுமல்லாமல், என்னுடன் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களும் உயிரிழப்பர். இதை இலங்கை அரசு உணர வேண்டும்.அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நட்புறவை மேலும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்தியா, இலங்கையின் அண்டை நாடு மட்டுமல்ல; இந்த பிராந்தியத்தில் உள்ள சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்று. சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவாக நான் செயல்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.




புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்கு தேவையான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்காகவே, அங்கு சென்றேன். புலிகளுக்கு எதிரான போரின் போது இந்த நாடுகள், இலங்கைக்கு ராணுவ ரீதியாக சில உதவிகளைச் செய்துள்ளன. ஆனால், இந்தியா அரசியல் ரீதியாகவும் இலங்கைக்கு உதவியுள்ளது. இந்தியாவுடனான இலங்கையின் உறவு, மிகவும் உயர்ந்தது. நான் அதிபரானால், எதிர்காலத்திலும் இந்த சுமுக உறவைத் தொடர்வேன்.அதிபராக தேர்வு செய்யப்பட்டால், தற்போது இலங்கையில் அதிபருக்கு உள்ள சில விசேஷ அதிகாரங்களை ஆறு மாதங்களுக்குள் ரத்து செய்வேன்; பார்லிமென்ட் தேர்தலை நடத்துவேன். ஜனநாயகம், சமூக நீதி, பத்திரிகை சுதந்திரத்துக்கு வகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டு வரப்படும்.இவ்வாறு பொன்சேகா கூறினார்.

No comments:

Post a Comment