உடுமலை வனப்பகுதியில், தோண்ட, தோண்ட, டன் கணக்கில் சந்தனக் கட்டைகள் சிக்குகின்றன. நேற்று மூன்று டன் சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் மீட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, நாரைக்கல் சரகம் ஆகிய பகுதிகளில், 250 சதுர கி.மீ., பரப்பளவில், லட்சக்கணக்கான சந்தன மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. பலனுக்கு தயாராக பல ஆயிரம் மரங்கள் உள்ளன. மரங்கள் முதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தனக் கட்டைகள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்தன.
சந்தன மரங்களை வெட்டி கடத்துவது வனத்துறையினர் என மலை வாழ் மக்களும், அவர்கள் தான் காரணம் என வனத்துறையினரும் மாறி, மாறி புகார் தெரிவித்து வந்தனர். வனத்துறை மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் அடிக்கடி, சந்தனக் கட்டை கடத்தும் கும்பல், வாகனங்கள் சிக்கி வந்தன. வனத்துறை உயர் அதிகாரிகள் சந்தனச்சோலையில் ஆய்வு செய்த போது அதிர்ச்சியடைந்தனர். 559 சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம், அதிரடிப்படை பாதுகாப்பு, வனத்துறை அமைச்சர் ஆய்வு என அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தன.
சந்தனக் கட்டைகள் பறிமுதல்: ஆய்வில், அக்., 25ம் தேதி, 620 கிலோ சந்தனக் கட்டைகளும், 28ம் தேதி, 3,910 கிலோ சந்தனக் கட்டைகளும், 29ல், 110 கிலோ சந்தனக் கட்டைகளும், 30ம் தேதி, 2,701 கிலோ சந்தனக் கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நவ., 2ம் தேதி, கடத்தல் கும்பலால் வெட்டி கடத்துவதற்காக, வனப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,430 கிலோ சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
சந்தனக் கட்டை கடத்தும் கும்பலால், வனப்பகுதியில் வெட்டி, கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.77 டன் சந்தனக் கட்டைகள் சிக்கின. மூன்றாண்டில், 35 டன் சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
மூன்று டன்கள் மீட்பு: மேலும், வனப்பகுதி முழுவதும் சந்தனக் கட்டைகள் வெட்டி, கடத்துவதற்காக பதுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புள்ளது என்பதால், தலா 10 பேர் கொண்ட 10க்கும் மேற்பட்ட குழுவினர், 250 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள வனப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியிலுள்ள கள்ளிமரத்துப்பட்டி, ஆனைமுடங்கி, கதவடி ஆகிய பகுதிகளில், கடத்துவதற்காக புதர்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்று டன் சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் மீட்டனர்.
உதவி வன பாதுகாவலர் தியாகராஜன், வனச்சரகர் ஜெயராமன், வனவர் சுப்புராஜ், பீமன் குழுவினர், சந்தனக் கட்டைகளை மீட்டு நேற்று உடுமலை வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். சந்தனக் கட்டைகள் தரம் பிரிக்கப்பட்டு, எடை போடப்பட்டு வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment