இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக அதிபர் ராஜபக்சே, கடந்த மே மாதம் அறிவித்தார். 25 ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டு போர் முடிந்ததால் சிங்கள மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது. எனவே, அதிபர் தேர்தலை முன்னதாகவே நடத்த முடிவு செய்து, வருகிற ஜனவரி மாதம் தேர்தலை நடத்த உள்ளார்.
அதே நேரத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை 30 மாதங்களுக்கு மேல் தீவிரமாக நடத்தியவர், முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா. எனவே, அவருக்கும் சிங்களர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. எனவே, அதிகாரம் இல்லாத பதவியில் அவரை ராஜபக்சே நியமித்தார். அதனால், எழுந்த மோதல் காரணமாக சமீபத்தில் தன்னுடைய பதவியை சரத் பொன்சேகா ராஜினாமா செய்தார்.
மேலும், அதிபர் தேர்தலில் போட்டியிடவும் தீர்மானித்து இருக்கிறார். அது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னமும் சரத் பொன்சேகா அறிவிக்கவில்லை. எனினும், கொழும்பு நகரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளார். இந்த சூழ்நிலையில், அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துள்ளன. சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்து இருக்கின்றன.
இலங்கையின் இடதுசாரி கட்சியான `ஜனதா விமுக்தி பெரமுனா', முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவை அதிபர் தேர்தலில் ஆதரிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. தற்போது, இலங்கை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் அதிபர் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தாமல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை, கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரனில் விக்கிரமசிங்கே நேற்று தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிபர் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவது என்ற வரலாற்று சிறப்பு மிக்க முடிவை ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ளது. அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார்.
அதிபருக்கு உள்ள ஏதேச்சதிகாரத்தை ஒழிக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், போரினால் இடம் பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான மக்களை மீண்டும் அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தவும் ஒரு வாய்ப்பாக இந்த தேர்தலை எங்கள் கட்சி பயன்படுத்தும்.
இவ்வாறு ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment