Pages

Saturday, November 28, 2009

மறக்க முடியுமா 5

ஜவுளித் தொழிலில் ஈடுபட லண்டனில் படித்த டி.ஆர்.சுந்தரம் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவை அமைத்து சாதனை. ஜெமினி, ஏவி.எம். ஆகிய ஸ்டூடியோக்களைப்போல, தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய ஸ்டூடியோ "மாடர்ன் தியேட்டர்ஸ்." இங்கு 100_க்கும் மேற்பட்ட படங்கள் தயாரிக்கப்பட்டன.

சென்னைக்கு வெளியே சேலத்தில் தொடங்கப்பட்ட இந்த ஸ்டூடியோ, மிகப்பிரபலமான நடிகர்_நடிகைகளை நடிக்க வைத்து, வெற்றிப்படங்களைத் தயாரித்தது.

இந்த ஸ்டூடியோவின் அதிபரான டி.ஆர்.சுந்தரம், சேலம் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1907 ஜுலை 16_ந்தேதி பிறந்தவர். இவருடைய தந்தை வி.வி.சி. ராமலிங்க முதலியார், மில்களில் இருந்து நூலை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். அவருடைய ஐந்தாவது மகன் தான் டி.ஆர்.சுந்தரம். தாயார் பெயர் கணபதி அம்மாள்.

ஆரம்பக் கல்வியை சேலத்தில் கற்ற சுந்தரம், சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து, "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்றார். அதன் பிறகு சுந்தரம் லண்டனுக்குச் சென்றார். ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றறிந்தார்.

லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், கிளாடிஸ் என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். சுந்தரத்துக்கு பெரிய இடங்களில் இருந்து எல்லாம் பெண் கொடுக்க பலர் தயாராக இருந்தனர். ஆனால் அவரோ, குடும்பத்தினரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, வெள்ளைக்காரப் பெண்ணை மணந்து கொண்டு சேலம் திரும்பினார்

எனினும், சுந்தரத்தின் மீது அவருடைய உறவினர்கள் எவரும் கோபம் கொள்ளவில்லை. சுந்தரத்தின் சகோதரர் முருகேச முதலியாரும், மற்ற உறவினர்களும் சுந்தரத்துக்கும் அவருடைய மனைவிக்கும் மாலை அணிவித்து வரவேற்றனர்.

ஜவுளித் தொழிலில் உயர் படிப்பு படித்திருந்த சுந்தரத்துக்கு, அந்த தொழிலின் மீது ஆர்வம் ஏற்படவில்லை. லண்டனில் இருந்து அவர் சேலம் திரும்பியபோது (1933_ல்) சேலத்தில் "ஏஞ்சல் பிலிம்ஸ்" என்ற கம்பெனி சினிமாப் படங்கள் எடுத்து வந்தது. சினிமாத் தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், ஏஞ்சல் பிலிம் அதிபர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து சினிமா படம் தயாரிக்கலானார்.

1933 முதல் 35 வரை, இரண்டு படங்களைத் தயாரித்தார். இரண்டு படங்களும் சுமாராகத் தான் ஓடின. அக்காலத்தில், படம் தயாரிப்பதற்கு கல்கத்தாவுக்குப் போக வேண்டிய நிலை இருந்தது. `எதெற்கெடுத்தாலும் கல்கத்தாவுக்கு போகவேண்டி இருக்கிறதே, அதற்கு பதிலாக சேலத்திலேயே ஸ்டூடியோ அமைத்தால் என்ன?' என்ற கேள்வி டி.ஆர்.சுந்தரத்தின் மனதில் எழுந்தது.

இந்த சிந்தனை செயல் வடிவம் பெற்றது. சேலம் _ ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை சுந்தரம் வாங்கினார். "ஸ்டூடியோவுக்குள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்" என்று நினைத்தார்.

படப்பிடிப்பு தளம், "லேப்", பாடல் பதிவு செய்வதற்கான ரிக்கார்டிங் அறை, படத்தை போட்டுப்பார்க்க ஒரு தியேட்டர் _ இத்தனை வசதிகளுடனும், 1935_ல் "மாடர்ன் தியேட்டர்ஸ்" ஸ்டூடியோ உதயமாகியது.

இதன்பின், படத்தயாரிப்பில் தீவிரமாக இறங்கினார், சுந்தரம். முதல் தயாரிப்பாக "சதி அகல்யா" என்ற படத்தை தயாரித்தார். பிற்காலத்தில் "கவர்ச்சிக் கன்னி"யாகத் திகழ்ந்த இலங்கைக் குயில் தவமணிதேவிதான் இந்தப்படத்தின் கதாநாயகி.

1937_ல் வெளிவந்த இந்தப்படம், நல்ல வெற்றி பெற்றது. தொடர்ந்து, "பத்மஜோதி" என்ற படத்தையும் "புரந்தரதாஸ்" என்ற கன்னடப் படத்தையும் தயாரித்தார். 1938_ல், "பாலன்" என்ற மலையாளப் படத்தைத் தயாரித்தார். மலையாள மொழியின் முதல் பேசும் படம் இதுதான். இப்படம் வெற்றிகரமாக ஓடியது.

பின்னர் சுந்தரம் தயாரித்த படம் "நாம தேவர்." இது, தமிழில் வெளியான 100_வது படம் என்ற பெருமையைப் பெற்றது. 1938_ம் ஆண்டில் "மாயா மாயவன்" என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார். நொட்டானி என்பவர் டைரக்ட் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, எம்.எம். தண்டபாணி தேசிகரும் அவர் மனைவி தேவசேனாவும் நடித்த "தாயுமானவர்" படத்தைத் தயாரித்தார். அதை டி.ஆர்.சுந்தரமே டைரக்ட் செய்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த அடுத்த படம் "சந்தனத்தேவன்". ஆங்கிலக் கதையான "ராபின்ஹுட்"டைத் தழுவி, இப்படம் தயாரிக்கப்பட்டது. படத்தின் கதாநாயகன் ஜி.எம். பஷீர். படம் வெற்றி பெற்றது.

தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து வாக்கர், பேய்ஸ் என்ற இரண்டு கேமராமேன்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் ஆகியோர், பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர்.

படத்தில் நடிகர்_நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் "டைட்டில்" காட்சியில் படத்துக்குப்படம் புதுமையைப் புகுத்தினார். "டைட்டில்" காட்சிக்கு எவ்வளவு செலவானாலும் கவலைப்படமாட்டார்.

டி.ஆர்.சுந்தரம் தமது ஸ்டூடியோவில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் நடத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை_வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர்_நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.

நகைச்சுவை நடிகர்கள் காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், வி.எம்.ஏழுமலை, ஏ.கருணாநிதி ஆகியோர், இங்கு மாத சம்பளத்துக்கு வேலை பார்த்தனர். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.

No comments:

Post a Comment