கடந்த மே மாத சண்டையில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாக தோல்வியை தழுவியதால் இந்த ஆண்டு மாவீரர் தினத்தை எப்படி கொண்டாடுவார்கள்? மாவீரர் தின உரையை பிரபாகரனுக்கு பதில் யார் பேசுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளில் மாவீரர் தின நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அதில் தமிழக தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டங்களில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இங்கிலாந்துக்கும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் டென்மார்க்குக்கும், கனடாவுக்கு இயக்குனர் சீமான், பிரான்சுக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் ஆஸ்திரேலியாவுக்கு பழ. நெடுமாறனும் சென்றுள்ளனர்.
கனடாவில் டோரண்டோ நகரில் மாவீரர் தினம் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்ட டைரக்டர் சீமான் கூறியதாவது:-
பிரபாகரன் கையில் ஒரு நாடு இருந்தால் குறுகிய காலத்தில் அந்த நாடு உலகின் வல்லரசு நாடாக மாறி விடும். அந்த நாட்டில் துணிவான, தூய்மையான நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசு என்ற பெருமையை ஈழத் தமிழன் பெறுவான். ஊழல் இல்லாத நாடாக அந்த நாடு இருக்கும்.
கற்பழிக்காத, கொலை செய்யாத, போர்க் கைதிகளை நல்ல முறையில் பாதுகாத்த விடுதலைப்புலிகளை பயங்கர வாதிகள் என்று சொல்வது தவறு.
விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் எதிரியோடு மட்டும் போராடிஇருந்தால், இந்நேரம் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால் துரோகிகளுடன் அவர்கள் போராட வேண்டிய திருந்தது. என்றாலும் வரலாற்று தமிழனுக்கு தோல்வி இல்லை. மீண்டும் தமிழர்கள் துடித்து எழுவார்கள். தமிழ் ஈழ தேசம் பிறக்கும்.
இவ்வாறு இயக்குனர் சீமான் ஆவேசமாக பேசினார்.
சீமானின் பேச்சு கனடா நாட்டு அரசியல் சட்டத்துக்கு புறம்பாக இருப்பதாக அந்த நாட்டு போலீசார் குற்றஞ்சாட்டினார்கள். பிறகு சீமானை கனடா போலீசார் கைது செய்தனர்.
குடியுரிமை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது குறித்து கனடா போலீசாரும், உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை கனடா சென்ற சீமான் அடுத்து நாளை மறுநாள் மான்ட்ரில் நகரில் இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற தலைப்பில் நடக்கவுள்ள பிரபாகரனின் 55-வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். அவரை கனடாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் திட்டமிட்டப்படி பங்கேற்க செய்யும் முயற்சிகளில் கனடா வாழ் ஈழத் தமிழ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment