Pages

Saturday, November 28, 2009

மறக்க முடியுமா 7



"வாழ்க்கை" படத்துக்குப் பின் அண்ணாவின் "ஓர் இரவு" நாடகத்தை படமாக்க ஏவி.எம். முடிவு செய்தார். கதை முழுவதும் ஒரே இரவில் நடப்பதுபோல் இந்த நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார். பழைய சம்பவங்கள் "பிளாஷ் பேக்" முறையில் சொல்லப்பட்டன.

இதை கே.ஆர்.ராமசாமி நாடகமாக நடத்தி வந்தார். இது மிகப்பெரிய வெற்றி நாடகம். இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டுத்தான், "தமிழ்நாட்டு பெர்னாட்ஷா" என்று அண்ணாவை "கல்கி" புகழ்ந்தார்.

இந்த நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புவதாக அண்ணாவிடம் ஏவி.எம். கூறினார். அதற்கு அண்ணா சம்மதித்தார். திரைக்கதை_வசனம் எழுதித்தர அண்ணாவுக்கு ரூ.10 ஆயிரம் தருவது என்று முடிவாயிற்று.

ஒரு வாரம் கழித்து, ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு அண்ணா வந்தார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கித் தரப்பட்டது.

இரவு டிபன் சாப்பிட்டதும், அண்ணா திரைக்கதை _ வசனம் எழுதத் தொடங்கினார். "எனக்கு ஒரு செம்பில் தண்ணீர், டம்ளர், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை வைத்து விடுங்கள். நீங்கள் யாரும் எனக்காகக் காத்திருக்க வேண்டாம். திரைக்கதை_வசனத்தை எழுதி முடித்துவிட்டு, காலையில் உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன். காலையில் நான் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்திருப்பேன். அப்போது என்னை வந்து பார்த்தால் போதும்" என்று ஏவி.எம்.மிடம் கூறினார்.

தரையில் பாய் போட்டு அமர்ந்து, முன்னால் சிறிய மேஜையை வைத்து வசனம் எழுதத் தொடங்கினார். இரவு சுமார் 10 மணிக்கு எழுதத் தொடங்கியவர், விடிய விடிய எழுதினார். அடித்தல், திருத்தல் இல்லாமல் மொத்தம் 300 பக்கங்களில் வசனத்தை எழுதி முடித்தார்.

காலையில் அவரை ஏவி.எம்.மும், ப.நீலகண்டனும் போய்ப் பார்த்தார்கள்.

"மொத்தம் 300 பக்கங்கள் எழுதி இருக்கிறேன். சினிமாவுக்கு இன்னும் ஏதாவது மாறுதல் செய்யவேண்டுமானால், தாராளமாக செய்து கொள்ளலாம்" என்று கூறினார், அண்ணா.


"ஓர் இரவு" படத்தில், ஆரம்பத்தில் இளைஞராகவும், பின் வயோதிகராகவும் வரும் முக்கிய வேடத்தில் டி.கே.சண்முகம் நடித்தார். அவருக்கு ஜோடி பி.எஸ்.சரோஜா. இளம் ஜோடியாக ஏ.நாகேஸ்வரராவ் _ லலிதா நடித்தனர். நாடகத்தில் நடித்த "கேரக்டர்" வேடத்தில் கே.ஆர். ராமசாமி நடித்தார்.

நாடகத்துக்கும், படத்துக்கும் ஒரு முக்கிய மாறுதல் இருந்தது. நாடகத்தில் பிளாஷ்பேக் முறையில் சொல்லப்பட்ட பழைய சம்பவங்கள், படத்தில் நேரடியாக சொல்லப்பட்டன. இடைவேளைக்குப் பிறகு வரும் சம்பவங்கள்தான் ஒரே இரவில் நடப்பவை.

ஏவி.எம்.மின் துணை டைரக்டராக இருந்து வந்த ப.நீலகண்டன், இப்படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட "ஓர் இரவு" 1951 ஏப்ரல் 11_ந்தேதி வெளிவந்தது. ஆனால், நாடகத்துக்குக் கிடைத்த வெற்றி படத்துக்கு கிடைக்கவில்லை.

இதுபற்றி ஏவி.எம். தமது வாழ்க்கை வரலாற்றில், "ஓர் இரவு படம் நாங்கள் எதிர்பார்த்தபடியோ அல்லது எங்களது முந்திய படங்களான நாம் இருவர், வாழ்க்கை ஆகிய வெற்றிப்படங்களோடு ஒப்பிடுகிற மாதிரியோ ஓடவில்லை. நாடகம் வெற்றிகரமாக அமைந்த அளவுக்கு, படம் வெற்றிகரமாக வரவில்லை.

அண்ணா எழுதிக் கொடுத்ததை நாங்கள் திருத்தி அமைத்ததாலோ, இதுதான் சினிமாவுக்கு ஒத்துவரும் என்று எங்கள் டைரக்டர் நினைத்ததாலோ, எந்தக் காரணத்தினாலோ, எதிர்பார்த்த அளவுக்கு அந்தப்படம் வெற்றி தரவில்லை. ஆயினும் நல்ல படமாகவே அமைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 1949 ஜுன் மாதத்தில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது. அப்போது முதல்_அமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ஏவி.மெய்யப்ப செட்டியாரை அழைத்துப் பேசினார்.


"பாரதியார் பாடல்களின் உரிமையை நீங்கள் வாங்கி வைத்திருப்பதாக அறிந்தேன். பாரதியார் போன்ற தேசிய மகாகவியின் பாடல்கள் நாட்டின் பொதுச் சொத்தாக இருக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் எவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தாலும் சொல்லுங்கள். அந்தப் பணத்தை அரசாங்கத்திலிருந்து கொடுத்து விடுகிறோம்" என்று கூறினார், முதல்_அமைச்சர்.

ஏவி.எம். கொஞ்சம்கூட தயங்காமல், "பாரதியார் பாடல்களின் உரிமையை, இந்த கணமே அரசாங்கத்துக்கு கொடுத்து விடுகிறேன். அதற்காக ஒரு ரூபாய் கூட வேண்டாம். எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் இதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்று பதில் அளித்தார்.

இதன்படியே, பாரதியார் பாடல் உரிமையை அரசாங்கத்துக்கு மாற்றி முறைப்படி பத்திரம் எழுதிக்கொடுத்தார். இதற்காக தலைவர்களும், பிரமுகர்களும் ஏவி.எம்.முக்கு பாராட்டு தெரிவித்தனர்

No comments:

Post a Comment