Pages

Saturday, November 28, 2009

மறக்க முடியுமா 4



"வல்லவன் ஒருவன்" படத்திற்குப் பிறகு "எதிரிகள் ஜாக்கிரதை" என்றொரு படத்தை ராமசுந்தரம் தயாரித்தார். இதில், ரவிச்சந்திரன், எல்.விஜயலட்சுமி, மனோகர் ஆகியோர் நடித்தனர். 1966_ல் வெளிவந்த இப்படம் ஏறக்குறைய ஸ்டண்ட் படம் போலவே இருந்தது.

மாறுதலுக்காக ஒரு சமூகப் படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கம்பெனி டைரக்டர்கள் கூறியதால், "காதலித் தால் போதுமா" என்ற படம் தயாராயிற்று. ஜெய்சங்கர், வாணிஸ்ரீ ஆகியோர் நடித்தனர். இது ஓரளவு வெற்றிப் படமே.

பின்னர், சிறையில் இருந்து தப்பி வரும் 4 கைதிகளை மையமாக வைத்து, வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் ஒரு கதையைத் தயாரித்தார். இக்கதையை "நான்கு கில்லாடிகள்" என்ற பெயரில் ராமசுந்தரம் படமாகத் தயாரித்தார். இதில் ஜெய்சங்கர், மனோகர், ஆனந்தன், ஓ.ஏ.கே.தேவர், தேங்காய் சீனிவாசன், சி.ஐ.டி.சகுந்தலா ஆகியோர் நடித்தனர். காமெடி கலந்த இப்படம், நன்றாக ஓடியது.

தன் தந்தையைப் போலவே, ஆங்கில நாவல்களைப் படிக்கும் பழக்கம் ராமசுந்தரத்துக்கு இருந்தது. நிறைய படித்தார். பட உலகத்தின் நெளிவு _ சுளிவுகளை ஓரளவு தெரிந்து கொண்டார். ஆயினும் 1970_ல் அவர் எடுத்த "கருந்தேள் கண்ணாயிரம்" என்ற படம், தோல்வி அடைந்தது.

இதனால் சோர்வடைந்த ராமசுந்தரம், படம் எடுப்பதை சில நாட்கள் ஒத்திவைத்தார். படங்கள் ஏன் தோல்வி அடைகின்றன? வெற்றிப் படங்களுக்கு `பார்முலா' என்ன என்று தீவிரமாக ஆலோசித்தார். தந்தையிடம் பணிபுரிந்த பலரிடமும் கலந்து பேசினார்.

இதன்பின், தீர ஆலோசித்த பிறகு 1972_ல் "தேடி வந்த லட்சுமி" என்ற படத்தை எடுத்தார். இதில் ஜெய்சங்கர், லட்சுமி ஆகியோர் நடித்தனர். படம் சுமாராக ஓடியது. பின்னர் எடுத்த பிராயசித்தம் (1974), வல்லவன் வருகிறான்(1979), காளி கோவில் கபாலி (1979), துணிவே தோழன் (1980), அன்று முதல் இன்று வரை (1981), வெற்றி நமதே (1982) ஆகிய படங்கள் சாதாரண படங்களாக அமைந்தன.

தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்ததால், ராமசுந்தரம் உற்சாகம் இழந்தார். ஆலோசனைகள் கூறுவதற்கு தகுந்த நபர்கள் இல்லை. சுமாரான படங்களையே தயாரித்ததால், படங்களை மிகவும் குறைந்த விலைக்கு விநியோகஸ்தர்கள் கேட்டனர். இதனால் கம்பெனியின் வருவாய் மிகவும் குறைந்து போயிற்று.

மேற்கொண்டு படம் தயாரித்தால் நஷ்டம் தான் என்ற நிலை ஏற்பட்டதால், படம் தயாரிப்பதை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. இதனால் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவை மூடிவிட ராமசுந்தரம் வருத்தத்துடன் முடிவு எடுத்தார்.

"தரமான படங்களைத் தொடர்ச்சியாக தயாரித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய நிறுவனம், தயாரிப்பை நிறுத்தி விட்டதால், சினிமா உலகமே வருந்தியது. இதற்காக வெளி நபர்கள் யார் மீதும் குறை சொல்ல முடியாது. முழுக்க முழுக்க இது ஸ்டூடியோவின் நிர்வாகத்தில் இருந்த சிலரின் அசிரத்தையால் தான் நடந்தது என்று கலையுலக வல்லுனர்கள் பேசிக்கொண்டார்கள்" என்று, டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

1937 முதல் 1982 வரை மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த மொத்த படங்கள் 136. அதில் தமிழ் 102; தெலுங்கு 13; கன்னடம் 4; மலையாளம் 8; இந்தி 1; ஆங்கிலம் 1; சிங்களம் 7. சிறந்த பிராந்திய மொழிப்படமாக, குமுதம் (1961) படத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது. அதற்கான பரிசை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து டி.ஆர்.சுந்தரம் பெற்றார்.

பிறகு, "வல்லவனுக்கு வல்லவன்" படத்துக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. அதை, அன்றைய முதல்_ அமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இருந்து ராமசுந்தரம் பெற்றார். "கலைமாமணி" விருதும் அவருக்கு கிடைத்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான முதல் மலையாள வண்ணப்படமான "கண்டம் பெச்ச கோட்டு" என்ற படமும், சிறந்த பிராந்திய மொழிப்படத்துக்கான பரிசைப் பெற்றது.

சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட சினிமா ஸ்டூடியோக்களில் நீண்ட காலம் இயங்கியது, அதிக படம் தயாரித்தது என்ற பெருமை மாடர்ன் தியேட்டர்சுக்கு உண்டு. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை டி.ஆர்.சுந்தரம் கடைப்பிடித்ததால் இது சாத்தியம் ஆயிற்று.

ஊழியர்களுக்கு குறித்த தேதியில் சம்பளம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், சுந்தரம். "கடன் வாங்கிப் படம் எடுக்காதவர்" என்ற புகழும் அவருக்கு உண்டு. டி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகத்தை கவனித்து வந்த ராமசுந்தரம் 23_2_1993_ல் மரணம் அடைந்தார்.

அவர் மறைவுக்குப் பிறகு, அவர் மனைவி கலைவாணி ராமசுந்தரம், கம்பெனியில் கணவருக்கு இருந்த நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று ஒழுங்குபடுத்தினார். கம்பெனியின் வருவாயை பெருக்கும் வகையில், மாடர்ன் தியேட்டர்ஸ் ஒத்திகை மண்டபம் இருந்த இடத்தில் நவீன வசதிகளுடன் "டி.ஆர்.எஸ். திருமண மண்டபம்" கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் திறப்பு விழா 1_12_1995 அன்று நடந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்த இடத்தில் இப்போது "சுந்தர் அப்பார்மெண்ட்" என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ நுழைவு வாயில் மட்டும் இன்னமும் ஞாபகச் சின்னமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment