Pages

Friday, November 27, 2009

திருப்பதியில் தீவரவாதிகள் கைது ?

இந்தியாவில் அதிக பக்தர்கள் திரளும் கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முதல் இடத்தில் உள்ளது. தினமும் திருப்பதிக்கு வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விழா நடைபெறும் விசேஷ நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும்.

இந்தியாவில் முக்கிய நிலைகளில் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வழிபாட்டு தலங்களையும் குறி வைத்து இருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு உளவுத்துறை கண்டுபிடித்து எச்சரித்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலை தகர்க்க அவர்கள் திட்டமிட்டு இருப்பது உறுதியாக தெரிய வந்தது.

இதையடுத்து திருப்பதி கோவிலிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு பாதுகாப்பு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்தனர். பக்தர்களை ஊடுருவி சோதிக்கும் ஸ்கேனிங் கருவிகளும், ரகசிய கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டன.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் உடனடி பதிலடி கொடுப்பதற்காக திருப்பதியில் நிரந்தரமாக தனி அதிரடிப்படை 24 மணி நேர தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பதி கோவிலில் நாசவேலை செய்வதற்காக 4 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்தது. இதன் தொடர்ச்சியாக பெங்களூர் போலீசார் சில தகவல்களை ஆந்திரா போலீசாருக்கு தெரிவித்து உஷார் படுத்தினார்கள்.

அதன் பேரில் ஆந்திராவை சேர்ந்த தீவிரவாதிகள் எதிர்ப்புப்படை போலீசார் நேற்றிரவு திருப்பதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். திருப்பதி மங்கலம் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜை முற்றுகையிட்டு சோதனை போட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படி தங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்கி இருந்த அறையில் தீவிர சோதனை போட்டு ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

பிடிபட்ட 4 பேரிடம் முதல் கட்ட விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. அவர்களில் 2 பேர் பெயர் ஜாகீர், இப்ராகிம். மற்ற 2 பேர் பெயரை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளான இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தேவையான தகவல்களை திரட்டி கொடுக்கும் உளவாளி களாக செயல்பட்டு வந்தது தெரிந்தது. திருப்பதி, திருமலை, காளஹஸ்தி நகர வரை படங்கள், முக்கிய இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பூஜை நடக்கும் நேரங்கள் ஆகிய குறிப்புகளை அவர்கள் மிக விரிவாக எழுதி வைத்திருந்தனர்.

திருப்பதியில் உள்ள லாட்ஜூகளில் இவர்கள் மாறி, மாறி தங்கி இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர்கள் திருப்பதியில் தங்கி இருந்து தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் தகவல்களை திரட்டி உள்ளனர். திருப்பதி, திருமலை கோவில் பகுதிக்கு அடிக்கடி சென்று நோட்ட மிட்டுள்ளனர்.

பாதுகாப்பு எந்த சமயத்தில் குறைவாக இருக்கும்? எந் தெந்த கட்டிடங்களில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தலாம்? போன்ற குறிப்புகளை அவர்கள் வரை படங்களில் எழுதி வைத்து இருப்பதன் மூலம் மிகப்பெரிய நாசவேலைக்கு அவர்கள் திட்டமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணையில் திருப்பதி கோவில், காளஹஸ்தி கோவில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள கல்கி பகவான் ஆலயம் ஆகிய மூன்றும் தீவிரவாதிகள் சதி திட்டத்தில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் தாக்குதல் நடத்தி 200 பேரை கொன்று குவித்தது போல திருப்பதி நகரில் மிகப் பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டி இருந்தது தெரிய வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உளவு வேலையை தொடங்கிய சிறிது நாட்களிலேயே போலீசாரிடம் பிடிபட்டு விட்டனர். இதனால் மிகப் பெரிய நாசவேலை முறியடிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட 4 தீவிரவாதிகளும் நேற்று இரவோடு இரவாக திருப்பதியில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ரகசிய இடத்தில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து திருப்பதி கோவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் எந்த சிறு அசம்பாவித செயலுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது என்பதில் மத்திய உள்துறை தீவிரமாக உள்ளது. இதற்காக திருப்பதி முழுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க ஆந்திர மாநில அரசுக்கு உள்துறை அறிவித்துள்ளது.

திருப்பதி கோவில் அருகில் மிகப் பெரிய கட்டிடங்கள் இருந்தால் அதில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்து கொண்டு, பக்தர்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பாக அமைந்து விடும். எனவே திருப்பதி கோவில் அருகில் 100 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டிடமும் கட்ட கூடாது என்று உள்துறை உத்தர விட்டுள்ளது.

இதை ஏற்று கோவில் அருகே புதிய கட்டிட பணிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் அருகில் மகாமணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டிருந்தது. அந்த மண்டப கட்டுமான பணிகளை கைவிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment