எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது. சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.
பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.
கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.
கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.
நாடோடி மன்னன் கதை எவ்வாறு திருப்பங்களோடும், விறுவிறுப்பான சம்பவங்களோடும் உருவாக்கப்பட்டதோ, அதுபோல் "ஆயிரத்தில் ஒருவன்" கதையும் நவரசங்களுடன் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டது.
ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து மணிமாறன் என்ற இளைஞன் நடத்தும் போராட்டமே கதையின் மையக்கரு. கடல், கப்பல், அடிமைகள் என்று, மேல்நாட்டுப் படங்களைப் போன்ற பிரமாண்டமான பின்னணியில் கதை உருவாகியது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார்.
கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்தனர். பந்துலு டைரக்ட் செய்தார். படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை, ஏராளமான பொருட்செலவில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.
9_7_1965_ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது.
கருத்தாழம் மிக்க இனிய பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கண்ணதாசன் எழுதிய அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்", "நாணமோ", "ஓடும் மேகங்களே" ஆகிய பாடல்களும், வாலி இயற்றிய "பருவம் எனது பாடல்", "உன்னை நான் சந்தித்தேன்", "ஆடாமல் ஆடுகிறேன்", "ஏன் என்ற கேள்வி" ஆகிய பாடல்களும் திக்கெட்டும் எதிரொலித்தன.
பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார். 1965_ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.
"கலங்கரை விளக்கம்" ஜி.என்.வேலுமணி தயாரித்த படம். வசனத்தை சொர்ணம் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். "காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்" என்ற புகழ் பெற்ற வாலியின் பாடல் இடம் பெற்ற படம் இது.
"கன்னித்தாய்" _ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். இதற்கு வசனம் எழுதியவர் ஆர்.கே.சண்முகம். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம.ëஏ.திருமுகம் டைரக்ட் செய்தார். பத்மா பிலிம்ஸ் தயாரித்த படம் "தாழம்பூ". இதில் எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார். எஸ்.ராமதாஸ் டைரக்ட் செய்தார்.
மலையாள எழுத்தாளர் கொட்டாரக்கரா எழுதிய கதை. "சஸ்பென்ஸ்" நிறைந்த படம். "ஆசை முகம்", மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எல்.மோகன்ராம் தயாரித்த படம். எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.
தொடக்கத்தில், துறைïர் மூர்த்தி வசனம் எழுதினார். எம்.ஜி.ஆருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். எனவே, ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தார். பி.புல்லையா டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அத்துடன் எம்.ஜி.ஆர். போல முகத்தை மாற்றிக்கொண்டு வில்லன் குழப்பங்கள் செய்வான். எனவே, எம்.ஜி.ஆர். மூன்று வேடங்களில் தோன்றினார்.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment