"நீலகிரியில் விதிமீறல்கள் நடந்துள்ள தனியார் ரிசார்ட்டுகள் அகற்றப்படும்' என, தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கூறினார். நீலகிரியில் கனமழைக்கு மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலுள்ள குரும்பாடி என்ற இடத்தில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் சேதமடைந்தது. காவலாளி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இந்த ரிசார்ட் நீரோடையை மறித்தும், வன நிலங்களை ஆக்கிரமித்தும் பல விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக தினமலர் நாளிதழில் சுட்டிக் காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ், ரிசார்ட் அமைந்துள்ள இடத்தை நேற்று ஆய்வு செய்தார். கதர் வாரிய அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் ஆனந்த் பாட்டீல் உட்பட பலர் உடனிருந்தனர்.
ரிசார்ட் உரிமையாளர்கள், தங்களிடம் உள்ள கட்டட வரைபடத்தை காண்பித்தனர். சுற்றுலா பயணிகளை கவர, அவர்கள் தயாரித்துள்ள பிரத்யேக விளம்பர புத்தகத்தையும் காண்பித்து, இயற்கை நீரோடை மறிக்கப்படவில்லை; வனத்துறை நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை என, விளக்கம் அளித்தனர். இடைமறித்த அமைச்சர் கூறுகையில், ""சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்த புத்தகத்தை அச்சடித்துள்ளீர்கள்; நீரோடையை மறித்து நீச்சல் குளம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார். தொடர்ந்து அரை மணி நேரம் அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின், அமைச்சர் செல்வராஜ் கூறியதாவது:
கடந்த 2001ம் ஆண்டு பட்டா நிலத்தில் இந்த ரிசார்ட் அமைக்கப்பட்டு இருந்தாலும், இயற்கை நீரோடையை மறித்து நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது; பல விதிமீறல்கள் நடந்துள்ளன. ரிசார்ட் அமைப்பதற்காக, வனத் துறையிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை. வனத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்படவில்லை; வனத்துக்குள் ஓடும் ஓடை மற்றும் ஓடை புறம்போக்கு நிலங்கள் வனத்துறைக்கு சொந்தமானவை அல்ல; அவை, வருவாய்த் துறைக்கு சொந்தமானவை. இந்த ரிசார்ட் மட்டுமன்றி, நீலகிரி மாவட்டத்தில் வனங்களில் உள்ள, அனைத்து ரிசார்ட்களையும் ஆய்வு செய்ய, டி.ஆர்.ஓ., தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மீண்டும் 15 நாள் கழித்து நீலகிரிக்கு வரவுள்ளேன். வனத்துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள் நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்தால், அவை இடித்து அகற்றப்படும். அதற்குள் இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் தயாரிக்கும்; அதுவரை இந்த ரிசார்ட் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் செல்வராஜ் கூறினார்.
விதிமீறலுக்கு யார் உடந்தை?: ரிசார்ட் அமைந்துள்ள இடத்தில் உள்ள ஓடை, ஓடை புறம்போக்கு நிலங்கள் வருவாய்த் துறைக்கு சொந்தமானது என்ற நிலையில், "வருவாய்த் துறை நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அருகேயுள்ள பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுப்பதாக கூறி ரிசார்ட் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பழங்குடியின மக்களின் பொருளாதார நிலை உயரவில்லை; அவர்கள் எவ்வித முன்னேற்றமும் பெறாமல் உள்ளனர். இதுகுறித்து தங்கள் நடவடிக்கை என்ன?' என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் செல்வராஜ், "வனத்துறை சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து மட்டும் பேசுங்கள்' என, ஒரே வரியில் முடித்து கொண்டார். ( Resort Model )
Thursday, November 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment