ஏவி.எம். தயாரிப்பில் எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம், ஏவி.எம்.ஸ்டூடியோவின் முதல் கலர்ப்படம் என்ற பெருமைக்கு உரியது "அன்பே வா." எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்தார். நடிகர் அசோகன், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். ஏவி.எம். சரவணனுக்கும் நண்பர்.
"ஏவி.எம். பெரிய படக்கம்பெனி. அதில் நீங்கள் நடிக்க வேண்டும்" என்று எம்.ஜி.ஆரிடம் அசோகன் அடிக்கடி கூறுவார். அதேபோல் சரவணனிடம், "எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய நடிகர்! அவரை வைத்து நீங்கள் படம் பண்ண வேண்டாமா? என்று கேட்பார்.
அசோகன் முயற்சியால் "அன்பே வா" படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். மொத்தம் 72 நாள் "கால்ஷீட்" கொடுத்தார். "அன்பே வா" படத்திற்கான கதையை ஏ.சி.திருலோகசந்தர் எழுதினார். கதை, முழுக்க முழுக்க எம்.ஜி. ஆர். பாணியில் இருந்து மாறுபட்டது.
எஸ்டேட் ஒன்றின் சொந்தக்காரரான எம்.ஜி.ஆர், தான் யார் என்பதைக் காட்டிக்கொள்ளாமல் எஸ்டேட் பங்களாவில் தங்குகிறார். அங்கு சரோஜாதேவியை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்படும் காதலையும், ஊடலையும் வைத்து, கதை சுவையாகப் பின்னப்பட்டிருந்தது. அரசியல் பிரசாரம் அறவே இல்லை.
இதற்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதினார். இசை எம்.எஸ்.விசுவ நாதன். பாடல்கள் வாலி. டைரக்ஷன் திருலோகசந்தர். சிம்லா, ஊட்டி முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
1966 பொங்கல் தினத்தன்று வெளியான "அன்பே வா" மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது.
நடிப்பு, இசை, படப்பிடிப்பு எல்லாமே தரமாக அமைந்திருந்தன.
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்", "புதிய வானம் புதிய பூமி", "நான் பார்த்ததிலே அவள் ஒருத்தி யைத்தான்", "அன்பே வா", "லவ் பேர்ட்ஸ்" முதலிய பாடல்கள் ஹிட்டாயின.
எம்.ஜி.ஆர். அதுவரை நடித்த மிகப்பெரிய வெற்றிப்படங்களில் "அன்பே வா"வும் ஒன்று. இந்தப் படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ.3 லட்சம். சரோஜா தேவிக்கு ரூ.90 ஆயிரம்.
"அன்பே வா" படத்தில் சிறந்த காட்சி எது? என்று ரசிகர்களுக்குப் போட்டியும் நடந்தது. "அன்பே வா" படத்துக்குப்பின் "மேஜர் சந்திரகாந்த்", "அதே கண்கள்", "ராமு" முதலிய படங்களை ஏவி.எம். தயாரித்தது.
Saturday, November 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment