Pages

Saturday, November 28, 2009

மறக்க முடியுமா 2






"பெற்றால்தான் பிள்ளையா" படத்தொடர்பான தகராறில் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். அவரை சுட்டு விட்டு, தன்னைத்தானே சுட்டுக் கொண்ட எம்.ஆர்.ராதா கைது செய்யப்பட்டார்.

1966_ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"அன்பே வா" ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

ஆகஸ்ட் 18_ந்தேதியன்று "முகராசி"யும், செப்டம்பர் 16_ந்தேதி "தனிப்பிறவி"யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை சின்னப்ப தேவர் வெளியிட்டு, சாதனை படைத்தார். "முகராசி"க்கு ஆர்.கே.சண்முகம், "தனிப் பிறவி"க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர்.

முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார். "நாடோடி", பி.ஆர்.பந்துலு தயாரித்த படம். இதில் எம்.ஜி. ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய "நான் ஆணையிட்டால்..." பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். படத்தை சாணக்யா டைரக்ட் செய்தார்.

எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் "பறக்கும் பாவை". இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார்.

ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த "பெற்றால்தான் பிள்ளையா" 6_12_1966_ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த படம். கதை_ வசனத்தை ஆரூர்தாஸ் எழுத, இசை அமைத்தது எம். எஸ்.விஸ்வநாதன். டைரக்ஷன்: கிருஷ்ணன் பஞ்சு.

"பெற்றால்தான் பிள்ளையா" படத்தில், எம்.ஜி.ஆர். ஓர் அனாதை; குடிசையில் வசிப்பவர். அசோகன் வில்லன். அவர் சவுகார் ஜானகியை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி, குழந்தை பிறந்ததும் கைவிட்டு விடுவார். கேட்பாரற்று கிடந்த குழந்தையை எம்.ஜி.ஆர். எடுத்து வளர்ப்பார்.

எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எதிர் வீட்டில், எம்.ஆர்.ராதா வசிப்பார். அவர் ஒரு வித்தைக்காரர். அவருடைய தங்கை சரோஜாதேவி. எம்.ஜி.ஆருக்கும் சரோஜாதேவிக்கும் காதல் ஏற்படுகிறது. கே.ஏ.தங்கவேலு, பொம்மை வியாபாரி. தன் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி, இவரிடம் சவுகார் ஜானகி கேட்டுக்கொள்வார். தங்கவேலுவும், போலீஸ்காரர் டி.எஸ்.பாலையாவும் சிரமப்பட்டுத் தேடி குழந்தையைக் கண்டு பிடித்து விடுவார்கள். ஆனால், குழந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட எம்.ஜி.ஆர்., அதைக் கொடுக்க மறுத்துவிடுவார்.

இதற்கிடையே அசோகன் ஒரு விபத்தில் கால் இழந்து, மனம் திருந்தி, சவுகார் ஜானகியிடம் போய்ச்சேருவார். குழந்தை யாருக்குச் சொந்தம் என்ற விஷயம், கோர்ட்டுக்கு போகும். "குழந்தை, பெற்றோருக்குத்தான் சொந்தம்" என்று கோர்ட்டு தீர்ப்பு கூறும்.

குழந்தையை, பெற்றோரிடம் எம்.ஜி. ஆர். கொடுக்கும்போது துயரம் மிகுதியால் கண்ணீர் வடிப்பார். குழந்தையைப் பெற்றுக்கொண்டு சவுகார் ஜானகி புறப்படும்போது, குழந்தை "அப்பா!" என்றபடி, எம்.ஜி.ஆரை நோக்கி தாவும். _ இதுதான் "பெற்றால்தான் பிள்ளையா" படத்தின் கதை. இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

12_1_1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான "தாய்க்கு தலைமகன்" ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகா தேவன். டைரக்ஷன்: எம்.ஏ. திருமுகம்.

அன்று மாலை, "எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்" என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

No comments:

Post a Comment