Pages

Saturday, November 28, 2009

தமிழகத்தில் ஊரும் வேர்கள் ?

"வேர்கள் அழியவில்லை; அழிந்தது மரங்கள் தான். எனவே, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் வெகு விரைவில் வேறு வடிவில் வெளி வரும்' என, புலிகள் இயக்க ஆதரவாளர்கள், தமிழகத்தில் புது கோஷம் எழுப்பி வருகின்றனர்.


இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் ஓய்ந்து, குண்டுச் சத்தம் நின்று போயுள்ளது. போர் ஓய்ந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், இன்னும் முகாம்களில் அடைக்கப் பட்டுள்ள தமிழர்கள், சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, புது குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்ட பின், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் எழுந்த அழுத்தம் காரணமாக, முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள், படிப்படியாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்து வருகிறது.


இந்நிலையில், உலகின் பல பகுதிகளிலும் உள்ள இலங்கை தமிழர்களாலும், அவர்களின் ஆதரவாளர்களாலும் புலித் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், மாவீரர்கள் தினம் ஆகியவை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளை தமிழகத்தில் பல இடங்களிலும் பட்டவர்த்தனமாகவும், ரகசியமாகவும் இலங்கை தமிழ் ஆதரவாளர்கள், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் அனுசரித்தனர். முதல்வர் கருணாநிதியின் "மவுனவலி' அறிக்கையை தொடர்ந்து கிடைத்த விமர்சனங்களின் விளைவாக, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன், "மாவீரர்கள் தினத்தை' அனுசரிக்க, தமிழக காவல் துறை பச்சைக் கொடி காட்டியது. காவல்துறையின் அனுமதியோடு கூடிய புலி ஆதரவாளர் கூட்டங்களில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ராஜிவ் கொலைக்கு பின் புலிகள் இயக்கத்தை பெரும்பான்மை தமிழக மக்கள் புறக்கணித்து விட்ட நிலையில், பிரபாகரன் இறப்பு செய்திக்கு பிறகு அந்த அணுகுமுறையில் மாற்றம் வந்திருப்பதாக கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபாகரன் மரணத்தை இதுவரையில் ஏற்க தயங்கிய தமிழ் இன ஆதரவாளர்கள் பலரும் தற்போது அவரது மரணத்தை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளனர். அத்துடன் பிரபாகரனின் இழப்பு, இலங்கை தமிழ் போராட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு என்றும் தமிழ் இயக்கங்கள் ஏற்று கொள்கின்றன. குறிப்பாக இந்த கூட்டங்களில், "இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்திற்கான வேர்கள் இன்னும் அழியவில்லை; அது மண்ணோடு மண்ணாக கலந்துள்ளது; அழிக்கப் பட்டது வெறும் மரங்கள் மட்டும் தான்; தமிழ் ஈழ விடுதலை போராட்டம் வேறு வடிவில் வெளி வரும்' என்ற கருத்து இலங்கை தமிழ் அனுதாபிகள் மத்தியில் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது. மேலும் "இனப் போராட்டம் மறுபடியும் தொடர வேண்டும். இதற்காக நாம் அனைவரும் தயாராக வேண்டும்; மற்றவர்களையும் தயார்படுத்த வேண்டும்' என, புலிகள் இயக்க ஆதரவாளர்கள் பல இடங்களிலும் ஆவேசமாக பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. இது, உளவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment