நெல்லைப் பல்கலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள "டிவி' ஸ்டுடியோவை, "தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி துவக்கிவைத்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், "தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தனது சொந்த நிதி 65 லட்சம் ரூபாயில், தொடர்பியல் துறைக்கான கட்டடத்தை கட்டித்தந்துள்ளார். 2007ல் திறந்துவைக்கப்பட்ட இந்த கட்டடத்தில், தற்போது பல்கலை மற்றும் யு.ஜி.சி., நிதி 30 லட்சம் ரூபாயில், "இரா.கிருஷ்ணமூர்த்தி ஸ்டுடியோ காம்ப்ளக்ஸ்'
எனப்படும், புதிய ஒலி, ஒளிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி துவக்கிவைத்தார். ரிக்கார்டிங் அரங்கினை பல்கலை துணைவேந்தர் ஆர்.டி.சபாபதிமோகன் திறந்து வைத்தார். தொடர்பியல் துறை தலைவர் கோவிந்தராஜு வரவேற்றார். பல்கலை பதிவாளர் பேரா.மாணிக்கம் வாழ்த்திப் பேசினார்.துணைவேந்தர் சபாபதிமோகன் பேசியதாவது: நெல்லை பல்கலைக்கு, "தினமலர்' ஆசிரியர் இத்தகைய கட்டடத்தை தந்த நேரம், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த கட்டடத்தில் உள்ள வசதிகளை அடிப்படையாகக் கொண்டு, இதுவரை வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் துவக்கப்படாத, மல்டிமீடியா அனிமேஷன் படிப்பு இங்கு துவக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில், கல்வி மேம்பாட்டிற்காக ஐந்து இடங்களில் "ஞான வாணி எப்.எம்., ரேடியோ' ஸ்டேஷன்கள் துவங்கப்படுகின்றன. அதில் ஒன்றை, இந்த கட்டடத்தில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வரும் 19ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கிறார். சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில் வர்ணிக்கப்பட்ட 91 பூக்களைப்போல, தினம் தினம் நம் இல்லம் வருகிறது "தினமலர்'. இந்த கட்டடத்தில் சிறந்த ஒலி, ஒளிக் கூடம் உள்ளது. இத்தகைய வசதிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.
பதிவாளர் மாணிக்கம் பேசுகையில், ""இந்தியாவில் மீடியா துறையின் வளர்ச்சி, ஐ.டி., துறையின் வளர்ச்சியைப் போல அபரிமிதமாக உள்ளது. தமிழகத்தில், மீடியா துறையில் மற்ற எந்த பல்கலைக் கழகத்திற்கும் கிடைக்காத வாய்ப்புகள், நமது பல்கலையின் தொடர்பியல் துறைக்கு கிடைத்துள்ளது,'' என்றார்.
தொடர்பியல் துறைத் தலைவர் கோவிந்தராஜு பேசுகையில், ""இந்தியாவில் ஐந்து இடங்களில் அமையும், "ஞான வாணி' ரேடியோ நமது பல்கலையின் தொடர்பியல்துறை சார்பில் இயங்குவது, நமக்கு கிடைத்த வாய்ப்பாகும்,'' என்றார். தேர்வாணையர் துரைராஜ், தொலைநெறிக் கல்வி இயக்குனர் மணிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment