கல்விக்கடன் பெறும் மாணவர்களிடம் காப்பீடு செய்தால் தான் கடன் தரப்படும் என, வங்கிகள் நிர்பந்தம் செய்வதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வங்கிகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி கல்விக்கடன் வழங்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் கடன் வழங்கலாம். வெளி நாடுகளில் படிப்பவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கலாம். இதில், 4 லட்சம் வரை எந்தவித பிணையமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். 4 லட்சம் முதல் 7.5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும். அதற்கு மேல் கடன் பெறும் போது, சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். கல்விக்கடன் வழங்க இதை தவிர வேறு எதையும் நிபந்தனையாக விதிக்கக் கூடாது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது நிபந்தனை: வங்கிகள் அனைத்தும் தற்போது ஆயுள் காப்பீடு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து காப்பீடு முகவர்களாக உள்ளன. கல்விக் கடன் கேட்டு வரும் மாணவர்களிடம், "கடன் தொகை தயாராக உள்ளது. ஆனால், எங்களது வங்கியில் காப்பீடுக்கு 12 ஆயிரம் ரூபாய் கட்டிய பிறகு கடன் தொகையை வாங்கி செல்லுங்கள்" என, நிபந்தனை விதிக்கின்றனர். ஒவ்வொரு வங்கியும் ஒரு குறிப்பிட்ட தொகை காப்பீட்டுக்காக கட்டிய பிறகே, கல்விக்கடன் வழங்குகின்றன.
மாணவர்கள் அதிர்ச்சி: கல்விக் கட்டணங்களை கட்ட முடியாமல் உள்ள நடுத்தர, ஏழை மாணவர்களே வங்கிகளில் கல்விக் கடன் பெற விண்ணப்பிக்கின்றனர். இவர்களது வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் தான் நிபந்தனையின்றி கல்வி கடன் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், முதலில் கடன் வாங்கி கல்லூரிகளுக்கு கட்டணம் கட்டி விடுகின்றனர். பின்னர் வங்கிகள், கல்லூரி பெயரில் வழங்கும், "செக்'குகளை கொடுத்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பணமாக பெற்று, வட்டி கடனை கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். கண்டிப்பாக காப்பீடு செய்யவேண்டும் என வங்கிகள் தற்போது நிபந்தனை விதிப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வங்கியில் கல்விக்கடன் கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தாலும் இது போன்ற நிபந்தனைகள் விதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கும்.
முன்னோடி வங்கி மேலாளர் சுகுமார் கூறுகையில், ""ஒரு சில வங்கிகளில் இது போன்று திட்டங்கள் இருக்கலாம். அனைத்து வங்கிகளிலும் காப்பீடு செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதில்லை. எந்த வங்கி நிபந்தனை விதிக்கிறது என்று எனது கவனத்திற்கு தெரிவித்தால், அந்த வங்கியிடம் நிர்பந்திக்கக் கூடாது என தெரிவிக்கிறேன்,'' என்கிறார்.
Wednesday, November 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment