கடந்த வாரம் ஒரு கிலோ 36 ரூபாய்க்கு விற்ற பாமாயில் 40 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரூ.46-க்கு விற்ற சன்பிளவர் சூரியகாந்தி எண்ணை ரூ.50-க்கும், ரூ.65-க்கு விற்ற கடலை எண்ணை ரூ.70 யாகவும் விற்கப்படுகிறது. 15 கிலோ எண்ணை டின் ரூ.60 உயர்ந்துள்ளது.
பாமாயில் மலேசியாவில் இருந்தும் சன்பிளவர் சூரிய காந்தி எண்ணை தென் அமெரிக்காவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. அங்கும் விலை ஏறியுள்ளதால் இவற்றின் விலை கூடியுள்ளது. அதே நேரத்தில் நல்லெண்ணை, தேங்காய் எண்ணை மற்றும் டால்டாவின் விலை உயரவில்லை. தொடர்ந்து பழைய விலையே நீடிக்கிறது.
பூண்டு கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது. பெரிய பூண்டு (முதல் ரகம்) ஒரு கிலோ ரூ.90 ஆகவும், 2-வது ரகம் ரூ.70 ஆகவும் உள்ளது. பொதுவாக தமிழ்நாட்டுக்கு குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்துதான் பூண்டு வரத்து இருக்கும்.
இந்த ஆண்டு பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பூண்டு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
அரிசி விலை ஒரு கிலோவுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது. அதிசய பொன்னி அரிசி கிலோ ரூ.22, டீலக்ஸ் பொன்னி ரூ.24, பாபட்லா பொன்னி ரூ.32, வெள்ளை பொன்னி ரூ.38, இட்லி அரிசி ரூ.22, பொன்னி பச்சரிசி புதுசு ரூ.30, பொன்னி பச்சரிசி பழையது ரூ.32 ஆகவும் விற்கிறது.
25 கிலோ அரிசி மூட்டைக்கு ரூ.50 அதிகரித்துள்ளது. அதிசய பொன்னி மூட்டை ரூ.550, டீலக்ஸ் பொன்னி ரூ.700, பாபட்லா பொன்னி ரூ.800, வெள்ளை பொன்னி ரூ.950 ஆகவும் உள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்துதான் தமிழகத்துக்கு அரிசி வரும். ஆனால் அங்கு பலத்த மழை பெய்துள்ளதால் இங்கிருந்துதான் அங்கு நெல் செல்கிறது. மேலும் தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் 15-ந்தேதியில் இருந்துதான் நெல் அறுவடை தொடங்கும். இதனால்தான் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தனியா விலை கடந்த வாரம் கிலோ ரூ.70-க்கு விற்றது. இந்த வாரம் ரூ.60-க்கு விற்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தமிழ் நாட்டில் விருதுநகர், சங்கரன்கோவில், சாத்தூர் ஆகிய பகுதிகளிலும் அமோக விளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே தனியா விலை சரிந்துள்ளது.
வெல்லம் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. வேலூர் வெல்லம் ஒரு கிலோ ரூ.35 ஆகவும், சேலம் வெல்லம் ரூ.30 ஆகவும் விற்கிறது. புளி விலையும் கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. முதல் ரக புளி ஒரு கிலோ ரூ.55 ஆகவும், 2-ம் ரகம் ரூ.45 ஆகவும் உள்ளது.
பருப்பு வகைகளின் விலையிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் ரக துவரம் பருப்பு கிலோ ரூ.96-க்கு விற்றது. இந்த வாரம் ரூ.88 ஆக உள்ளது. 2-வது ரகம் ரூ.85 ஆகவும், பர்மா துவரம் பருப்பு ரூ.75 ஆகவும், அமெரிக்கன் டாக்கி துவரம் பருப்பு ரூ.60 ஆகவும் விற்கப்படுகிறது.
கென்யா, மொசாம்பி, தான்சானியா, ஆப்பிரிக்கா, பர்மா போன்ற நாடுகளில் இருந்தும் துவரம் பருப்பு இறக்குமதி ஆகிறது. கர்நாடகா, மராட்டியம் மாநிலங்களில் துவரை விளைச்சல் நன்றாக இருக்கிறது. மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்புகளை வெளிக்கொண்டு வந்ததாலும் விலை குறைந்துள்ளது. ஜனவரி மாதத்துக்கு பிறகு துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ.500 குறைய வாய்ப்பு உள்ளது.
உளுத்தம் பருப்பு கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.83-க்கு விற்றது. தற்போது ரூ.78 ஆக விற்கப்படுகிறது. பர்மா பருப்பு ரூ.70 ஆக உள்ளது. இதே போல பாசி பருப்பு கிலோவுக்கு ரூ.5 சரிந்துள்ளது.

முதல் ரக பருப்பு ஒரு கிலோ ரூ.85 ஆகவும், 2-வது ரகம் ரூ.80 ஆகவும் விற்கப் படுகிறது. டிசம்பர், ஜன வரி மாதங்களில் பருப்பு வரத்து அதிகரிக்கும். எனவே ஜனவரி மாதம் முதல் பாசி பருப்பு விலை மூட்டைக்கு ரூ.300 குறைய வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. 100 கிலோ மூட்டை ரூ.3200ல் இருந்து ரூ.3280 ஆகவும், ஒரு கிலோ ரூ.33ல் இருந்து ரூ.35 ஆகவும் உள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு அனைத்து மளிகை வியா பாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார்
No comments:
Post a Comment