Pages

Wednesday, November 25, 2009

வாஜ்பாய் எஸ்கேப் ?

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாபர் மசூதி இடிப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி உள்பட 68 பேருக்கு பங்கு உள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

4 தொகுப்புகளில் ஆயிரம் பக்கங்களில் லிபரான் கமிஷன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். விசுவ இந்து பரிஷத்தலைவர்களின் பெயர்கள் இதில் அதிக அளவில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கை மீதான 13 பக்க நடவடிக்கை அறிக்கையும் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைகள் மீது வரும் 1-ந்தேதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. லிபரான் கமிஷன் அறிக்கை தகவல்கள் பத்திரிகைக்கு கசிந்த விவகாரத்தை பெரிது படுத்த பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே லிபரான் கமிஷன் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளபடி பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 68 பேர் மீதும் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த மத்திய அரசு தீவிரமாகி உள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. தலைவர்கள் மீதான வழக்கு விசாரணை பிடி இறுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. 3 வழக்கு களை பதிவு செய்துள்ளது. பாபர் மசூதியை இடித்த அடையாளம் தெரியாத கரசேவகர்கள் மீது முதல் வழக்கு போடப்பட்டுள்ளது.

சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்த 47 பேர் மீது 2-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, கிரிராஜ் கிஷோர், டால்மியா, வி.பி. சிங்கால், வினய் கத்யார், ஆகியோரது பெயர்கள் 3-வது வழக்கில் உள்ளது.

பாபர்மசூதி இடிப்பு வழக்குகள் விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்படும் பட்சத்தில் அது அரசியல் புயலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லி அரசியல் நிலவரம் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே லிபரான் கமிஷன் அறிக்கையில் வாஜ்பாய் பெயர் இடம் பெற்றுள் ளதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவருக்கு இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாது என்று கூறுகிறார்கள்.

எனவே லிபரான் கமிஷன் அறிக்கையில் இருந்து வாஜ்பாய் பெயரை அகற்ற உத்தரவிடக்கோரி கோர்ட்டை பா.ஜ.க. நாடும் என்று தெரிகிறது. இதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் உரிய பதிலடி நடவடிக்கை கொடுக்க தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய்க்கு தொடர்பு உண்டு என நான் குறிப்பிடவில்லை என்று லிபரான் கருத்து தெரிவித்துள்ளார். இதை ஏற்க மறுத்துள்ள கம்யூனிஸ்டு உள்ளிட்ட சில கட்சிகள் பா.ஜ.க. தலைவர்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment