Pages

Tuesday, November 3, 2009

சமச்சீர் கல்வி திட்டம் தள்ளி போகும் அபாயம்

பள்ளி பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கான விலையை நிர்ணயம் செய்வதில், அச்சகதாரர்களுக்கும், பாடநூல் கழகத்திற்கும் இடையே நீடித்து வந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. கடைசி முயற்சியாக, பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகள், நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தியதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து, "அரசுநிர்ணயிக்கும் குறைந்த விலைக்கு எங்களால் பாடப் புத்தகம் அச்சிட முடியாது' என்று, சங்க பொதுச் செயலர் பகத் சிங் அறிவித்துள்ளார். இந்த பிரச்னையால், பாடப் புத்தகம் தயாரிப்பு பணி முடங்கியுள்ளது.




ஜூன் மாதம் பள்ளி திறந்ததும், பாடப் புத்தகங்களை வினியோகிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசு துவக்க உள்ள முதல்வரின் கனவுத்திட்டமான சமச்சீர் கல்வித்திட்டமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் பாடநூல் கழக நிறுவனம், எட்டு கோடி பாடப் புத்தகங்களை அச்சிட்டு இலவசமாக பள்ளிகளுக்கு வழங்குகிறது. சிவகாசி, சென்னையில் உள்ள அச்சக நிறுவனங்கள், பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்குகின்றன. "டெண்டர்' விடப்பட்டு, அதில் குறைந்த தொகையை யார் குறிப்பிடுகின்றனரோ, அதே தொகைக்கு அனைத்து நிறுவனங்களும் அச்சடித்து தருவது, தொகையில் பிரச்னை என்றால், அச்சக உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, எல்லாரும் ஏற்கும் வகையில் ஒரு தொகையை நிர்ணயிப்பது போன்ற நடைமுறைகள் கடந்த காலங்களில் இருந்தன.




வரும் ஜூன் மாதத்தில் இருந்து, ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் கல்வி அமலுக்கு வருகிறது. இதனால், அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் சேர்த்து பாடப் புத்தகங்களை அச்சிட வேண்டிய நிலை பாடநூல் கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. மொத்தம், 12 கோடிக்கும் அதிகமான பாடப் புத்தகங்கள் அச்சிட வேண்டிய நிலையில், இதுவரை பாடப்புத்தக தயாரிப்பு பணிகள் துவங்கவில்லை. ஒருபுறம், சமச்சீர் கல்வி வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படவில்லை. அதை இறுதி செய்த பின், பாடத்திட்டம் எழுத வேண்டும். அதன் பிறகே, அவை அச்சிட தரப்படும். அச்சிடுவதற்கான முன்னேற்பாடுகளை பாடநூல் கழகம் துவக்கியது. கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி டெண்டர் முடிக்கப்பட்டும், இதுவரை புத்தகங்களுக்கான அச்சுக் கூலி போன்றவை நிர்ணயம் செய்வதில் முடிவு ஏற்படவில்லை.




அச்சக உரிமையாளர்கள், பாட நூல்களை அச்சிட 50 ரூபாய், "பைண்டிங்' பணிக்கு 35 ரூபாய், "ரேப்பர்' பணிக்கு 120 ரூபாய் கேட்டனர். இந்த கட்டணம் ஆயிரம் பாரங்களுக்கானது. ஒரு பாரத்தில் 16 பக்கங்கள் உண்டு. ஆனால், பாடநூல் கழக தரப்பில் முறையே 34 ரூபாய், 25 ரூபாய், 65 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த தொகை போதாது என்று, நான்கு மாதங்களுக்கும் மேலாக, அரசு தரப்பில் அச்சக உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பல சுற்று பேச்சு வார்த்தை நடந்த போதும், இதுவரை முடிவு எட்டவில்லை. இறுதி முயற்சியாக, தமிழ்நாடு பாடநூல் அச்சிடுவோர் சங்கத்தின் தலைவர் சுப்பையா, பொதுச்செயலர் பகத் சிங், பொருளாளர் பாரி, செயற்குழு உறுப்பினர் அசோகன் உள்ளிட்ட 10 பேர், நேற்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேசியும், உடன்பாடு ஏற்படவில்லை.




இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் பகத் சிங் கூறியதாவது: அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில், பாடநூல் கழக செயலர் கண்ணன், தலைவர் சத்தியகோபால் உடனிருந்தனர். பாட நூல்களை அச்சிட 43 ரூபாயும், பைண்டிங்கிற்கு 35 ரூபாயும், "ரேப்பர்' பணிகளுக்கு 120 ரூபாயும் கொடுத்தால், பாடநூல்களை அச்சிடத் தயார் என்றோம். அதற்கு, மறுத்து விட்டனர். நாங்கள் வெளியே வந்து விட்டோம். இவ்வாறு பகத் சிங் கூறினார்.




வெளிமாநில அச்சகங்களும் கை விரிக்கும் நிலை: பாடநூல் அச்சிடுவோர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய போது, "தற்போதுள்ள விலைக்கு நீங்கள் அச்சடித்து தராவிட்டால், வெளி மாநிலத்தில் கொடுத்து அச்சடித்து முடிப்போம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பாட நூல்கள் அச்சிட அதிக செலவாகும் என்பதால், பெரும்பாலும் சிவகாசியில் தான் அச்சடிக்கப்படுகிறது. இந்நிலையில், வெளி மாநில அச்சக உரிமையாளர்கள், தமிழக அரசின், "ஆர்டரை' ஏற்பது சந்தேகம். மேலும், வெளி மாநிலங்களுக்கு பாடநூல் காகிதங்களை ஏற்றிச் செல்லுதல், அச்சடிப்பு பணி முடிந்ததும், அவற்றை திரும்பவும் தமிழகத்திற்கு கொண்டு வருதல் போன்றவற்றுக்காக அதிக செலவு செய்யவும் நேரிடும். பாடப் புத்தகம், மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனே தீர்த்து வைக்க வேண்டுமென கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.




சமச்சீர் கல்வி திட்டம் தாமதமாகுமா? வரைவு பாடத்திட்டம் குறித்து, அக்., 31ம் தேதிக்குள் கருத்து கேட்டு, பாடத்திட்டம் இறுதி செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் முடிந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையிலும், வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப் பட்டதா என தெரியவில்லை. பாடத்திட்டத்தின் மீது கருத்து கூறுவதற்கான தேதி நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளதா என்றும் அறிவிக்கப்படவில்லை. இந்த தாமதத்தால், மற்ற பணிகளும் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பாடத்திட்டத்தை இறுதி செய்வதில் தாமதம், பாடநூல் அச்சிடுவோரிடம் முடிவு எடுக்க முடியாத நிலை ஆகியவற்றால், திட்டம் தள்ளிப் போகுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment