Pages

Sunday, November 1, 2009

உண்மையான சூப்பர் ஸ்டார்

மாயவரம் கிருஷ்ணமூர்த்தி - மாணிக்கத்தம்மாள் மகனாக 1910 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பிறந்தார் எம்.கே. தியாகராஜ பாகவதர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் திருச்சி பாலக்கரை எடத்தெருவுக்கு இடம் பெயர்ந்தது.

ஆறாம் வகுப்பு வரை படித்த பாகவதருக்கு இளம் பருவத்திலேயே இசையில் நாட்டம். கோயில்களில் நடைபெறும் பஜனையில் பாடிக் கொண்டிருந்த இவரை, ரசிக ரஞ்சன சபா நிறுவனர் எஸ்.ஜி. நடேச ஐயர் அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாசராக நடிக்க வைத்தார்.

இசை மீதான நாட்டம் அதிகரித்ததன் காரணமாக திருவையாறைச் சேர்ந்த ராமசாமி பத்தரிடம் முதன் முதலில் இசையைக் கற்றார். அதன் பின்னர், மதுரை பொன்னு அய்யங்கார், ஆலத்தூர் சகோதரர்களிடம் கர்நாடக இசை பயின்றார்.

பின்னர், எஸ்.டி. சுப்புலட்சுமியின் பவளக்கொடி நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார். எல்லா ஊர்களிலும் இந்த நாடகம் அரங்கேறியது.

அந்தக் காலத்தில் மிகப் பெரிய இயக்குநரான கே. சுப்பிரமணியன் இந்த நாடகத்தைத் திரைப்படமாக எடுத்தார். 1935 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் தன்னுடைய திரையுலக சகாப்தத்தைத் தொடங்கினார் பாகவதர்.

அதைத்தொடர்ந்து, 1937 ஆம் ஆண்டில் சிந்தாமணி, அம்பிகாபதி, 1938-ல் சத்தியசீலன், 1939-ல் திருநீலகண்டர், 1941-ல் அசோக்குமார், 1943-ல் சிவகவி, 1944-ல் ஹரிதாஸ் (சென்னையில் இரண்டரை ஆண்டுகள் ஓடிய இந்தப் படம் 3 தீபாவளியை கண்டது) என மொத்தம் 14 படங்களில் நடித்தார்.

இதில், பாடும் கலைஞர் மட்டுமல்ல, உருக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதையும் எடுத்துக் காட்டிய படம் திருநீலகண்டர்.

நல்ல சிவந்த நிறத் தோற்றமுடைய அவரது குரலை அந்தக் காலத்தில் "கோல்டன் வாய்ஸ்' என்பர். பெண்மையும், ஆண்மையும் கலந்த அவரது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது.

இதனால், திரையுலகின் முதல் "சூப்பர் ஸ்டாராக' அவர் வலம் வந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் சிகை அலங்காரம் போன்று அவர்களது ரசிகர்களும் செய்து கொள்வது போல, அந்தக் காலத்திலும் "பாகவதர் கிராப்' புகழ் பெற்றிருந்தது. இதே ஸ்டைலில் ஏராளமான ரசிகர்கள் முடி வளர்த்தனர்.

அவரது தலை முடி இயற்கையிலேயே கோதி விட்டபடி, பின்புறமாக இறங்கியிருக்கும். இந்த "பாகவதர் கிராப் ஸ்டைல்' 1935 ஆம் ஆண்டிலிருந்து 60 ஆம் ஆண்டு வரை நீடித்தது.

அதன் பிறகு, 1980-களில் அதே ஸ்டைல் "ஸ்டெப் கட்டிங்' என்ற பெயரில் ரசிகர்கள் வைத்திருந்தனர். 90-களில் இருந்த "பங்க்' ஸ்டைலும் ஏறத்தாழ "பாகவதர் கிராப்' போலத்தான்.

இதேபோல, அவர் அணிந்திருந்த "ஜிப்பா'வும் அந்தக் காலத்தில் பிரபலம். பாகவதர் ஜிப்பா என ரசிகர்கள் பெருமையாக அணிந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி மீது அவர் மிகுந்த பற்று வைத்திருந்தார். எனவே, 1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு "காந்தியை போல் ஒரு சாந்த சொரூபனை...', "கைமாறு செய்வதுண்டோ காந்திஜிக்கு...' என்ற இரு பாடல்களைப் பாடினார். இந்தப் பாடல்கள் கொண்ட இசைத் தட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பாகவதர் தமிழிசையில்தான் எப்போதும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார். ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் தமிழிசை இயக்கம் நடத்திய இசை நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு கொடுத்தார். தனது கச்சேரியில் தமிழ் பாடல்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் அவர்.

அவரது கடைசிப் படம் 1959 ஆம் ஆண்டில் வெளியான சிவகாமி. அந்தப் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, இறுதிக் கட்டத்தில் 1.11.1959 அன்று அவரது உயிர் பிரிந்தது. அதனால், அந்தப் படத்தின் இறுதியில் அவரது இறுதி ஊர்வலத்தைக் காண்பித்தனர்.

திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் வாழ்ந்த ஊரில் ஒரு சிலைகூட இல்லை. மத்திய பஸ் நிலையம் அருகிலுள்ள தியாகராஜ பாகவதர் மன்றம் என்றழைக்கப்படும் கலையரங்க வளாகத்திலேயே அவரது திருவுருவச் சிலை நிறுவலாம். இதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே தியாகராஜ பாகவதரின் ரசிகர்களின் எதிர்பார்பாம் .

No comments:

Post a Comment