
நள்ளிரவு 11 மணிக்கு, அவ்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவி, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சென்ற ஐந்து விசைப்படகுகளை சுற்றிவளைத்தனர். துப்பாக்கியுடன் படகுக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த வலை, தூண்டில், மிதவை போன்ற மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியபின் அவற்றை கடலுக்குள் வீசியுள்ளனர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் அனைத்தையும், கடலுக்குள் கொட்டினர்.
படகில் சென்ற 17 மீனவர்களையும் துப்பாக்கிமுனையில் எச்சரித்து அனுப்பினர். மீனவர்கள் 17 பேரும், வெறும் படகுகளுடன், நேற்று அதிகாலை கரை திரும்பினர். இதுகுறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சின்ன அடைக்கலம் கூறியதாவது:
கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 7ம் தேதி சென்ற மூன்று விசைப்படகுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், படகிலிருந்த நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை, மிதவை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தினர். ராஜா முகமது என்பவருடைய விசைப்படகும் பலத்த சேதமடைந்தது. நேற்று முன்தினம் (9ம் தேதி), கோட்டைப் பட்டினத்திலிருந்து சென்ற ஐந்து விசைப்படகுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்புடைய மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளன. இலங்கை கடற்படையினரின் இத்தகைய தொடர் தாக்குதல்களால் தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் தயங்கிவரும் நிலையில் மீன்பிடி தொழிலை தொடர்வதா, வேண்டாமா என்பது குறித்து, விசைப்படகு மீனவர் சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவை அவசரமாக கூட்டி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சின்ன அடைக்கலம் கூறினார்.
மீன்வளத்துறையினர் கூறுகையில், "விசைபடகுகள் மூலம், ஆழ்கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களினால் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உருவானால், இதுகுறித்து இந்திய கடற்படையினர், கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக மீனவர்களுக்கு "எஸ்.ஓ.எஸ்.,' என்ற தகவல் அனுப்பும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் கிராமங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 20 பேருக்கு இக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. "ஆபத்தை உணர்த்தும் விதமான இக்கருவிகளை மீனவர்கள் யாரும் கடலுக்குள் எடுத்துச்செல்வதில்லை' என்றனர்.
No comments:
Post a Comment