திருக்கோவிலூர் அருகே 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை மூன்றாண்டுகளில் 3 கி.மீ., தூரத்திற்கு காணாமல் போனது. திருக்கோவிலூர் அடுத்த அண்ராயநல்லூர் அரசு மணல் குவாரிக்கு திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி 150க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் ஏற்றி செல்கின்றனர். அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளால் 10 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்ட 3 கிலோ மீட்டர் தூர சாலை காணாமல் போய் விட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உலக வங்கி உதவியுடன் கடலூர் எம்.பி., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் படி 10 கோடி ரூபாய் மதிப்பில் நெமிலி கூட்டு ரோட்டில் இருந்து பல்லரிபாளையம் வரை 7 கி.மீ., தூரம் உயர் தொழில் நுட்பத்துடன் ரோடு போடப்பட்டது. பணிகள் முடிந்து முழுமையாக மூன்று ஆண்டுகள் கூட முடியவில்லை, நெமிலி கூட்டு ரோட்டில் இருந்து அணைக்கட்டு வரையிலான 3 கி.மீ., தூரத்திற்கு முற்றிலுமாக ரோடு இருக்கும் இடமே தெரியாமல் பள்ளமும் படுகுழியுமாக மாறிவிட்டது. கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் ரோடு சரியில்லாததால் ஆலைக்கு கரும்பை வெட்டி எடுத்துச் செல்ல முடியாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்றனர். இதனால் மணல் லாரியை சிறைபிடித்து சாலை மறியல் வரை சென்றனர். விழித்துக் கொண்ட நெடுஞ்சாலைத்துறை பள்ளத்திற்கு மண் அடித்தது. சமீபத்தில் பெய்த தொடர் மழையால் மண் கொட்டிய இடம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லவே முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.
திருவெண்ணைநல்லூரில் இருந்து திருக்கோவிலூர் வரும் பஸ்கள் அனைத்தும் சித்தலிங்க மடத்தில் இருந்து எடப்பாளையம் செல்கின்றன. அங்கிருந்து கடலூர் மெயின்ரோடு வழியாகவும், எல்ராம்பட்டு வழியாகவும் சுற்றிக் கொண்டு திருக்கோவிலூருக்கு வருகின்றன. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய அவலத்திற்கு யார் காரணம்? ரோடு போட்ட காண்ட்ராக்டரும், மேற்பார்வை செய்த அரசு அதிகாரிகளுமா? அளவுக்கு அதிகமாக மணல் ஏற்றிச் சென்ற லாரிகளா? இதில் யார் தவறு செய்திருந்தாலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment