Pages

Wednesday, November 11, 2009

சீனாவின் போர் மிரட்டல் ?

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திற்கு வருகை தந்திருப்பது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினையை இன்னும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது.
அருணாசலப் பிரதேசத்திற்கு உரிமை கொண்டாடி வரும் சீனா, தலாய் லாமாவின் இந்த வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் யோசனையின் பேரிலேயே தலாய் லாமா, சர்ச்சைக்குரிய அருணாசலப் பிரதேசத்திற்கு வருகை மேற்கொண்டிருப்பதாக சீனா கூறுகிறது.
இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. “அருணாசலப் பிரதேசத்திற்கு வருகையளிக்குமாறு நாங்கள் எதுவும் கூறவில்லை. அவர் சொந்தமாகவே அந்த வருகையை மேற்கொண்டுள்ளார். அவரது வருகை பற்றி இந்திய அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டது,” என்று இந்திய வெளியுறவு துணை அமைச்சர் ஷாஷி தாரூர் கூறினார்.
“இந்தியாவின் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் தலாய் லாமா சுதந்திரமாக பயணம் செல்லலாம்,” என்றும் ஷாஷி கூறினார்.
ஆனால் தலாய் லாமாவின் இந்த வருகை சீனா- இந்தியா இடையில் பிரச்சினையை அதிகரிக்கச் செய்யும் என்று ஆய்வாளர் ஒருவர் கூறிய கருத்து சீன அரசாங்க சார்புடைய பியூபிள்ஸ் டெய்லி நாளிதழின் இணையத்தளத்தில் வெளிவந்துள்ளது.
“இந்திய அரசு கொடுத்த நெருக்குதலின் காரணமாகவே தற்போதைய சிக்கலான சூழலில் தலாய் லாமா அருணாச்சலப் பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
இந்தப் பயணத்தால் இத்தனை ஆண்டுகளாக தனக்கு அடைக்கலம் தந்த இந்தியாவை தலாய் லாமா மகிழ்விக்கலாம்,” என்று ஹூ சிஷேங் என்ற ஆய்வாளார் குளோபல் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
தலாய் லாமாவின் பயணமும் அவருடைய நடவடிக்கைகளும் சீனாவுக்கு எதிரான உணர்வை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய நடவடிக்கை, 1962-ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரின்போது கற்ற பாடங்களை இந்தியா மறந்து விட்டதுபோல் தோன்றுகிறது என்றும் அந்த நாளிதழில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா இப்போதும் அதே தவறான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது என்றும் இதனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் அதிகரிக்கலாம் என்றும் ஆய்வாளர் ஹூ கூறியுள்ளார்.
சீன அரசு சார்புடைய ஊடகங்களில் வந்துள்ள இந்தப் பேட்டி சீன அரசின் குரலாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தலாய் லாமா, தமது அருணாச்சலப் பிரதேச வருகை அரசியல் நோக்கம் கொண்டது அல்ல என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் தலாய் லாமா அவர் விரும்பிய இடத்திற்கு பயணம் மேற்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

No comments:

Post a Comment