உதகை ஏரியிலுள்ள தண்ணீரில் எவ்வித மாசும் கலப்பதில்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்றளித்துள்ள சூழலில், தொடர்ந்து உதகை ஏரியில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது பொதுமக்களையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.
உதகை நகரில் படகு இல்லம் அமைந்துள்ள ஏரியில் மழை நீரோடு, பல்வேறு கழிவுகளும் சேர்ந்து கலப்பதால் இந்த ஏரியின் தண்ணீர் மாசடைவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அத்துடன் இதன் காரணமாகவே ஏரியில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகள் முளைப்பதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு வந்தது.
அத்துடன் சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மாசடைவதோடு அப்பகுதியிலுள்ள தனியார் மற்றும் அரசுத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும், உதகை நகராட்சியின் சார்பில் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் தண்ணீருமே காரணமென அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆய்வு நடத்திய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், உதகை நகரின் கழிவுகள் ஏதும் படகு இல்லம் அமைந்துள்ள ஏரியில் கலப்பதில்லை என சான்றளித்துள்ளனர். இருப்பினும் உதகை ஏரியிலும், சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்திலும் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பது வாடிக்கையாகவே உள்ளது.
இந்நிலையில் உதகை ஏரியில் கூடுதல் படகு இல்லம் அமைந்துள்ள பகுதியில் புதன்கிழமை காலையில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன.
இவற்றின் எடை 200 கிராமிலிருந்து 5 கிலோ வரை இருந்தது. மீன்கள் இறப்பிற்கு ஏரியில் கலக்கும் கழிவு நீரே காரணமென பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால், இந்த ஏரியில் எத்தகைய கழிவு நீரும் கலப்பதில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்றளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உதகை ஏரியை சுற்றிலுமுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் சில முக்கிய தங்கும் விடுதிகளிலிருந்து ஏரிக்குள் கழிவுநீர்க் கால்வாய் ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகளாலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மீன் வளத்துறையினர் கூறுகையில் கடந்த சில நாள்களாக உதகையில் நிலவிய பனி மூட்டம் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு நீருக்குள் மீன்கள் இறந்திருக்கலாமென தெரிவித்தனர்.
ஆனாலும், இப்பிரச்னை தொடர்பாக விரிவான ஆய்வு நடத்தி ஏரி நீர் மாசடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது கட்டாயமென உதகை ஏரியை சுற்றிலும் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments:
Post a Comment