இவ்வழக்கு நீதிபதிகள் முகோபாதயா, துரைசாமி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "இரண்டு ஆர்.டி.ஓ., கனிமவள உதவி இயக்குனர், ஆறு தாசில்தார், நான்கு வருவாய் ஆய்வாளர்கள், ஆறு கிராம நிர்வாக அதிகாரிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் என 35 பேர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவர்கள், சட்டவிரோத குவாரிகளை தடுக்கவும், அரசு சொத்துக்களை பாதுகாக்கவும் தவறி விட்டனர். எனவே, இவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்' என கூறப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சட்டவிரோத குவாரிகளை கண்காணித்து தடுப்பதற்காக தற்போது மாவட்ட அளவில் உள்ள குழுக்களை மாற்றியமைக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய குழுவிற்கு மாவட்ட கலெக்டர் தலைமை வகிக்க வேண்டும். எஸ்.பி., மாவட்ட வனத்துறை அதிகாரி, டி.ஆர்.ஓ., போக்குவரத்து அதிகாரி, டி.எஸ்.பி., பஞ்சாயத்து உதவி இயக்குனர், நகராட்சி கமிஷனர்கள், கனிமவள உதவி இயக்குனர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.
தாலுகா அளவில் தாசில்தாரை அமைப்பாளராக கொண்டு ஒரு குழுவை அமைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் குழு, அடிக்கடி குவாரிகளுக்கு சென்று சோதனை நடத்த வேண்டும். கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்டவிரோத குவாரி நடந்தால் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காததற்கு கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், சம்பந்தப்பட்ட கனிமவள அதிகாரி, அப்பகுதி போலீஸ் அதிகாரி பொறுப்பாவர். இவர்கள் மீது துறை நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் எடுத்து, அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: நீலகிரி மாவட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காடுகளை அழிக்கக் கூடாது. மணல் குவாரி, கல்குவாரி செய்யக் கூடாது. சட்டவிரோத கல்குவாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட குழுவும், தாலுகா அளவிலான குழுவும் அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது..

இந்த உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். உரிய அதிகாரிகளின் முன் அனுமதியின்றி, நீலகிரி மாவட்டத்தில் பொக்லைன், ஜெ.சி.பி., டிப்பர் லாரிகளை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. சட்டவிரோத கல்குவாரி தொடர்பாக, 35 பேர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி., பரிந்துரை செய்துள்ளது. இவர்களில் சிலர் மீது துறை ரீதியான நடவடிக்கை துவங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்துள்ளது
No comments:
Post a Comment