நீலகிரியிலிருந்து கோவை செல்லும் முக்கிய பஸ் போக்குவரத்துத் தடங்களான குன்னூர், கோத்தகிரி சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளதாலும், மழை தொடர்வதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளும் நிரம்பி, கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் 250 வீடுகள் தரைமட்டமாகி விட்டன. கடும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், 44 பேர் உயிரிழந்து விட்டனர். மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மண்சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மரங்களை, தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகின்றனர். ஊட்டியில் இருந்து கோத்தகிரி மற்றும் குன்னூர் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலையில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.
கேத்தி: நீலகிரியில், கடந்த 8ம் தேதி இரவு பெய்த கன மழையால் 14 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் வரலாறு காணாத வகையில், இம்மாவட்டத்தில் மட்டும் 318 செ.மீ., மழை பதிவானது. அதிகபட்சமாக கேத்தியில் 82 செ.மீ., மழை பதிவானது. இப்பகுதிகளில் கடும் நிலச் சரிவு ஏற்பட்டு, வீடுகள் இடிந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. வீடுகள் அடித்துச் செல்லப் பட்டதில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
ஊட்டி: கோடப்பமந்து பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும், நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரும் வீடு இடிந்ததில் உயிரிழந்தனர். அச்சனக்கலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். கிராண்ட் டாப் ரோட்டில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு மண்ணில் புதைந்தது. வீட்டிலிருந்த மூன்று பேர் மண்ணில் புதைந்து உயிரிழந் தனர்.ஒருவர்மட்டும், தனியார் பள்ளியில் காவலராக பணிபுரிவதால், நேற்று முன்தினம் இரவு பணிக்குசென்றதால் உயிர் தப்பினார்.
கோத்தகிரி: கோத்தகிரி, கொணவக்கரையில் இரண்டு பேர், ஒரசோலையில் ஒருவர் வீடு இடிந்ததில் இறந்தனர். இடுஹட்டியை சேர்ந்த ஒருவர் குளிரால் உயிரிழந்தார்.
குன்னூர்: குன்னூர் பஸ் ஸ்டாண்டில், இரவு பஸ்சுக்காக காத்திருந்த கிளிஞ்சாடாவை சேர்ந்த ஒருவர் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தார். தூதூர்மட்டம் பகுதியில் ஆற்றுநீரை கடக்க முயன்ற ஒரு பெண்ணும், அவரது ஆறு வயது மகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு பேர் பலியாயினர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அவற்றை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதால், அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யவேண்டி இருந்தது. குன்னூர் மற்றும் கோத்தகிரியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை: பலியானவர்கள் குடும் பத்துக்கு, தமிழக அரசு சார்பில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மழையின் தீவிரம் குறைந் துள்ளதால் மீட்புப்பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அரசு நியமித்த கண்காணிப்பு அதிகாரி கோவிந்தன் நேற்று பார்வையிட்டார்.இவர், கோத்தகிரி சுற்றுப்புற பகுதிகளையும், மாவட்ட கலெக்டர் ஆனந்த் பாட்டீல் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளையும் ஆய்வு செய்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் (11ம் தேதி) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
அபாயகட்டத்தில் நீலகிரி மாவட்டம்: நீலகிரி மலை மாவட்டத்தில் மூன்று நாட்களில் மட்டும் 630 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால், ஏற்பட்ட மழைவெள்ளம் ஒட்டுமொத்த மாவட்ட மக்களையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மழையினால் வீடுகள் இடிந்தும், மண் சரிவு ஏற்பட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மண்ணில் புதைந்து கிடந்தது, பார்த்த அனைவரையும் நெகிழ வைப்பதாக இருந்தது. இந்த சோக சம்பவங்கள் நடந்த இடங்களில் பெரும்பாலானவை சரிவான நிலச் சரிவுகளை கொண்டதாகவும், மழை வெள்ளம் செல்லும் பாதையாகவும், நிலச் சரிவுகள் ஏற்படும் பகுதியாகவும் இருந்தன.
மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்புகள் அடைபட்டுள்ளதாலும், முறையான பராமரிப்புகள் இல்லாத காரணத்தாலும், பெருக்கெடுக்கும் மழைவெள்ளம், மக்கள் வாழும் பகுதிகளை மூழ்கடித்து உயிரை குடித்து விட்டது. இது தவிர, நிலச்சரிவு அபாயம் உள்ள பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்து வருவதும், அவர்கள் அபாயத்தை உணராத காரணத்தால் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளின்போது சிக்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் நிலச்சரிவு அபாயங்கள் நீலகிரியில் ஏற்படும் போதும், சில நாட்களுக்கு அதன் சோகத்தையும், பயத்தையும் உணரும் மக்களும், மாவட்ட நிர்வாகமும் அதன்பின், பிற்காலத்தில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சோக சம்பவம் இந்த மாவட்டத்தில் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதனால், சில குடும்பங்கள் அழிந்து, பல அனாதைகள் உருவாக்கப்படுகின்றனர்.
இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவிகளை அளிக்கும் மாநில அரசு, அபாய பட்டியலில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பணிகளை முடுக்கிவிட வேண்டியது கட்டாயமாகும். அப்படி செய்தால் மட்டுமே ஒட்டுமொத்த குடும்பமே அழிந்த போன நிலையில், யாருக்கு நிவாரணம் வழங்குவது என்ற குழப்பத்துக்கு தீர்வு காண முடியும். நேற்று அதிகாலை 4.00 மணியளவில், கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் பெரிய சத்தத்துடன் இடி விழுந்ததில் வீடுகள் ஆடியுள்ளதாக கூறப்படுகிறது. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். தவிர, அப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டத்தில், ஆயிரம் மீட்டர் தொலைவு வரை ஐந்தடி ஆழத்தில் நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் நிலப்பிளவை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து, வருவாய் துறையினரிடம் கூறியுள்ளனர். இப்பகுதியை ஆய்வு செய்த வருவாய்த் துறையினர், "குறிப்பிட்ட பகுதி பாதுகாப்பற்ற பகுதியாக உள்ளதால், குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும்' என கூறி சென்றுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கோவில்மேடு அருகேயுள்ள அக்கால் என்ற பகுதியில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் கோத்தர் இன ஆதிவாசிகள் அதிகளவில் இருந்துள்ளனர். இவர்கள் 3 கி.மீ., தொலைவில் உள்ள புது கோத்தகிரி என்ற பகுதிக்கு இடமாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாத மழை அளவு: நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மூன்று நாளில் 600 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த 1979ம் ஆண்டு ஊட்டியில் பெய்த மழைக்கு பின்பு தற்போது தான் இந்த அளவு மழையும், அதே அளவுக்கான உயிர்ச்சேதங்களும் நிகழ்ந்துள்ளதாக உள்ளுர்வாசி ராமன்(80) தெரிவித்தார். அவர் கூறுகையில்,"கடந்த 50 ஆண்டுகளில் இது போன்ற மழையை நான் பார்த்ததில்லை. கடந்த 1979ம் ஆண்டு ஊட்டியை முழ்கடிக்கும் அளவுக்கு மழை வந்தது. ஆனால் தற்போது அதை விட அதிக மழை பெய்து பல வீடுகளை நாசமாக்கியது. இதற்கான விழிப்புணர்வு என்பதும் பேரிடர் மேலாண்மை என்பதும் மிகவும் அவசியம்' என்றார்.
வாகனங்கள் செல்ல தடை: குன்னூர் ரோட்டில் நிலச்சரிவும், கோத்தகிரி ரோட்டில் பெரிய வெடிப்பும் ஏற்பட்டிருப்பதால், பஸ் உட்பட கனரக வாகனங்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூருக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மரப்பாலம் அருகே காட்டாறு வெள்ளத்தில் லாரியும், ஒருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். குன்னூர், கோத்தகிரி, ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பவானி ஆற்றில் மூன்று நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நேற்று அதிகாலை 3 மணிக்கு ஆற்றில் வினாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. அதனால், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள குங்சான் சந்து, சொக்கலிங்கம் சந்து ஆகிய பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பொருட் கள், துணிகள் மணிகண்டன் என்பவரது பி.இ., சான்றிதழ், பாடப்புத்தகங்கள் தண்ணீரில் அடித்துச் சென்றன. 15க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
போக்குவரத்துக்கு தடை: கோத்தகிரி ரோட்டில் கொட்டக்கோம்பை அருகே இரண்டு இடத்தில் 60 மீட்டருக்கு பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், இவ்வழியாக பஸ் உட்பட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள், கார், வேன், டெம்போ ஆகிய வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதித்துள்ளனர்.
நிலச்சரிவு: கன மழையால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே 50க் கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட் டுள்ளன. இந்த சரிவுகளை அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மரப்பாலம் அருகே ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட் டார். டீக் கடை முன்பு நிறுத்தியிருந்த ஒரு லாரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆய்வு: நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து, முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பலத்த மழையால் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து, முதல்வர் கருணாநிதி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயை உடனே வழங்கும்படி முதல்வர் உத்தரவிட்டார். மேலும், சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தவிட்டார். தீயணைப்புத் துறை, காவல் துறை, மருத்துவத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் சார்பில் போதுமான அளவு அலுவலர்களை அங்கு அனுப்புமாறு அதிகாரிகளிடம் முதல்வர் தெரிவித்தார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மண்ணெண்னெய், உடை போன்றவற்றை உடனே வழங்க, மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
நீலகிரிக்கு காரமடை வழியாக இன்று முதல் போக்குவரத்து: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்த்தபின் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையம் வழியாக குன்னூர் செல்லும் ரோட்டில் அதிகமான இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கோத்தகிரி ரோட்டில் நிலச்சரிவும், அரவேணு அருகே 60 மீட்டருக்கு ரோட்டில் பெரிய வெடிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு ரோட்டிலும் பஸ் உட்பட கனரக வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி ரோட்டில் வெடிப்பு ஏற்பட்ட இடத்தின் கீழே, உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி ரோடு சீரமைக்கும் பணி துவங்கப்பட உள்ளது. குன்னூர், கோத்தகிரி ரோடுகள் சரிசெய்யும் வரை, பஸ் மற்றும் கனரக வாகனங்கள் காரமடை, வெள்ளிங்காடு, முள்ளி, கெத்தை, மஞ்சூர் வழியாக ஊட்டி, குன்னூருக்கு நாளை (இன்று) முதல் போக்குவரத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மீட்பு பணிக்கு ராணுவம்: நீலகிரியில் மீட்புப்பணிகளில் ஈடுபட ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக வெள்ள நிவாரணப் பணிகள் சிறப்பு கண்காணிப்பாளர் தெரிவித்தார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை கண்காணிக்கவும், நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், தமிழக அரசு சார்பில் சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று ஊட்டி வந்த அவர், கோத்தகிரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளை ஆய்வு செய்தார். மாலை ஊட்டி காந்திநகர் பகுதியை ஆய்வு செய்த பின்னர் அவர் கூறுகையில்,""நீலகிரியில் மீட்புப்பணிகளில் ஈடுபட உடனடியாக ராணுவம் அழைக்கப் பட்டுள்ளது. ராணுத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்வர். ஊட்டி - கோத்தகிரி சாலை உடனடியாக சீரமைக்கப்படும். நீலகிரிக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
எம்.எல்.ஏ.,வை காணோம்: கடந்த மூன்று நாட்களாக நீலகிரியில் கன மழை பெய்ததில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மண் சரிவு, வீடுகள் இடிந்ததில் இது வரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள பாதிப்புகளை கதர் வாரியத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் ஆனந்த் பாடீல், நகராட்சித் தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர் ரவிகுமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு, மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., கோபாலன் இது வரை எங்குள்ளார் என்று தெரியவில்லை.
குன்னூர் சாலை தயாராகுமா? ஊட்டி - குன்னூர் சாலையின் இரண்டு இடங்களில், சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் இருக்கிறது. இதனை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர், மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கூடுதலாக வர உள்ளனர். போக்குவரத்து சீராக, தற்காலிக சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் முடிந்தால் சில நாட்களில் உள்ளூர் போக்குவரத்து துவங்கும். சாலை மராமத்து முழுமையாக, சில வாரங்கள் ஆகலாம் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment