
தியாகராயநகர் துரைசாமி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு நேற்று வெளி மாநில வாலிபர் ஒருவர் துணி வாங்கி சென்றார். துணிகளை வாங்கி விட்டு ரூ. 500-ஐ கடைக்காரரிடம் கொடுத்தார். அப்போது கடைக்காரருக்கு 500 ரூபாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. மாம்பலம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணனுக்கு தகவல் கொடுத்தார்.
அவர் உடனடியாக கடைக்கு வந்து 500 ரூபாயை சோதனை செய்தார். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. உடனே அந்த வெளிமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவனது பெயர் சாதிக் (29). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தது. அங்கிருந்து கள்ள நோட்டுக்களை எடுத்து சென்னையில் புழக்கத்தில் விட்டேன். என்னுடன் யாரும் வர வில்லை என்று கூறினான்.
மேலும் சாதிக்கிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய பிறகு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
நானும் இன்னொரு வரும் பெரியமேடு லாட்ஜில் தங்கியிருந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டோம் என்று போலீசில் கூறினான்.
உடனடியாக போலீசார் பெரியமேடு லாட்ஜுக்கு சென்று மற்றொருவனை தேடினர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பி விட்டான். சென்ட்ரலில் இருந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் சோதனையிட்டனர். அதில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.
அவனது பெயர் அபில் சாதிக் (29). பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை வங்காள தேசம் வழியாக சென்னை கொண்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் அபில்சாதிக் வைத்திருந்த பையில் ரூ. 30 ஆயிரத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள், ஒரிஜினல் ரூபாய் 4,300 இருந்தது. அதனை போலீசார் பறி முதல் செய்தனர்.
வியாபாரிகளுக்கு கடைக்கு வரும் ரூபாய் நோட்டுகள் மீது சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுள்ளனர்.
No comments:
Post a Comment