கடன் அட்டை (கிரெடிட் கார்டு) உபயோகிப்பது என்பது இப்போது நாகரீகமாகிவிட்டது. யாரோ ஒரு பெண் தொலைபேசியில் மூலம் மூளைச் சலவை செய்து, அதன் மீது மோகத்தை ஏற்படுத்தி விடுகிறார். கடன் அட்டை பெறுவதற்கு அதிகம் நிபந்தனைகள் இல்லாத காரணத்தினால் பொது மக்களும் ஏதாவது வங்கியின் அட்டையை எளிதில் பெற்றுவிடுகின்றனர்.
ஒரு வங்கியின் கடன் அட்டையை உபயோகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, மற்றொரு வங்கியின் புதிய அட்டையைப் பெறுவது மிகவும் சுலபம்.
அட்டைகளை கொடுக்கும்போது அதன் மூலம் பெற்றுக் கொள்ளும் நன்மைகளைப் பற்றி மட்டுமே கூறுவதால், மக்களுக்கு அதன்பின்பு வரும் பிரச்னைகள் குறித்து அறிய வாய்ப்பில்லை.
இதனால் கடன் அட்டையின் மூலமே கடனாளியாகி, தற்கொலை நிலைக்கு சிலர் செல்வதாக கடன் அட்டை உபயோகிப்போர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கடன் அட்டை உபயோகிப்பவர்கள் சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி கூறியது:
தனி நபர் கடன் : கடன் அட்டைக்கும் தனி நபர் கடனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடன் அட்டையின் மூலம் தனி நபர் கடன் பெறுவது எளிது. தனி நபர் கடனுக்கான தவணையை சரியாக திருப்பிச் செலுத்தினால், "டாப் - அப்' கடன்களும் எளிதில் கிடைக்கும். இவைகள் எல்லாவற்றின் மூலமும் பெறப்படும் பணத்தையும் சரியாக திருப்பிச் செலுத்தாவிட்டால், பல்வேறு பிரச்னைகள்தான் வரும்.
"சிபில்' சிக்கல்...கடன் அட்டை மூலம் வாங்கிய பணத்தை சரியாக திருப்பிச் செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்டவரின் பெயர் "சிபில்' வழக்குப் பட்டியலில் சேர்க்கப்படும். இதில் அவரின் பெயர் மட்டுமின்றி செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இப்பட்டியலில் பெயர் உள்ளவர்கள் மேற்கொண்டு ஏழு ஆண்டுகளுக்கு வேறு எந்த வங்கியில் இருந்தும் கடன் பெற முடியாது.
பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் மும்பையில் செயல்பட்டு வரும் சிபில் அலுவலகத்துக்கு ரூ. 142க்கு வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்புபவர்களின் பெயரில் எவ்வளவு கடன் தொகை உள்ளது உள்ளிட்ட விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இதன் உதவி கொண்டு கடனை அடைக்க வழி வகை செய்யப்படும்.
வங்கி குறை தீர்ப்பு ஆயம்...முதலில் பாதிக்கப்பட்ட நபர் சம்பந்தப்பட்ட வங்கிக்கு எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்க வேண்டும். வங்கி அதற்கு விளக்கம் அளிக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் கிளைகளில் செயல்படும் வங்கி குறை தீர்ப்பு ஆயத்தை, விளக்கம் கேட்டு அனுப்பிய மனுவின் நகலுடன் அணுக வேண்டும்.
குறை தீர்ப்பு ஆயமானது சம்பந்தபட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்றார் ஆரோக்கியசாமி.
பாதுகாப்பாக உபயோகிப்பது எப்படி?
தங்கள் தகுதி அறிந்து கடன் அட்டையை உபயோகிக்க வேண்டும். மாதா மாதம் செலுத்த வேண்டிய தொகைக்கான காசோலையை செலுத்த வேண்டிய தேதிக்கு நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்னதாகவே செலுத்திவிட வேண்டும்.
கடைசி நாள் அன்று வங்கியின் காசோலையை இடும் பெட்டிக்குள் செலுத்தினால், அந்த நாளில் காசோலை "கிளியர்' ஆகாவிட்டால், சரியான நேரத்தில் பணத்தை செலுத்தவில்லை எனக்கூறி அதற்கும் அபராதக் கட்டணம் வசூலிக்கப்படும்.
30 நாள்களுக்குள்...
வங்கி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏதாவது இருந்தால், வங்கியிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்க வேண்டும். அனுப்பப்படும் புகார்களோ, விளக்கம் கேட்கும் கடிதங்களோ அதிகபட்சம் 30 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் காலம் தாழ்த்தப்பட்டது எனக்கூறி பதிலளிக்க மறுத்துவிடுவார்கள்.
குறைந்தபட்ச கட்டணம்...
கடன் அட்டையை உபயோகித்ததற்காக மாதாமாதம் செலுத்தப்படும் தவணையை முழுமையாக செலுத்திவிட வேண்டும்.
குறைந்த பட்ச கட்டணத்தை மட்டும் கட்டினால் போதும் என வங்கிகள் கூறினாலும், முழு பணத்தை செலுத்தி விட வேண்டும். இல்லையென்றால் கட்டப்படாத பணத்துக்கான வட்டியையும் சேர்த்துக் கட்ட வேண்டும்.
சிறிது கவனமாக இருந்தால் கடன் அட்டை என்பது நமக்கு வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

எது எப்படியோ கிரெடிட் கார்டினால் பதிக்க பட்டவர்கள் தான் அதிகம் .இந்த உண்மையை உணருங்கள்.
-நக்கல் நாகராசன்
No comments:
Post a Comment