Pages

Sunday, November 1, 2009

படிப்பில் வெற்றி பெறுவதைவிட, வாழ்க்கையில் வெற்றி பெறுவதே மிக முக்கியம்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி நாடார்கள் சுந்தர விசாலாட்சி வித்யாசாலை பள்ளிகளின் மேலாண்மைக் குழு சார்பில் நா.சு.வி.வி. தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவையொட்டி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கார்ட்டூன் கண்காட்சியைத் திறந்துவைத்து எஸ்.மதி பேசியதாவது:

உலகில் உள்ள உயிரினங்களில் சிரிக்கும் வாய்ப்பை மனிதனுக்கு மட்டுமே இறைவன் வழங்கியுள்ளார். நகைச்சுவை என்பது மிக முக்கியமான விஷயமாகும்.

இதில் ஒவ்வொருவரிடமும் உள்ள அளவில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். பிரச்னையே வாழ்க்கையாக அமைந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் முடிந்த அளவு நகைச்சுவையை வளர்க்க வேண்டும். ஒவ்வொருவரிடமும் உள்ள நகைச்சுவை உணர்வைத் தட்டி எழுப்ப வேண்டும்.

நகைச்சுவை உணர்வுக்கு அற்புதமான விஷயம் கார்ட்டூன். குறைவான கோடுகளைக் கொண்டு வரையப்படும் கார்ட்டூன் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கக் கூடியது.

அதுமட்டுமின்றி, சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கக் கூடியது. கார்ட்டூன் வரைவதற்கு நிறைய விஷயங்களைப் படிக்க வேண்டியுள்ளது.

எனவே, மாணவர்கள் நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். காமிக்ஸ் உள்ளிட்ட எந்த புத்தகத்தையும் படிக்கலாம். புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டால், வாழ்க்கையில் புத்தகங்களே உற்ற நண்பர்கள் என்பதை உணர முடியும்.

புத்தகம் படிப்பதால் உங்களுக்கு நன்மை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அது நாட்டுக்கே நன்மை. கற்கும் காலத்தில் மாணவர்களுக்கு உள்ள ஒரே பிரச்னை படிப்பு மட்டும்தான். எனவே, உங்களது செயலில் நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும்.

தடைகளைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. தடைகளும் பிரச்னைகளும் உள்ள இடத்தில்தான் வளர்ச்சிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

தமிழ், ஆங்கிலம் இரண்டும் இரு கண்களைப் போன்றவை. எனவே, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதும் திறனையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

படிப்பில் வெற்றி பெறுவதைவிட, வாழ்க்கையில் வெற்றி பெறுவதே மிக முக்கியம்.

டிவி தொடர்களுக்கு முக்கியத்துவம் கூடாது: மாணவர்களின் மீது உள்ள நம்பிக்கைகூட பெரியவர்கள் மீதும் பெற்றோர்கள் மீது இல்லாமல் போய்விட்டது. காரணம் பெரியோரும், பெற்றோர்களும் டி.வி.க்கு அடிமையாகி விட்டனர்.

டி.வி. தொடர்களில் பெண்களைச் சதிகாரர்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்திரித்துக் காட்டுகின்றனர். பெண்களை இழிவுபடுத்திக் காண்பிக்கும் தொடர் நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதை பெண்கள் நிறுத்த வேண்டும்.

குழந்தைகள் டி.வி. பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் முதலில் நிறுத்த வேண்டும். குழந்தைகளின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும். தங்களுடைய எண்ணங்களை பிள்ளைகளின் மேல் திணிக்கக் கூடாது.

மருத்துவம், பொறியியல் மட்டுமே சாதிக்கும் துறைகள் அல்ல. சாதிப்பதற்கு எத்தனையோ துறைகள் உள்ளன.

மிருகங்களுக்குத் தான் ஈன்ற குட்டிகளில் ஆண், பெண் பேதம் தெரிவதில்லை. இதனால் தன் பெண் குட்டிகளை கொல்வதில்லை. ஆறறிவு, பகுத்தறிவு எனப் பேசும் மனிதர்கள் பெண் கருக் கொலை செய்வது இங்கேதான் உள்ளது.

பெண் தெய்வங்கள் என்பது இந்து மதத்தில்தான் அதிகம் உள்ளன. பெண் சிசுக் கொலை தடுக்கப்பட வேண்டும். பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்றார்.

No comments:

Post a Comment