அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வெள்ளைமாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் பராக் ஒபாமா அவரை வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பின், அவரது நிர்வாகத்தின் முதல் விருந்தாளியாக சென்றுள்ள மன்மோகன் சிங்கையும், அவரது மனைவி குர்சரண் கவுரையும், ஒபாமாவும், அவரின் மனைவி மிச்சேலும் வரவேற்றனர்.மன்மோகனை வரவேற்கும் நிகழ்ச்சி மழையின் காரணமாக வெள்ளை மாளிகையில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்திற்கு மாற்றப் பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியின் போது, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்கள் இசைக்கப் பட்டன.ஜி-20 மாநாடு லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போது, இருதலைவர்களும் சந்தித்துப் பேசியிருந்தாலும், இரு தரப்பு பிரச்னைகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த உலகப் பிரச்னைகள் குறித்து அவர்கள் நேற்று தான் ஆலோசித்தனர்.
இருவருக்கும் இடையே நேரடியாக நடந்த இச்சந்திப்பின் போது, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரங்கள், பயங்கரவாதம், அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், விவசாயம், கல்வி போன்ற துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியை அந்நாடு ராணுவ பலத்தை அதிகரிக்க பயன்படுத்துவது பற்றி அதிபர் ஒபாமாவிடம் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குஅதிபர் ஒபாமாவும்,அவரின் மனைவியும் விருந்தளித்தனர். இந்த விருந்தில் 400க்கும் மேற் பட்டவர்கள் பங்கேற்றனர்.
காந்தியை தன்னகத்தே கொண்ட ஒபாமா: மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளரான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எப்போதும் காந்தியின் புகைப்படத்தை தன்னகத்தே கொண்டிருப்பார் என்று அதிபரின் மனைவி மிசெல்லி ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வெள்ளை மாளிகையில் உற்சாக வரவேற்பும், விருந்தும் வழங்கப்பட்டது. இந்த விருந்தில் ஒபாமா, தனது மனைவி மிசெல்லியுடன் கலந்து கொண்டார். விருந்தின் இடையே மிசெல்லி கூறியதாவது, ஒபாமா எப்பொழுதும் காந்தியின் புகைப்படத்தை தன்னகத்தே கொண்டிருப்பார் எனவும், காந்திஜியின் கருத்துக்களை உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துவார் என்றும், காந்திஜி இந்தியாவிற்கு மட்டுமல்லாது தேசத்தந்தை மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் அவர் ஈடு இணையற்ற ஒப்பற்ற மனிதராக விளங்குவதாக அவர் தெரிவித்தார்.
மன்மோகன்-ஒபாமா சந்திப்பு வரலாற்றின் மைல்கல் : ஹிலாரி: இந்திய பிரதமர் மன்மோகன் சிங்- அமெரிக்க அதிபர் ஒபாமா இடையிலான சந்திப்பு அமெரிக்க வரலாற்றின் முக்கிய மைல்கல் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடையே பேசுகையில், இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்த கருத்துடைய சகோதரத்துவ நாடுகள் என்றும், இந்த நாடுகளுக்கிடையேயான நட்பை யாதொரு சக்தியாலும் பிரிக்க முடியாது என்று தெரிவித்தார். இந்த 21ம் நூற்றாண்டில் இவ்விரு நாடுகளும் ஒன்றிணைந்து பயங்கரவாதம் உள்ளிட்ட உலகின் விரும்பத்தகாத சக்திகளை வேரறுக்க உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்விரு நாடுகளுக்கிடையேயான நட்பு, ஒபாமா காலத்தில் மட்டுல்லாமல் இனி எதிர்காலத்திலும் தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Tuesday, November 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment