Pages

Tuesday, November 24, 2009

12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முயற்சி எடுத்து வருகிறோம்-அமைச்சர் தங்கம் தென்னரசு !

"மாநில அளவில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முயற்சி எடுத்து வருகிறோம்,'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.சென்னை சேத்துப் பட்டில் நடந்த பள்ளிச் சீரமைப்பு மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:பள்ளிகளில் கரும்பலகை, சேர், டேபிள்கள் மற்றும் கழிவறை வசதியின்மை போன்று பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் தான் பள்ளிச் சீரமைப்பு மாநாடு துவங்கப்பட்டது.

சென்னையில் எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த மாநாடு, அரசின் பெரும் முயற்சியால் தற்போது துவக்கப்பட்டுள் ளது.சென்னை கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு தேவையான அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 74 கோடியே 15 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்.இத்தொகையை சேர், டேபிளாகவும், பள்ளி கட்டடமாகவும் மாற்ற உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் வகுப்பறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். வரும் ஆண்டுகளில் 6ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழி பாடத் திட்டத்தை அமல்படுத்த உள்ளோம்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் அரசு பள்ளிகளிலும் கொண்டு வரப்பட உள்ளது.கம்ப்யூட்டர் ஆய்வகம் இல்லாத பள்ளிகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். உயரிய நோக்கத்தில் நன்கொடை கொடுப்பவர்களின் பங்கும் இதில் உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டம், நபார்டு வங்கி உதவியுடன் அரசு பள்ளிகளுக்கு 1,000 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.தமிழக அளவில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முயற்சி எடுத்து வருகிறோம். இந்த அரசு பதவிக்கு வந்ததில் இருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

மாணவி மயக்கம்: அமைச்சர் வருத்தம் :சென்னை எம்.சி.சி., பள்ளியில் நடந்த பள்ளிச் சீரமைப்பு மாநாட்டில் அமைச்சர் உட்பட முக்கிய நபர்களை வரவேற்க பள்ளி மாணவ, மாணவிகள் விழா துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே வரிசையாக நிறுத்தப்பட்டனர்.காலை 10.30 மணிக்கு துவங்குவதாக இருந்த மாநாடு மேடைக்கு காலை 11.45 மணிக்குத் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு வந்தார். அதுவரை கால் கடுக்க நின்ற மாணவர்கள் பலர், முட்டியை பிடித்தவாறு நின்ற இடத்திலேயே உட்கார்ந்தனர்.அமைச்சரை வரவேற்க அலங்கார உடை அணிந்து நின்றிருந்த மாணவி ஒருவர் மயங்கி விழுந்தார். பள்ளி மாணவர்களை இது போன்று பல மணிநேரம் நிற்க வைப்பதை கல்வித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் சிலர் வலியுறுத்தினர்.விழாவில் பங்கேற்க தாமதமானது குறித்து மேடையிலையே அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment