Pages

Tuesday, November 17, 2009

மறக்க முடியுமா ? புதிய பகுதி -எம் .ஜி . ஆர் .





"நாடோடி மன்னன்" மகத்தான வெற்றிக்குப்பின், கண் திருஷ்டி போல் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. புகழ் பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம்.

சீர்காழியில், "இன்பக்கனவு" நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம்.ஜி.ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், சற்றே சரிந்ததால், கால் எலும்பு முறிந்து விட்டது. இதனால் மேடையில் விழுந்து விட்டார், எம்.ஜி.ஆர்.

வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாரே எம்.ஜி.ஆர். பேசினார். "எதிர்பாராதவிதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்" என்று கூறினார்.

எம்.ஜி.ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவர் வீட்டு முன் பெரும் கூட்டம். சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர். "எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு "எக்ஸ்ரே" எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர். சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். "அட்மிட்" ஆனார்.

எம்.ஜி.ஆர். கால் எலும்பு முறிந்து விட்டதால், அவர் குணம் அடைந்தாலும் முன்போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. இதனால் எம்.ஜி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

"என் உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னிலும் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித மாற்றமும் இல்லை. வேகம் சற்று கூடியிருந்தது!

நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படம் "தாய் மகளுக்குக் கட்டிய தாலி". அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனத்தை அரங்கண்ணல் எழுதினார். ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன், "கல்பனா கலாமந்திர்" என்ற சொந்த படக் கம்பெனியைத் தொடங்கி அவரே டைரக்ட் செய்த படம்.

எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜமுனா நடித்தார். மற்றும் பி.கண்ணாம்பா, ராஜசுலோசனா, எம்.ஜி.சக்ரபாணி, சின்னப்பதேவர், தங்கவேலு ஆகியோர் நடித்தனர். 31_12_1959_ல் இப்படம் வெளிவந்தது.

ஆர்.ஆர்.சந்திரன், நல்ல ஒளிப்பதிவாளரே தவிர, நல்ல டைரக்டராகப் பிரகாசிக்க முடியவில்லை. கதையும், எம்.ஜி.ஆருக்கு ஏற்றதல்ல. அதனால் இப்படம் வெற்றி பெறவில்லை.

1960_ல் "பாக்தாத் திருடன்", "ராஜா தேசிங்கு", "மன்னாதி மன்னன்" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"பாக்தாத் திருடன்", சதர்ன் மூவிஸ் தயாரிப்பு. திரைக்கதையை ரவீந்தர் எழுத, வசனம் எழுதியவர் ஏ.எஸ்.முத்து. தயாரித்து இயக்கியவர் டி.பி.சுந்தரம்.

இதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி வைஜயந்திமாலா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், அசோகன், சந்தியா, ஹெலன் ஆகியோரும் நடித்தனர். இது சராசரிப்படம். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த "மன்னாதி மன்னன்" 19_10_1960_ல் வெளிவந்தது.

எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. மற்றும் அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா நடித்தனர். கதை_வசனம் கண்ணதாசன். இயக்கம்: எம்.நடேசன். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி.

"அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!" என்ற கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம் இது. இதில், எம்.ஜி.ஆருக்கும், பத்மினிக்கும் நடனப்போட்டி நடக்கும். அதில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்; பத்மினி தோற்பார்! பின்னர் எம்.ஜி.ஆரிடம் பத்மினி நடனம் கற்றுக்கொள்வார்.

நடனக் கலையில் வல்லவரான பத்மினிக்கு ஈடுகொடுத்து எம்.ஜி.ஆர். ஆடியதை, ரசிகர்கள் பாராட்டினர். இந்தப்படம் சூப்பர்ஹிட்.

"மதுரை வீரன்" என்ற மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்த லேனா செட்டியாரின் "கிருஷ்ணா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "ராஜாதேசிங்கு." வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை. கண்ணதாசனும், மக்களன்பனும் வசனம் எழுதினர். உடுமலை நாராயணகவி கண்ண தாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன்: டி.ஆர்.ரகுநாத்.

எம்.ஜி.ஆருடன் பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், தங்கவேலு, டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், எம்.சரோஜா ஆகியோரும் நடித்தனர்.

இந்த பிரமாண்டமான படம், நீண்ட காலம் தயாரிப்பில் இருந்தது. கதைப்படி, இதில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இதை, எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் ஓடவில்லை.


இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படம் திலிப்குமார் _ நிம்மி நடித்த "ஆன்". மெஹ்பூப் தயாரித்த இப்படம் இந்தியிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் (1952) வெளியிடப்பட்டது. அதன்பின் சில படங்களில் நடனக்காட்சிகளும், கனவுக்காட்சிகளும் மட்டும் கலரில் எடுக்கப்பட்டன.

தமிழில் முதல் முழு நீள வண்ணப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார், டி.ஆர்.சுந்தரம். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை "அலிபாபாவும் 40 திருடர்களும்." காலத்தை வென்று, உலக நாடுகள் அனைத்திலும் இன்றும் படிக்கப்பட்டு வரும் அரபுக்கதை.

இதே "அலிபாபாவும் 40 திருடர்களும்" கதையை 1941_ம் ஆண்டில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்தார். என். எஸ்.கிருஷ்ணன்தான் அலிபாபா! டி.ஏ.மதுரம் அவருடைய காதலி மார்ஜியானா! கலைவாணர் அவருக்கே உரித்தான பாணியில், அலிபாபாவை நகைச்சுவை கதாபாத்திரமாக மாற்றியிருந்தார். வீரதீரச் செயல்கள் கிடையாது; நகைச்சுவையுடன் கதை நகரும்.

இந்தப் படத்தில், கலைவாணர் நாடகக் குழுவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ராமசாமி, அலிபாபாவின் தோழனாக நடித்தார். கனமான உடம்பைக் கொண்ட ராமசாமியை "புளி மூட்டை" என்று என்.எஸ்.கே. அழைப்பார். அதன்பிறகு, வெறும் ராமசாமி "புளிமூட்டை ராமசாமி" ஆனார். (பொன்னுசாமி பிள்ளையை "யதார்த்தம் பொன்னுசாமி" யாகவும், குப்புசாமியை "ஆழ்வார் குப்புசாமி"யாகவும் மாற்றியவர், கலைவாணர்தான்.)

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மந்திரிகுமாரி", "சர்வாதிகாரி" ஆகிய 2 வெற்றிப்படங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர். அலிபாபாவில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். கதாநாயகி பானுமதி. மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, கே.சாரங்கபாணி, வித்யாவதி, எம்.என்.ராஜம் ஆகியோரும் இதில் நடித்தனர்.

"அலிபாபா" கேவா கலரில் தயாரிக்கப்பட்டது. தமிழுக்கு கலர்ப் படம் புதிது என்பதற்காக, வெளிநாட்டில் இருந்து எந்த கேமராமேனையும் சுந்தரம் அழைக்கவில்லை. டபிள்ï ஆர்.சுப்பராவை கேமராமேனாக நியமித்தார். வசனங்களை ஏ.எல்.நாராயணன் எழுதினார். பாடல்களை மருதகாசி எழுத எஸ்.தட்சிணாமூர்த்தி இசை அமைத்தார். திரைக்கதை அமைத்து, படத்தை இயக்கி னார், டி.ஆர்.சுந்தரம்.

படத்தில் முக்கியமான காட்சி, 40 திருடர்களும் வசிக்கும் குகைதான். 40 திருடர்களும் குதிரையில் போகக்கூடிய அளவுக்கு, மைசூரில் பிரமாண்டமான 2 செட்டுகள் போடப்பட்டு இக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த குகை சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் 10 நாட்கள் பிடித்தன.

திருடர்கள் ஒளிந்திருக்கும் பீப்பாய்களை, எம்.என்.ராஜமும், சாரங்கபாணியும் நீர்வீழ்ச்சியில் ஒவ்வொன்றாகத் தள்ளிவிட வேண்டும். இக்காட்சியைப் படமாக்க ஒகேனக்கல்லை தேர்ந்தெடுத்தார், சுந்தரம்.

சில பீப்பாய்கள் அங்கிருந்து, உருட்டி விடப்பட்டன. அக்காட்சிகளைப் படமாக்கியபின், பீப்பாய்கள் உருண்டோடுவது போன்ற காட்சிகள், ஸ்டூடியோவில் `செட்' போட்டு எடுக்கப்பட்டன. ஒரிஜினல் நீர் வீழ்ச்சி காட்சிகளுடன், செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் வித்தியாசமே தெரியாதபடி இணைக்கப்பட்டன. அந்த "கிளைமாக்ஸ்" காட்சி அருமையாக அமைந்தது.

படம் 1956 பொங்கல் தினத்தன்று வெளிவந்து, வெற்றி வாகை சூடியது. இந்தப்படம் முடிவடையும் தருணத்தில் டைரக்டர் டி.ஆர். சுந்தரத்துக்கும், எம்.ஜி.ஆருக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. இதுபற்றி, டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகமான "முதலாளி"யில், எழுத்தாளர் ரா.வேங்கடசாமி எழுதியிருப்பதாவது:-

"மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவைப் பொறுத்தவரையில் யாருக்காகவும், எதற்காகவும் காத்துக்கொண்டு இருக்கும் பழக்கமே இல்லை. ஏற்கனவே, "சுலோசனா" படத்தில் பி.யு.சின்னப்பாவுக்கு பதில் டி.ஆர். சுந்தரமே இந்திரஜித்தாக வேடம் ஏற்றார்.

அப்படி ஒரு சம்பவம் அலிபாபா சமயத்திலும் நடந்தது. படம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாட்டும், ஒரு சண்டைக்காட்சியும் மட்டும் பாக்கி இருந்தன. பாட்டு டூயட். எம்.ஜி.ஆரும், பானுமதியும் சேர்ந்து நடிக்க வேண்டும். சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர். மட்டும் தேவை.

ஆக, எம்.ஜி.ஆர். வந்தால்தான் படப்பிடிப்பு. நாள் குறித்தாயிற்று. அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. படப்பிடிப்பை சுந்தரம் ஒத்தி வைத்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஒரு டூப் நடிகரைப்போட்டு, பாட்டையும், சண்டைக்காட்சியையும் டி.ஆர்.எஸ். எடுத்து படத்தை முடித்து விட்டார்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து, எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு வந்தார். படப்பிடிப்பு நடைபெறும் அறிகுறியே தெரியவில்லை. உண்மையைத் தெரிந்து கொள்ள டி.ஆர்.எஸ். எதிரில் போய் நின்றார், எம்.ஜி.ஆர். வேறு யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள் என்பதை அவரும் அறிவார்.

"என்ன ராமச்சந்திரன்? படப்பிடிப்பு முடிந்து விட்டது. முடிந்த படத்தை பார்த்து விட்டுப் போங்க" என்றார், டி.ஆர். சுந்தரம். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். டூப் நடிகர் எங்கே நடித்திருக்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வளவு கச்சிதமாகப் படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவம் காரணமாக, மாடர்ன் தியேட்டர்சுக்கும், எம்.ஜி. ஆருக்கும் உள்ள தொடர்பு விட்டுப்போயிற்று. மனக்கசப்புடன்தான் அவர் வெளியேறினார் என்றால், அதுதான் உண்மை.

இதற்கு முன்னால் படப்பிடிப்பு சமயத்திலும் ஒரு சின்ன சிக்கல். அலிபாபாவில் ஒரு வசனம் "அல்லா மீது ஆணையாக" என்று ஆரம்பிக்கும். அந்த வசனத்தைப் பேசத் தயங்கினார், எம்.ஜி.ஆர். அவர் தி.மு.க.வில் சேர்ந்திருந்த காலம் அது.

வசனகர்த்தாவிடம், "அம்மாவின் மீது ஆணையாக" என்று மாற்றித்தரச் சொன்னார். ஆனால், வசனகர்த்தா ஏ.எல். நாராயணன் அதற்கு உடன்படவில்லை. "முதலாளியைக் கேட்டுவிடுங்கள்" என்று கூறி நழுவி விட்டார்.

படப்பிடிப்பு தினம். எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கியதும், "அம்மாவின் மீது ஆணையாக இந்த அலிபாபா......" என்று வசனத்தை ஆரம்பிக்க, டைரக்டர் டி.ஆர்.சுந்தரம், "கட்... கட்..." என்று சொல்லிவிட்டார். "இங்கே பேச வேண்டிய வசனம் அம்மாவில் ஆரம்பிக்காது. அல்லாவின்தான் ஆரம்பிக்க வேண்டும். அலிபாபாவுக்கு அல்லாதான் தேவை...... வசனத்தை மாற்றும் வேலை எல்லாம் இங்கே வேண்டாம்" என்று கூறிவிட்டார்."

இவ்வாறு டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

"அலிபாபா" படம், மாடர்ன் தியேட்டர்சுக்கு அகில இந்திய ரீதியில் புகழ் தேடித்தந்தது. தெலுங்கிலும் இப்படம் "டப்" செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.


மனைவியின் சம்மதத்துடன் வி.என்.ஜானகியை மணந்தார், எம்.ஜி.ஆர்
வியாழக்கிழமை, நவம்பர் 19, 5:35 AM IST
புகைப்படம்
திரைப்படம்
1950_ம் ஆண்டு வெளிவந்த "மருதநாட்டு இளவரசி"யைத் தொடர்ந்து, வி.என்.ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக எம்.ஜி.ஆர். ஏற்றார். "ராஜகுமாரி"க்குப்பிறகு, "அபிமன்யூ" என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்சார் தயாரித்தனர். இந்தப் படத்தில் எஸ்.எம். குமரேசனும், அவருடைய ஜோடியாக யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்தனர்.

அபிமன்ïவின் தந்தை அர்ஜூனனாக எம்.ஜி.ஆர். நடித்தார். படத்தின் பிற்பகுதியில்தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார், கே.மாலதி, எம்.ஆர்.சந்தான லட்சுமி ஆகியோரும் நடித்தனர்.

"அபிமன்யு"வின் வசனங்களை கருணாநிதிதான் எழுதினார். என்றாலும், படத்தில் அவர் பெயர் இடம் பெறவில்லை. திரைக்கதை_ வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. இந்தப் படத்தை எம்.சோம சுந்தரமும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவுகவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர், "ராஜமுக்தி" என்ற படத்தை தயாரித்தார். படப்பிடிப்பு புனா நகரில் நடந்தது.

இதில் பாகவதரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி.பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான்.

இந்தப்படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆரும், வி.என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர். ஜானகியை எம்.ஜி.ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணி போல ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது. நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே ஜானகி காட்சி அளித்தார்.

இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம் பெற்றனர். இதே சமயத்தில், ஜுபிடரின் "மோகினி" படத்தில் எம்.ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.

1948 அக்டோபர் 9_ந்தேதி "ராஜமுக்தி"யும், அதே மாதம் 31_ந்தேதி "மோகினி"யும் ரிலீஸ் ஆயின. இதில் "ராஜமுக்தி" தோல்வி அடைந்தது. "மோகினி" வெற்றி பெற்றது.

பின்னர், கோவிந்தன் கம்பெனி தயாரித்த "மருதநாட்டு இளவரசி"யில், எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். கதை, வசனத்தை மு.கருணா நிதி எழுதினார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!

அரசருக்கு எதிராக, அரசனின் இளைய மனைவியின் சகோதரன் திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்!

கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி. ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் வெற்றி பெற்றது.

மருதநாட்டு இளவரசி 1950_ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார்.

ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, "அக்கா" என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிபோலவே பழகினார்கள்.

நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். கணவரை ஒரு நாள் அழைத்து, "வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.

இதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். "நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?" என்று கேட்டார். "மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால், நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம். அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள்" என்றார், சதானந்தவதி.

மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர். பாகவதர்_ சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர். ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி)

எம்.ஜி.ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டத்திலேயே அவர் கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும், எம்.ஜி.ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கணவரின் சாதனைகளுக்கு துணை நின்றார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "மந்திரிகுமாரி", மெகா ஹிட் திரைப்படமாகும். இதில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி எழுதிய வசனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கருணாநிதி எப்படி பட உலகுக்கு வந்தார் என்பதை இப்போது பார்ப்போம்.

திருவாரூரில் இருந்து 15 மைல் தூரத்தில் உள்ள திருக்குவளை கிராமத்தில் 1924 ஜுன் 3_ந்தேதி பிறந்த கருணாநிதி, இளமையிலேயே எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார். அவருடைய நாடகங்களில் ஒன்றைப் பார்த்த ஈ.வெ.ரா.பெரியார், அவரைப் பாராட்டியதோடு, ஈரோட்டில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த "குடியரசு" வார இதழின் துணை ஆசிரியராக நியமித்தார்.

1949_ம் ஆண்டு தி.மு.கழகத்தை பேறிஞர் அண்ணா தொடங்கியபோது, அதில் முக்கியப் பங்கெடுத்துக்கொண்ட கருணாநிதி, பின்னர் தி.மு.க. தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

இந்த சமயத்தில், கோவை ஜூபிடர் நிறுவனத்தினர் தயாரித்த "ராஜகுமாரி" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இந்தப்படத்தை டைரக்டர் செய்தவர் ஏ.எஸ்.ஏ.சாமி. அக்காலத்தில் இவர் புகழ் பெற்ற டைரக்டராகவும், வசன கர்த்தா வாகவும் விளங்கினார். ராஜகுமாரியின் வசனங்களின் பெரும் பகுதியை எழுதியவர் கருணாநிதிதான் என்றாலும் "வசனம் ஏ.எஸ்.ஏ.சாமி" என்றும், "உதவி மு.கருணாநிதி" என்றும் படத்தில் "டைட்டில்" கார்டு போட்டார்கள்.

கருணாநிதிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. மனைவியுடன் கோவையில் குடியேறி, "அபிமன்யு" படத்திற்கு வசனம் எழுதினார். கருத்தாழம் மிக்க வசனங்கள் எழுதியும், படத்தில் வசன கர்த்தாவாக அவர் பெயர் இடம் பெறவில்லை.

இந்த சமயத்தில், கருணாநிதியின் எழுத்துத்திறமை பற்றி மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்திடம் கவிஞர் கா.மு.ஷெரீப் கூறினார். அதைத் தொடர்ந்து, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை_வசன இலாகாவில் சேர்ந்து பணிபுரியுமாறு கருணாநிதிக்கு தந்தி அடித்தார், டி.ஆர்.சுந்தரம். அந்த அழைப்பை ஏற்று, மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் கருணாநிதி சேர்ந்தார்.

அப்போது, மாடர்ன் தியேட்டர்சார் "சண்டமாருதம்" என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்கள். அதன் பொறுப்பாசிரியராக கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே கருணாநிதியின் எழுத்துத் திறமையை அறிந்திருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் சேர கருணாநிதி வந்தபோது, அவரை கண்ணதாசன் அன்புடன் வரவேற்றார். இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த சமயத்தில், "பொன்முடி" படம் முடிவடையும் நிலையில் இருந்தது. அப்படத்தின் பின்பகுதிக்கான கதையை அமைத்துத் தருமாறு கருணாநிதியை சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதன்படி, பொன்முடி படத்தின் இறுதிப் பகுதியை (கபாலிகர் கூட்டம் வருவது) கருணாநிதி அமைத்துத் தந்தார்.

ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான "குண்டலகேசி"யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, "மந்திரிகுமாரி" என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.

மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார்.

"ராஜகுமாரி" படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், "அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே" என்றார். "அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்" என்று கருணாநிதி எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.

"மந்திரி குமாரி"யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.

மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். "கொள்ளையடிப்பது ஒரு கலை" என்பது அவன் கொள்கை.

மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.

தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

"வாராய் நீ வாராய்" என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, "சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்" என்று வேண்டுகிறாள், அமுதா.

அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

ஆரம்பத்தில் "மந்திரிகுமாரி"யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.

கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கருணாநிதியின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. "அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு" என்று விளம்பரம் செய்தார்கள்.

நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:

"பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?"

"கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!"

"என்ன! கொள்ளையடிப்பது கலையா?"

"ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!"

"இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?"

"கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்." இத்தகையை வசனங்கள் ஏராளம்.

"கொள்ளை அடிப்பதை கலை என்று கருணாநிதி கூறுகிறார்" என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

அதற்குக் கருணாநிதி கூறிய பதில்: "கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?"

_ இவ்வாறு எதிர்ப்பாளர்களுக்குப் பதில் அளித்தார், கருணாநிதி.


எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.

(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக "மனோகரா" மட்டுமே அமைந்தது.)

"மந்திரிகுமாரி"யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய "வாராய், நீ வாராய்" என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது.

திரும்பிப்பார்" படத்துக்கு பிறகு, குடும்பப்பாங்கான படம் ஒன்றை தயாரிக்க டி.ஆர்.சுந்தரம் விரும்பினார். கவிஞர் கண்ணதாசன், திரைப்பட பாடலாசிரியர் ஆவதற்கு முன் "இல்லறஜோதி" என்ற கதையை எழுதி வைத்திருந்தார். அந்தக் கதையை படமாக்க டி.ஆர். சுந்தரம் முடிவு செய்தார்.

இப்படத்தின் கதை, வசனம், பாடல்களை கண்ணதாசன் எழுதினார். சிவாஜி கணேசன், பத்மினி, ஸ்ரீரஞ்சனி, தங்கவேலு ஆகியோர் நடித்தனர். "பராசக்தி"யில் சிவாஜியின் தங்கையாக நடித்த ஸ்ரீரஞ்சனி, இதில் மனைவியாக நடித்தார்.

படம் முடிவடைந்ததும், ஸ்டூடியோ தியேட்டரில் சுந்தரம் போட்டுப் பார்த்தார். படம் மெதுவாக நகர்வது போல அவருக்குத் தோன்றியது. கருணாநிதியை அழைத்து படத்தைப் போட்டுக்காட்டினார். படத்தைப் பார்த்த அவர் சில யோசனைகளைச் சொன் னார். அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்டன.

அத்துடன் "அனார்கலி" என்ற ஓரங்க நாடகத்தை எழுதித்தந்தார். அதில் சிவாஜிகணேசன் சலீமாகவும், பத்மினி அனார் கலியாகவும் நடித்தனர். படத்தில் இந்த ஓரங்க நாடகம் சிறப்பு அம்சமாக விளங்கியது.

"இல்லற ஜோதி" பிரமாதமான வெற்றிப்படம் அல்ல வென்றாலும், தரமான படம். சிவாஜிகணேசனுக்கும், பத்மினிக்கும் இடையேயான புனிதமான காதலை மென்மையாகச் சொன்ன படம்.

ஆங்கிலப்படம் ஒன்றைத் தழுவி "அம்மையப்பன்" என்ற கதையை கருணாநிதி உருவாக்கினார். அதை, ஏ.பீம்சிங் டைரக்ஷனில் நேஷனல் புரொடக்ஸன்சார் படமாகத் தயாரித்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, ஜி.சகுந்தலா, எஸ்.வரலட்சுமி ஆகியோர் இதில் நடித்தனர்.

இதே கதையை, "சுகம் எங்கே?" என்ற பெயரில் மாடர்ன் தியேட்டர்சார் தயாரித்தனர். கதையின் கரு ஒன்றாக இருந்த போதிலும், அம்மையப்பன் ராஜா_ராணி படமாகவும், "சுகம் எங்கே" சமூகப் படமாகவும் வளர்ந்து கொண்டிருந்தன.

ஜெமினியில் பணியாற்றி விட்டு வெளியே வந்த கேமரா மேதை கே.ராம்நாத் "சுகம் எங்கே?" படத்தை டைரக்ட் செய்தார். கே.ஆர்.ராமசாமியும், சாவித்திரியும் ஜோடியாக நடித்தனர். இப்படத்துக்கு, ஏ.கே.வேலனும், கண்ணதாசனும் இணைந்து வசனம் எழுதினர்.

இரண்டு படங்களும் வளர்ந்து கொண்டிருந்தபோது, கருணாநிதிக்கும், கண்ணதாசனுக்கும் இடையே பத்திரிகைகள் வாயிலாக இந்தப் படங்கள் குறித்து காரசாரமான வாக்குவாதம் நடந்தது. "யாருடைய கதை ஒரிஜினல்" என்ற கேள்வி எழுப்பினர்.

இரண்டு குதிரைகளில் எந்தக் குதிரை ஜெயிக்கப் போகிறது என்று, ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 1954 செப்டம்பர் 9_ந்தேதி "சுகம் எங்கே?"யும், ëஅதற்கு 2 வாரம் கழித்து "அம்மையப்ப"னும் ரிலீஸ் ஆயின. இரண்டு படங்களுமே சுமாராகத்தான் ஓடின. அம்மையப் பனைவிட "சுகம் எங்கே"யில் பாட்டுக்கள் நன்றாக இருந்தன.

1955_ம் ஆண்டு தொடக்கத்தில், ஒரு வங்காளக் கதையை படமாக்க டி.ஆர்.சுந்தரம் தீர்மானித்தார். அந்தப்படம்தான் "மகேஸ்வரி." ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ஜோடியாக நடித்தனர். "ரத்த பாசம்" படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆகியிருந்த ஸ்ரீதர், இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். டைரக்ஷன் பொறுப்பை டி.ஆர்.ரகுநாத் ஏற்றார்.

வெள்ளையர் ஆட்சியின்போது, நடைபெற்றதாக கதை எழுதப் பட்டிருந்தது. இதில் கடல் கொள்ளைக்காரர்களுக்கும் வெள்ளைக்கார போர் வீரர்களுக்கும் இடையே காவிரி ஆற்றில் நடக்கும் போர், மெய் சிலிர்க்கும் வகையில் படமாக்கப்பட்டது. ஒகேனக்கல்லில் நடந்த படப்பிடிப்பில், 2 ஆயிரம் துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். 100 படகுகளும் அமர்த்தப்பட்டிருந்தன.

பொருளாதார ரீதியில் "மகேஸ்வரி" வெற்றிப்படம்தான். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.


"மந்திரிகுமாரி"யைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. அதனால் அவர் சென்னையில் குடியேறினார். அவரை மீண்டும் சேலத்துக்கு வரச்செய்து, "தேவகி" என்ற படத்துக்கு கதை_வசனம் எழுதச்சொன்னார், டி.ஆர்.சுந் தரம். அதன்படி கதை_வசனம் எழுதிக்கொடுத்தார், கருணாநிதி.

"தேவகி"யில் வி.என்.ஜானகியும், எம்.என்.கண்ணப்பாவும் ஜோடியாக நடித்தனர். மாதுரி தேவியும், எஸ்.பாலசந்தரும் மற்றொரு ஜோடி. படம் நன்றாகவே ஓடியது. மந்திரிகுமாரிக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் நடிப்பும், அவருடைய கத்திச் சண்டைகளும் டி.ஆர்.சுந்தரத்துக்குப் பிடித்துப்போயின. அவரை வைத்து, வீரதீரச் செயல்கள் நிறைந்த ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். "கேலண்ட் பிளேட்" என்ற ஆங்கிலப்படத்தின் கதையைத் தழுவி, ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

முதலில் "வீரவாள்" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் பெயர் "சர்வாதிகாரி" என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு ஜோடி அஞ்சலிதேவி. மற்றும் வி.நாகையா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்தனர்.

இந்தப் படத்துக்கு வசனம் எழுதும்படி, கருணாநிதிக்கு சுந்தரம் அழைப்பு விடுத்தார். அப்போது, கருணாநிதிக்கு அரசியல் தொடர்பான வேலைகள் அதிகமாக இருந்தன. எனவே, அவர், ஏ.வி.பி.ஆசைத்தம்பியை சிபாரிசு செய்தார். அதற்கு சுந்தரம் சம்மதிக்கவே, ஆசைத்தம்பி சேலம் சென்று வசனம் எழுதினார்.

"சர்வாதிகாரி" படத்தில் போர்க்களக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டன. ஆங்கிலப்படத்தில் நடிகர்கள் எந்த மாதிரி உடை அணிந்திருந்தார்களோ, அதே மாதிரி உடைகள் தயாரித்துக் கொடுக்கப்பட்டன. படம் வெற்றி பெற்றது.

இப்படத்துக்கு, "வீரவாள்" என்ற பெயருக்கு பதிலாக, "சர்வாதிகாரி" என்ற பெயர் சூட்டப்பட்டதின் பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, காலை 8 மணிக்கு வரவேண்டிய இரண்டு சாரட்டு வண்டிகள் குறித்த நேரத்தில் வரவில்லை. அப்போது, புரொடக்ஷன் மானேஜராக இருந்தவர் எம்.ஏ.வேணு. (பிற்காலத்தில் "சம்பூர்ண ராமாயணம்" படத்தைத் தயாரித்தவர்)

அவர் சாரட்டு வண்டிகளை வேறு இடத்துக்கு அனுப்பி விட்டார். இதை அறிந்த சுந்தரம் கோபம் அடைந்து அவரை அழைத்து `டோஸ்' விட்டார். "என்னா மேன்! நான் ஒரு இடத்துக்கு வண்டியை அனுப்பச் சொன்னால், நீ வேறு இடத்துக்கு அனுப்புகிறாய்? நீ என்ன பெரிய சர்வாதிகாரியா?" என்று சீறினார். அருகில் நின்ற எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் திட்டிய பிறகு சுந்தரம் அமைதியானார். அதன்பின் அவரிடம் எம்.ஜி.ஆர். சென்றார்.

"என்ன ராமச்சந்திரன்? ஏதாவது வேணுமா?" என்று சுந்தரம் கேட்டார்.

"ஒன்றும் வேண்டாம். ஒரு சிறு யோசனை."

"என்ன யோசனை? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லலாம்!"

"நம் படத்திற்கு வீரவாள் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்."

"ஆமாம். அதுதானே சரியான மொழிபெயர்ப்பு!"

"ஆனால், அதைவிட சர்வாதிகாரி என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார், எம்.ஜி.ஆர்.

சுந்தரம் கொஞ்சம் யோசித்தார். பிறகு பெரிதாக சிரித்தார்.

"நான் வேணுவை திட்டும்போது சர்வாதிகாரி என்று சொன்னேன். இந்தப் படத்துக்கு சர்வாதிகாரி என்பது பொருத்தமான பெயர்!" என்று கூறிவிட்டு, நல்ல யோசனை தெரிவித்ததற்காக எம்.ஜி.ஆரைப் பாராட்டினார்.

"வீரவாள்" என்ற பெயர் உடனடியாக "சர்வாதிகாரி" என்று மாற்றப்பட்டது.

1953_ம் ஆண்டு, "சுஜாதா" என்ற பெயரில் சிங்களப்படம் ஒன்றை டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். இலங்கையைச் சேர்ந்த குணரத்னா என்பவருடன் கூட்டாக சேர்ந்து தயாரித்த படம் இது.

படப்பிடிப்பின் பெரும் பகுதி இலங்கையில் நடந்தது. சிங்கள நடிகர் _ நடிகைகள் நடித்தனர். படம் பிரமாதமாக ஓடியது. அதைத் தொடர்ந்து, அடுத்த 7 ஆண்டுகளில் 7 சிங்களப் படங்களை கூட்டாக எடுத்தார், சுந்தரம்.

இடையிடையே தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களும் தயாரிக்கப்பட்டன. இதற்கிடையே, கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான "பராசக்தி" படம் வெளிவந்து வரலாறு படைத்தது.

கருணாநிதியையும், சிவாஜி கணேசனையும் வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் படம் தயாரிக்க சுந்தரம் விரும்பினார். கருணாநிதி அரசியலிலும், திரைப்படத்துறையிலும் பிசியாக இருந்தபோதிலும், சுந்தரத்தின் அழைப்பை ஏற்று, "திரும்பிப்பார்" கதையை உருவாக்கி, வசனத்தையும் எழுதிக்கொடுத்தார்.

இந்தப்படத்தில் சிவாஜிக்கு "ஆன்டி ஹீரோ" வேடம். பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக நடித்த பண்டரிபாய், இதில் அவருக்கு அக்காவாக நடித்தார். மற்றும் நரசிம்ம பாரதி, கிருஷ்ணகுமாரி, கிரிஜா, தங்கவேலு ஆகியோரும் நடித்தனர். பாரதிதாசன் பாடல்கள் இடம் பெற்ற இப்படத்துக்கு, கண்ணதாசனும் பாடல்கள் எழுதினார். டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்தார். இசை: ஜி.ராமநாதன்.

இந்தப் படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொருவிதமான உடையில் சிவாஜி தோன்றினார். 10_7_1953_ல் "திரும்பிப்பார்" வெளியாகியது. "பராசக்தி" போல இது மெகாஹிட் திரைப்படம் அல்ல என்றாலும், வெற்றிப்படமே.

No comments:

Post a Comment