Pages

Thursday, November 5, 2009

கோர்ட்டில் ஆஜராக சினிமா ஆசாமிகளுக்கு உத்தரவு

பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசிய நடிகர்கள் எட்டு பேரும், வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம், நடிகை புவனேஸ்வரி விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அப்போது, போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தன்னைப் போலவே இன்னும் சில நடிகைகள் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருந்தார். இது குறித்த செய்தி, தினமலர் நாளிதழில் எவ்வித உள்நோக்கமும் இன்றி வெளியானது. இதையடுத்து, திரைப்பட நடிகர் சங்க நிர்வாகி ராதாரவி அளித்த புகாரின் பேரில், தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார். இதற்கு, மாநிலம் முழுவதிலும் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.




இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி சென்னையில் நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில், தினமலர் நாளிதழுக்கு எதிராக பேசிய நடிகர், நடிகைகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கெட்டவார்த்தைகளால் தரக்குறைவாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினர். இதுகுறித்து பத்திரிகைகளிலும், "டிவி'க்களிலும் செய்தி வெளியானது. பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டது. திருச்சி பிரஸ் கில்டு உறுப்பினர் அறிவுமணி, திருச்சி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் திவாகர், சகாயஜெயராஜ் ஆகியோர் முதலாவது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல் மார்ட்டின் ஆஜராகினார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர்கள் ராதாரவி, விஜயகுமார், சத்யராஜ், சூர்யா, விவேக், அருண் விஜய், நடிகை ஸ்ரீப்ரியா ஆகிய எட்டு பேரும், வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக, மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆபிரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.







No comments:

Post a Comment