
தென்மாவட்ட ரயில் போக்குவரத்திற்கு மிகவும் உதவியாக, இரண்டாவது பாதையாக, விழுப்புரம்-மயிலாடுதுறை-திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-பட்டுக் கோட்டை- பேராவூரணி - காரைக்குடி-மானாமதுரை-விருதுநகர் மெயின் லைன் பாதையை முழுப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியமானதாக உள்ளது. "விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே, "மீட்டர் கேஜ்' பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிந்து, வரும் ஜனவரி மாதம் ரயில் போக்குவரத்து துவங்கும்' என, ரயில்வே இணை அமைச்சர் அகமதுவும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்தும் தெரிவித்துள்ளனர். இப்பாதை திறக்கப்பட்டால், சென்னையிலிருந்து மயிலாடுதுறை- தஞ்சை-திருச்சி வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வாய்ப்பு ஏற்படும். எனினும், திருச்சி-திண்டுக்கல் இடையே ஒருவழிப்பாதை தான் இருக்கிறது. இந்த பாதையில் ஏற்கனவே பல ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், புதிய ரயில்களை அதிகம் இயக்க முடியாத நிலை இருப்பதாக, ரயில்வே அதிகாரிகள் கோடிட்டு காட்டுகின்றனர்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமெனில், மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி பாதை முக்கியமாக உள்ளது. இப்பாதையில், மயிலாடுதுறை-திருவாரூர்-காரைக்குடி இடையேயும், மானாமதுரை-விருதுநகர் இடையேயும் உள்ள, "மீட்டர் கேஜ்' பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டும். மயிலாடுதுறை-திருவாரூர் இடையே, 60 கோடி ரூபாய் செலவில் 39 கி.மீ., தூரத்திற்கு அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி இடையே 224 கி.மீ. மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு 682 கோடி ரூபாய் வேண்டும். பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாதை பணி விரைவாக முடிய, உடனடியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மானாமதுரை-விருதுநகர் இடையே 62 கி.மீ., மீட்டர் கேஜ் பாதை, 110 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடக்கிறது. மானாமதுரை-அருப்புக்கோட்டை இடையே 50 சதவீத பணி முடிந்துள்ளன. அருப்புக்கோட்டை-விருதுநகர் இடையே பாதை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, வரும் ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டது என்றாலும், டிசம்பர் வரை தள்ளிப்போகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.மயிலாடுதுறை-திருவாரூர் பாதைப் பணியையும் விரைவுப்படுத்த வேண்டும். திருவாரூர்-காரைக்குடி, "மீட்டர் கேஜ்' பாதை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு, தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், எம்.பி.,க்களும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
அரியலூர் - தஞ்சை - பட்டுக்கோட்டைக்கு புதிய ரயில் பாதை திட்டம் வருமா? காரைக்காலில் வாஞ்சூரில், மிகப்பெரிய அளவில் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. துவங்கிய மூன்று மாதங்களுக்குள், 15 கப்பல்களிலிருந்து 10 லட்சம் டன்கள் நிலக்கரி மற்றும் தரம் பிரிக்கப்படாத சர்க்கரை ஆகியன இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த துறைமுகம், நாகூருக்கு மிக அருகில் உள்ளது. இந்த துறைமுகத்திற்கு ரயில் பாதை இல்லாததால், சரக்குகள் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. நாகூர்-காரைக்கால் இடையே புதிய ரயில் பாதை அமைத்தால், துறைமுகம் வேகமான வளர்ச்சியை பெறும்.
வேளாங்கண்ணி அருகில், வேட்டைக்காரனிருப்பில் 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அனல் மின் நிலையம் அமைக்கவும், இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்யவும் புதிய துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டங்களால் நாகூர்-நாகபட்டினம்-திருவாரூர்-மயிலாடுதுறை வழியாகவும், திருவாரூர்-தஞ்சை-திருச்சி வழியாகவும் ரயில்களில் சரக்கு போக்குவரத்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அரியலூர் பகுதிகளில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கும், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கும் தேவையான மூலப்பொருட்களை எளிதில் கொண்டு செல்ல முடியும். எனவே, தஞ்சை அருகில் உள்ள ஒரத்தாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதி மக்களுக்கும் பயன்படும் வகையில், அரியலூர்-தஞ்சை-ஒரத்தநாடு-பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment