அமெரிக்க விமானங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இப்போது அல் - குவைதாவினர் தற்காலிக முகாம்களுக்கு மாறிவருவதாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கான் எல்லையில் மலை முகடுகள், அடிவாரங்கள் இவற்றில் தான் அல் - குவைதா நிரந்தரமாக பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்தி வந்தது.

இந்த முகாம்கள், அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சுக்கு எளிதில் இரையாவதால், தற்போது ஆங்காங்கே தற்காலிகமாக நடக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து, அடிக்கடி இடம் மாற்றப்படுகிறது என்று, அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்காக, பாகிஸ்தானின் எல்லைப் புறங்களில் வாசீரிஸ்தான் மற்றும் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதிகளில் முகாம்கள் உள்ளன. அந்நாட்டு அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் மக்களையும் பயன்படுத்துகிறது அல் - குவைதா. தவிரவும், சிறு சிறு முகாம்களுக்கு ஏற்ப, ஆட்களும் அதிகம் சேராத அளவில் சிறு குழுக்களாக பயிற்சி செய்து வருவதாக தெரிவித்தனர். சிறு சிறு தற்காலிக முகாம்களில் பயங்கரவாதப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பாகிஸ்தானின் எல்லைப்புறங்களான தெற்கு வாசிரிஸ்தான் மற்றும் ஸ்வாட் பள்ளத்தாக்கில் செயல்பட்டுவந்த இந்த முகாம்கள், மெல்ல மெல்ல பஞ்சாப் மாநிலத்திலும் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு, அமெரிக்கப் படைகள் மீதான மக்களின் வெறுப்பை அல் - குவைதா பயன்படுத்திக் கொள்கிறது. இந்த முகாம்கள் எத்தனை இருக்கின்றன என்று தெளிவாகக் கணக்கிட முடியாவிட்டாலும், டஜன் கணக்கில் இருக்கின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.,யோடு நெருங்கிய தொடர்பு உடைய பயங்கரவாதக் குழுக்களையும், இந்தப் பயிற்சிக்கு அல்-குவைதா பயன்படுத்துகிறது. ஜெய்ஷ் - இ - முகமது, லஷ்கர்-இ-ஜாங்க்வி,தெரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் போன்ற இயக்கங்களிலும் தனது பயிற்சிக் களத்தை அல் - குவைதா விரிவுபடுத்தியுள்ளது. இவற்றில் ஜெய்ஷ் - இ - முகமது, பாகிஸ்தான் ராணுவத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment