"மன அழுத்தம் ஏற்படும் போது, நல்ல இலக்கியமும், இசையுமே துணையாக இருக்கும். அக்கருத்தை மையமாகக் கொண்டு, 'இசையும் இலக்கியமும்' என்ற நூலை, நல்லி குப்புசாமி கொடுத்திருப்பது சிறப்பு,'' என தினமலர் நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார். பிரம்ம கான சபா சார்பில், நல்லி குப்புசாமி எழுதிய "இசையும் இலக்கியமும்', "ஆயிரம் இரவு ஒன்றே கனவு' மற்றும் "வழிகாட்டும் நால்வர்' ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா, நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் நடந்தது.
இசையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், மூன்று நூல்களையும் "தினமலர்' நாளிதழின் ஆசிரியர் டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி வெளியிட, இலக்கியவாதி மற்றும் பேச்சாளர் சாரதா நம்பி ஆரூரான் பெற்றுக் கொண்டார்.
நூல்களை வெளியிட்டு, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: எனக்கு இந்த மூன்று நூல்களில் இரண்டு நூல்கள் மட்டுமே படிப்பதற்கு வாய்ப்பு கிட்டியது. அதில், "இலக்கியமும், இசையும்' என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது. நூலின் தலைப்பே அற்புதமாக உள்ளது.
என்னைப் போன்று பத்திரிகைத் துறையில் உள்ளவர்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படும் போது, நல்ல இலக்கிய நூல்களும், இசையும் துணையாக இருக்கும். அக்கருத்தை மையமாகக் கொண்டு இந்நூலை வெளியிட்டிருப்பது சிறப்பு. இது போல, "வழிகாட்டும் நால்வர்' என்ற நூலில், அவ்வையார் சொன்ன கருத்துக்களை கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக "எண்ணும் எழுத்தும்' என்று தொடங்கும் பாடல் குறித்து, ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எண் என்றால் "கணக்கு பார்ப்பது' என்ற பொருளில் தன் கருத்தை எழுதியுள்ளார். எந்த தொழில் ஆக இருந்தாலும் கணக்கு பார்க்கவில்லையென்றால் நஷ்டம் ஏற்பட்டு விடும்.
என் தந்தை திருவனந்தபுரத்தில் "தினமலர்' நாளேட்டை துவக்கி ஆறு ஆண்டுகள் நஷ்டத்தில் நடத்தினார். அவர் அந்த நஷ்டத்தை, மாதந்தோறும் கணக்கு போட்டு பார்த்துக் கொண்டிருப்பார். தன் வருவாயில், தன்னால் அந்த நஷ்டத்தை தாங்க முடியுமா என்று கணக்கு போட்டுப் பார்த்து தான், நிறுவனத்தை தொடர்ந்து நடத்தினார். மேலும் என்னிடம் சில அடிப்படை கொள்கைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இக்காலத்திற்கும் அது பொருந்தும். வெற்று காகிதத்தில் யாருக்கும் கையெழுத்து போட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், யாருக்கும் கியாரன்டி கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டாம் என்றும், என் தந்தை எனக்கு அறிவுரை கூறுவார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கும், அருட் செல்வர் மகாலிங்கத்திற்கும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டபோது, சபா சார்பில் கவுரவித்தனர். இது போன்று பத்மஸ்ரீ விருதுகள் பெற்றவர்களையும் சபா சார்பில் பாராட்டி வருவது சிறப்பு. இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில், தனது படைப்புகள் குறித்து, நல்லி குப்புசாமி பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டும் எனது பிறந்த நாளான நவம்பர் 9ம் தேதி, இரண்டு நூல்களை வெளியிடுவேன். இதில், ஒன்று பாரதியார் பற்றியும் மற்றொன்று நிர்வாகம் பற்றியும் இருக்கும். இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக, மூன்று நூல்களை வெளியிட்டு உள்ளேன். இதில், "இசையும் இலக்கியமும்' என்ற நூல், நான் மேடைகளில் பேசியதை தொகுத்து ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. அடுத்து "ஆயிரம் இரவு ஒன்றே கனவு' என்ற நூல். இதில், வாழ்க்கையில் வெற்றி பெற குறிக்கோளின் அவசியத்தை சொல்லியுள்ளேன். அப்துல் கலாம் சொன்னது போல், கனவு காண்பது குறித்தும் கூறியுள்ளேன். இது இன்றைய இளைய தலைமுறையினருக்கு, கனவு மெய்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது. மூன்றாவதாக வெளிவந்துள்ள "வழிகாட்டும் நால்வர்' என்ற நூலில் ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பாரதியார், அவ்வையார் ஆகியோர் பற்றியும், அவரது கருத்துக்களையும் கொண்டு வந்துள்ளேன். இதில், ஆன்மிகம் குறித்த தகவல்கள் மட்டுமின்றி நிர்வாகத் திறமை குறித்த கருத்துகளையும் கண்டறிந்து சொல்லியுள்ளேன்.
பத்திரிகையை நடத்துவது என்பது பெரிய விஷயம். 1972ம் ஆண்டு ஆறு பக்கங்களை மட்டும் கொண்டு வெளிவந்த "தினமலர்' நாளிதழை வைத்திருக்கிறேன். இன்று 16 பக்கங்களுக்கும் மேலாகவும், ஞாயிற்றுக் கிழமைகளில் இரண்டு பேப்பர்கள் என்றும் சிறப்பாக செய்து வருகிறார்கள். இவ்வாறு நல்லி குப்புசாமி பேசினார்.

நூல்கள் குறித்து இலக்கியவாதி மற்றும் பேச்சாளர் சாரதா நம்பி ஆரூரான் பேசியதாவது: "இசையும், இலக்கியமும்' என்ற நூலில் எழுத்தாளர் விக்ரமன் மற்றும் வயலின் வித்வான் குன்னக்குடி அடிகளாரின் சிறப்புகள் உள்ளிட்ட பலரது சிறப்புகள் கூறப்பட்டுள்ளது. இது போல, "வழிகாட்டும் நால்வர்' என்ற நூல் சைவ சமயத்தோடு தொடர்புடையது என்று நினைத்தோமானால் அது தவறு. அதில் ராமகிருஷ்ணர், பாரதியார், விவேகானந்தர், ஒளவையார் ஆகியோரை பற்றி எழுதியிருப்பது சிறப்பு. குறிப்பாக சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவர் அவ்வை. இவர் ஒரு வெண்பாவிலேயே அறம், பொருள், இன்பம், வீடு என நான்கையும் கொண்டு வந்து விடுவார். இவர்களையெல்லாம் இந்நூலில் சிறப்பாக கொண்டு வந்த நல்லி குப்புசாமி இனிய குணம் படைத்தவர். இவ்வாறு சாரதா நம்பி ஆரூரான் பேசினார். பிரம்ம கான சபா செயலர் ரவி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment