கர்நாடக முதல்வர் எடியூரப்பா தான் வசிக்கும் அரசு பங்களாவை ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் அழகு படுத்துகிறார். கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்களால் கடந்த இரண்டு வாரங்களாக அந்த மாநில அரசு ஊசலாடிக் கொண்டிருந்தது. இதனால், பெண் அமைச்சர் உள்ளிட்ட சிலர் ராஜினாமா செய்தனர். இந்த சோகம் தாளாமல் "டிவி' பேட்டியின் போது முதல்வர் எடியூரப்பா கண்ணீர் விட்டு அழுதார்.கர்நாடகாவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் ஏராளமான கிராமங்கள் இடம் தெரியாமல் மாறிவிட்டன. இந்த நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் அரசியல் சூழல் அமைந்து விட்டதாக எடியூரப்பா வருத்தப்பட்டார். மத்திய அரசு, கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது. இவ்வளவு களேபரத்திலும் எடியூரப்பா சந்தடி தெரியாமல், பெங்களூரு ரேஸ் கோர்ஸ் தெருவில் உள்ள அரசு பங்களாவை ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் அழகுபடுத்தி வருகிறார். இவரது படுக்கை அறை மட்டும் 34 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் அழகு படுத்தப் படுகிறது.
கழிவறை மற்றும் உள்பகுதி அழகுக்காக 10 லட்சமும், பால்ஸ்சீலிங்குக்காக 10 லட்ச ரூபாயும், சுவர்களை அழகு படுத்த நான்கு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், இறக்குமதி செய்யப்பட்ட வால்பேப்பர்களுக்காக நான்கு லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும், பளிங்கு தரைகளுக்காக 10 லட்ச ரூபாயும் செலவிடப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு குல்பர்காவில் அமைச்சரவை கூட்டம் நடத்துவதற்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளனர். இதில், 28 லட்ச ரூபாய் மலர் அலங்காரத்துக்காக செலவிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment