Pages

Friday, November 13, 2009

100 கோடி ரூபாய் - மூடிய சிட் சுப்ரபாத் நிதி நிறுவன இயக்குனர் வீட்டில்

சென்னை திருவான்மியூரில் உள்ள சுப்ரபாத் நிதி நிறுவன இயக்குனர் வீட்டில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று சோதனை நடத்தி, 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கான ஆவணங்களை கைப்பற்றினர். சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் சுப்ரபாத் சிட்ஸ் அண்டு இன்வெஸ்மென்ட் நிறுவனம், 1986ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த 1,053 பேர், 19 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு முதலீடு செய்து ஏமாந்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.


இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உமா நாகரத்தினம்(60), தியாகராஜன்(56) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதில் உமா நாகரத்தினம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தியாகராஜன் சிறையில் உள்ளார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பாபு, கோர்ட்டில் சரணடைந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான கண்ணப்ப குருக்கள் தலைமறைவாகிவிட்டார். சென்னை திருவான்மியூரில் உள்ள கண்ணப்ப குருக்கள் வீட்டை, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., செந்தில்குமாரி தலைமையிலான போலீசார் நேற்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சோதனையிட்டனர்.


அப்போது, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான சொத்துக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கண்ணப்ப குருக்கள் பெயரில், திருவான்மியூர், மகாபலிபுரம், பொன்னேரி, திருக்கழுக்குன்றம், ஆந்திராவின் கடப்பா, பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்களுக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு கார், இரு ஸ்கூட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. எட்டு வங்கிகளின் 20 கிரெடிட் கார்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்த ஆவணங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து அவற்றை முடக்கி, ஏலம் விட்டு, அப்பணத்திலிருந்து முதலீட்டாளர்களின் பணம் திருப்பி வழங்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment