Pages

Wednesday, November 18, 2009

ஹிந்தி நடிகைகள் தீவரவாதிகள் தொடர்பு ?

அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன், பாலிவுட் நடிகை ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹெட்லியுடன் அந்த நடிகை இரவு விருந்து சாப்பிடச் சென்றதாகவும் கூறப்படுகிறது. லஷ்கர் -இ- தொய்பா அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய டேவிட் ஹெட்லி என்ற அமெரிக்கரையும், அவரின் கூட்டாளியான ராணா என்பவரையும் அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன (எப்.பி.ஐ.,) அதிகாரிகள் கைது செய்தனர்.


அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் தினமும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு ஹெட்லி வந்து சென்றுள்ளதால், அங்கெல்லாம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அப்படி நடத்தப்பட்ட விசாரணையில், பாலிவுட் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகன் ராகுலுக்கும், டேவிட் ஹெட் லிக்கும் தொடர்பிருந்த விவரம் வெளியானது. ஹெட்லிக்கு ராகுல் பல உதவிகளைச் செய்தார் என்றும் கூறப்பட்டது. இதனால், "ராகுலை மும்பையை விட்டு வெளியே செல்ல வேண்டாம்' என, தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) கேட்டுக் கொண்டுள்ளது.


இந்த சூழ்நிலையில், ஹெட்லிக்கு மேலும் சில பாலிவுட் பிரபலங்களுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக பாலிவுட் நடிகை ஒருவர் அவருடன் நட்பு கொண்டிருந்தார். ஹெட்லியுடன் சென்று அந்த நடிகை இரவு விருந்து சாப்பிட்டுள்ளார். மகேஷ் பட்டின் மகன் ராகுல் மற்றும் வேறு சில நண்பர்கள் மூலம் ஹெட்லியும், அந்த நடிகையும் நட்பாகியுள்ளனர். ( Hindi actress model not connected with Ragul Bhat )


ஹெட்லி அடிக்கடி செல்லும் தெற்குமும்பை பிரீச் கேன்டியில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் தான், அவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது என, போலீசார் தெரிவித்துள்ளனர். பாலிவுட் பிரபலங்கள் வேறு யாருடனாவது ஹெட்லிக்கு தொடர்பு உண்டா என்பது பற்றியும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


அதேநேரத்தில், ஹெட்லியுடன் தொடர்புள்ளதாகக் கூறப்பட்ட பாலிவுட் நடிகை மற்றும் வேறு சில நடிகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இத்தகவலை நடிகையின் பெற்றோர் மறுத்துள்ளனர்.


அவர்கள் கூறுகையில், "ஹெட்லியுடன் நடிகைக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஜிம்மிற்கு ஹெட்லி சென்ற நேரத்தில், எங்கள் மகளும் சென்றிருக்கலாம். ஹெட்லிக்கும் நடிகைக்கும் ஒரு போதும் தொடர்பு இருந்ததில்லை' என்றனர்.


இதற்கிடையில், ஹெட்லியுடன் நட்பு கொண்டிருந்ததற்காக, அவர் அடிக்கடி சென்று வந்த ஜிம்மில் பணியாற்றிய பயிற்சியாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உடலை கச்சிதமாக வைத்திருக்க தேவையான பயிற்சிகளை அளித்து வந்த அவரின் பெயர் விலாஸ் வர்க். இவர், தெற்கு மும்பையில் திரைப்பட தயாரிப்பாளர் பிரிட்டிஷ் நந்தி என்பவருக்குச் சொந்தமான ஜிம்மில் தான் பணியாற்றி வந்தார். இங்குதான் மகேஷ் பட்டின் மகன் ராகுலுக்கு, பயங்கரவாதி ஹெட்லியை விலாஸ் வர்க் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.


ராகுலுக்கும், ஹெட்லிக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியான உடன், மும்பை போலீசை அணுகிய வர்க், ஹெட்லி பற்றி தனக்கு தெரிந்த விவரங்களை எல்லாம் கூறியுள்ளார். இருந்தும், ஜிம் நிர்வாகம் அவரைத் தற்போது வேலையை விட்டு நீக்கியுள்ளது.


வேலை பறிபோனது பற்றி வர்க் கூறியதாவது: கடந்த 10 நாட்களாக நான் தூங்கவில்லை. குடும்பத்தில் ஒருவர் இறந்தால் எப்படி இருக்குமோ அது போன்ற நிலைதான் என் வீட்டில் உள்ளது. என் வாழ்க்கை முற்றிலும் அழிந்து விட்டது. எட்டு வருடங்களாக நான் ஜிம்மில் வேலை பார்த்தேன். அவர்கள் இப்போது என்னை நீக்கி விட்டனர்.


இந்த நாட்டிற்காக நான் பெரிய உதவியை செய்திருந்தும், ஹெட்லி தொடர்பான விவரங்களை தெரிவித்தும், நான் இருக்கிறேனா அல்லது செத்துவிட்டேனா என்று கூட யாரும் பார்க்கவில்லை. நானேதான் போலீசிற்கு சென்று, ஹெட்லி குறித்த விவரங்களை தெரிவித்தேன்.வெளிநாட்டைச் சேர்ந்தவரான ஹெட்லி, என்னுடன் அன்பாக, நட்பாக பழகினார். நானாகச் சென்று ஹெட்லியைச் சந்திக்கவில்லை. அவர்தான் என்னை சந்தித்தார். இவ்வாறு வர்க் கூறினார்.


மூணாறில் ஹெட்லி தங்கிய விடுதி மீது வழக்கு பதிவு : அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, மூணாறில் தங்கியதாக சந்தேகிக்கப்படும் விடுதி மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பழைய மூணாறு பகுதியில், டாடா கம்பெனிக்கு சொந்தமான "ஹைரேஞ் கிளப்' தங்கும் விடுதி உள்ளது.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஓட்டல், ரிசார்ட் உள்ளிட்டவைகளில் தங்கும் போது, அவர்களது விவரங்களை "சி' படிவ விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து தரவேண்டும். இதன் நகலை அன்றைய தினமே, விடுதி நிர்வாகத்தினர் மூணாறு போலீஸ் ஸ்டேஷனிற்கு வழங்க வேண்டும். ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசாருக்கும், புலனாய்வுத் துறையினருக்கும் தலா ஒரு நகல் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என, விதிமுறைகள் உள்ளன.


ஹைரேஞ் கிளப்பில் செப்., 19 ல் அமெரிக்காவில் கைது செய்யப் பட்டுள்ள பயங்கரவாதி டேவிட் ஹெட்லி என்ற பெயரில் பூர்த்தி செய்யப்பட்ட "சி' படிவ விண்ணப் பத்தை, போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதன் நகலை போலீசாருக்கு வழங்கவில்லை.தங்கும் விடுதி பதிவேட்டில் பெயர் உள்ளிட்ட எந்த தகவல்களும் இல்லை. எனவே, தங்கும் விடுதி மீது விதிமுறை மீறியதாக மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment