கோவை:
மழை காரணமாக பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தும், உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
கலெக்டரின் உத்தரவை உதாசீனம் செய்யும் இது போன்ற கல்வி நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. இரண்டாவது நாளான இன்று (நவ., 10ம் தேதி), பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
ஆனாலும் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பற்றிய தகவல் தெரியாததால், காலையில் பள்ளிக்கு வந்த பின்பே அறிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். ஆனால் கலெக்டரின் உத்தரவை சில தனியார் பள்ளிகள் காற்றில் பறக்க விட்டன. ரெட் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஏர்போர்ஸ் ஸ்கூல், பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., பப்ளிக் ஸ்கூல் உட்பட சில பள்ளிகள் எப்போதும் போல் திறந்து செயல்பட்டன. ஆனால் மாணவர்கள் குறைவாகவே வந்திருந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் விடுமுறை அறிவிப்பு காரணமாக, குழந்தைகளை ஏற்றிச் செல்ல ஆட்டோக்கள், வேன்கள் வரவில்லை. இதனால் காலையிலும் மாலையிலும் பெற்றோர் அவதிப்பட்டனர்.
கலெக்டரின் உத்தரவை மீறி செயல்பட்ட இந்த இரு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள். பாடத்திட்டம் மட்டுமே சி.பி.எஸ்.இ., என்பதையும் பள்ளிகள் அமைந்திருப்பது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் என்பதையும் பள்ளி நிர்வாகங்கள் மறந்து செயல்படுகின்றன. அதே வேளையில் புலியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளி, கலெக்டரின் உத்தரவின்படி இன்று பள்ளிக்கு விடுமுறை அறிவித்தது.
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினசாமி என்பவர் கூறுகையில், “கடும் மழை இல்லாததால் உடனே பள்ளியை நடத்தலாம் என நினைப்பது தவறு. மழை பெய்த போது மின்சார ஒயர்கள் அறுந்து கிடக்கலாம். மழைத் தண்ணீர் ஊறிய நிலையில் உள்ள சில பள்ளிகள் திடீரென இடிந்து விழலாம். பள்ளி நிர்வாகிகள் இது போன்ற இடர்பாடுகளை பார்வையிட்டு, பள்ளி வளாகம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவே மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கிறது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை பள்ளிகள் கண்டு கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது,” என்றார்.
ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றங்களின் போது மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பதும், அதை தனியார் பள்ளிகள் உதாசீனம் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி செயல்படும் இது போன்ற பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, குடிநீர், மின்சார இணைப்புகளை துண்டிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கலெக்டர் உடனடியாக எடுக்க வேண்டும்.
Tuesday, November 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment