Pages

Wednesday, November 18, 2009

தீவிரவாத ஒழிப்பு படை-மதுரை மாவட்டம் திருவாதவூர்

நாடு முழுவதும் தீவிரவாதிகளின் மிரட்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். தர்மபுரி, கொடைக்கானல், பெரியகுளம் பகுதிகளில் கடந்த ஆண்டு நக்சலைட்டு தீவிரவாதிகளின் நடமாட்டம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் மதுரையில் உள்ள புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தீவிரவாதிகளின் மிரட்டல் இருந்து வருவதால் மத்திய உளவுத்துறை ஆலோசனைப்படி அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் மத்திய தீவிரவாத ஒழிப்பு படை முகாமை தென் பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு மதுரை மாவட்டம் திருவாதவூர் அருகே உள்ள இடையப்பட்டி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

சுமார் 80 ஏக்கர் பரப்பில் தீவிரவாத ஒழிப்புப்படை முகாம் அமைக்கப்படு கிறது. பயங்கரமான அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக விமானம் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லும் வகையில் முகாம் அமைய இடையப்பட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்காலிகமாக கருப்பாயூரணி பகுதியில் முகாம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த முகாமில் இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 45 வீரர்களை கொண்ட பட்டாலியன் இதில் இடம் பெறுகிறார்கள். தற்போது குன்னூரில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் வருகிற ஜனவரி மாதம் மதுரை வருகிறார்கள்.

இது குறித்து துணை கமாண்டர் நாயக் கூறுகையில், இடையப்பட்டியில் தீவிரவாத ஒழிப்பு படை முகாமுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டிட பணி தொடங்கி ஒரு வருடத்தில் முடிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment