
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கை நிருபமா ராஜபக்சே. இவர் தனது கணவர் நடேசனுடன் தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த 7-ந்தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார்.
9-ந்தேதி ராமேஸ்வரம் கோவிலிலும் நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார்.
அதன்பிறகு நேற்று இரவு திருச்சிக்கு காரில் புறப்பட்டு வந்தார். திருச்சியில் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலில் தங்கி உள்ளார்.
இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட திட்டமிட்டிருந்தார்.இதற்காக இன்று காலை புறப்பட தயாரானார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தங்கையான நிருபமா ராஜபக்சே திருச்சிக்கு வரக்கூடாது என புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவர் வந்ததால் கருப்பு கொடி காட்டி திருப்பி அனுப்புவோம் என மாவட்ட செயலாளர் சங்கர் மற்றும் கட்சியினர் கூறியிருந்தனர்.
இன்று காலை திருச்சியில் ஓட்டலில் நிருபமா ராஜபக்சே தங்கியுள்ளார் என்று தகவல் அறிந்ததும் புதிய தமிழகம் கட்சியினர் ஓட்டலுக்கு சென்று எதிர்ப்பை தெரிவிக்க முயன்றனர்.
இந்த விஷயம் கேள்விப்பட்டதும் ஓட்டலை சுற்றியுள்ள ரோடுகள் சந்திப்பில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை சந்திப்பு, ஜங்சன் ரோட்டில், திருவள்ளுவர், பஸ் நிலையம் ரோடு சந்திப்பு, மெக்டொல்டு ரோட்டில், ஸ்டேட்பாங்க் பகுதி என நாலாபுறமும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பெரியார் சிலை பகுதிக்கு புதிய தமிழகம் கட்சியினர் 30 பேர் வந்தனர். அங்கு கையில் கருப்பு கொடியுடன் நிருபமாவே திரும்பி போ. ஈழத்தமிழர்களை கொன்ற ராஜபக்சே தங்கையே திரும்பிப்போ என கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன்பிறகு மாவட்ட செயலாளர் சங்கர் தலைவர் அய்யப்பன், மற்றும் பெரியார் தத்துவ மையத்தை சேர்ந்த சரவணன், மற்றும் 30 பேர் ஓட்டல் இருந்த ரோட்டுக்கு செல்ல முயன்றனர்.
அவர்களை கண்டோன் மெண்டு உதவி கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு 30 பேரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினர் எதிர்ப்பால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு நிருபமா ராஜபக்சே செல்ல வில்லை. திருச்சி விமான நிலையத்தில் விமானம் மூலம் இலங்கை செல்ல புறப்பட்டார்.
இதையொட்டி திருச்சி விமானநிலையத்திலும் நிருபமா ராஜபக்சேக்கு எதிர்ப்பு காட்ட ம.தி.மு.க.வை சேர்ந்த அப்பாஸ் உள்பட 4 பேர் நின்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அதே போன்று பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்த ராஜேந்திரனும் எதிர்ப்பு காட்ட முயன்ற போது கைது ஆனார்.
திருச்சிக்கு நிருபமா ராஜபக்சே வருகையையொட்டி திருச்சி விமான நிலையம் ஸ்ரீரங்கம் கோவில் மத்திய பஸ் நிலையம், மற்றும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment