Pages

Sunday, November 1, 2009

அல் காய்தா தீவிரவாதிகளுக்கும் அந்த அமைப்பின் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது

லாகூர் அல் காய்தா மூத்த தலைவர்களை பாகிஸ்தான் பிடிக்கத் தவறியதை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கேள்வி எழுப்பியுள்ளார். “அல் காய்தா தீவிரவாதிகள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பது பாகிஸ்தான் அரசாங்கத்தில் யாருக்குமே தெரியாது. இதை என்னால் நம்பமுடியவில்லை,” என்று ஹில்லரி கூறினார். இரண்டு நாள் பயணமாக லாகூர் வந்திருந்த ஹில்லரி, செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். அல் காய்தா தீவிரவாத இயக்கத் தலைவர்களும், அதன் உறுப்பினர்களும் மறைந்து இருக்கும் இடம் தெரியவில்லை என பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் அல் காய்தா தீவிரவாதிகளைப் பிடிக்கவோ, அந்த இயக்கத்தின் தலைவர்களை அழிக்கவோ பாகிஸ்தான் தவறி விட்டது என்று ஹில்லரி குற்றம் சாட்டினார். பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவை வலுப்படுத்தும் நோக்கத்தில் லாகூருக்கு வந்த அவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “கடந்த 2002-ம் ஆண்டு முதல் அல் காய்தா தீவிரவாதிகளுக்கும் அந்த அமைப்பின் தலைவர்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பான இடமாக இருந்து வருகிறது,” என்று ஹில்லரி கூறினார். “பாகிஸ்தானில் தளம் அமைத்து செயல்பட்டு வரும் அல் காய்தா தீவிரவாதிகளைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் எந்த தகவல்களும் தங்களுக்குத் தெரியாது என பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. இது நம்பும்படியாக இல்லை,” என்றார் அவர். பாகிஸ்தானின் உள்நாட்டு முதலீடு மற்றும் வரி முறையைப் பற்றியும் ஹில்லாரி குறை கூறினார். பாகிஸ்தான், அரசாங்க மற்றும் பொதுச் சேவை துறைகளில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். “உள் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்ப பாகிஸ்தான் அரசுக்கு கிடைக்கும் வரி உலகிலேயே ஆகக் குறைவாக உள்ளது. நாங்கள் எங்கள் நாட்டில் எல்லாவற்றுக்கும் வரி விதிக்கிறோம். ஆனால் பாகிஸ்தானில் இதைப் பார்க்க முடியவில்லை,” என்று அவர் சொன்னார். பாகிஸ்தானில் 180 மில்லியன் பேர் உள்ளனர். அந்நாட்டின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சவாலை சமாளிக்க பாகிஸ்தான் இப்போதே திட்டமிட வேண்டும் என்றும் ஹில்லரி வலியுறுத்தினார். முன்னதாக லாகூரில் கல்லூரி மாணவர்களிடம் பேசிய திருவாட்டி ஹில்லரி, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அத்தகைய தீர்வு காணப்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும் என்றும் பாகிஸ்தானின் பொருளியல் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment