
ஊட்டி : பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகை, நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஊட்டி பத்திரிகையாளர் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊட்டி பத்திரிகையாளர் சங்க உறுப்பினர் ரொசாரியோ சார்பாக, மக்கள் சட்ட மையத்தின் தமிழ் மாநில இயக்குனர் வக்கீல் விஜயன், வக்கீல்கள் செந்தில்குமார், சசிகுமார் ஆகியோர் இணைந்து, ஊட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விபசார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு நடிகை தெரிவித்த தகவலின்படி, அனைத்து நாளிதழிலும் செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதற்கு மறு நாளே நடிகர், நடிகைகளின் மனம் புண்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், தினமலரில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிறகு, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் கூட்டம் நடத்தி, "தினமலர்' நாளிதழை குறிவைத்தும், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களை மிகவும் ஆபாசமாகவும், கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், பேசி உள்ளனர்.
கண்டனக் கூட்டத்தில் பேசிய, நடிகை ஸ்ரீபிரியா, நடிகர்கள் விஜயகுமார், விவேக், சத்யராஜ், அருண் விஜய், சூர்யா, சரத்குமார், சேரன் ஆகியோர் பத்திரிகையாளர்களின் தொழிலையும், அவர்களது குடும்பத்தையும், அவர்களின் சமூக தகுதியையும், மிக மோசமாக பேசி உள்ளனர். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடிகை, நடிகர்களின் பேச்சு கேட்டு, பலரும் எனது மனுதாரரை தொடர்புகொண்டு விசாரித்து உள்ளனர். நடிகர்களின் பேச்சு பத்திரிகையாளர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஈடு செய்ய முடியாத இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டுள்ள எதிரிகளை அழைப்பாணை அனுப்பி, அழைத்து விசாரித்து தக்க தண்டனை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.
No comments:
Post a Comment