Pages

Tuesday, November 3, 2009

தனியார் விமான நிறுவன பைலட் தற்கொலை?

வேலை பறிபோய் விடுமோ என பயந்து, அடுத்து என்ன செய்வது என்ற கவலையில், தனியார் விமான நிறுவன பைலட் தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.




தனியார் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணிபுரிந்து வந்தவர் திருவான்மியூரைச் சேர்ந்த கிருஷ்ண நாராயணன்(28). மாதம், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வந்துள்ளார். இதனால், திருவான்மியூரில் 25 ஆயிரம் ரூபாய்க்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம், துர்நாற்றம் வீசிய நிலையில் அவரது உடல், வீட்டில் கிடந்தது. கிருஷ்ண நாராயணன் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து, மலேசியாவில் உள்ள அவரது தந்தை, சகோதரி, அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு சகோதரி ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.




அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ண நாராயணன் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக, கிருஷ்ண நாராயணன் பணிபுரிந்த தனியார் விமான நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த ஆட்குறைப்பு பட்டியலில் கிருஷ்ண நாராயணனின் பெயரும் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த கிருஷ்ண நாராயணன், அடுத்து என்ன செய்வது என கவலையடைந்துள்ளார். இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வேலை போய் விட்டால் ஆடம்பர வாழ்க்கைக்கு பணத்திற்கு என்ன செய்வது என திண்டாடியுள்ளார்.




தீபாவளிக்கு பின் இதுகுறித்து தந்தை, சகோதரிகள், நண்பர்களிடம் பேசியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் அவரது சகோதரி பத்து நாட்களுக்கு முன், "வேலை போனால் போகிறது. அமெரிக்கா வந்து விடு' என கூறியுள்ளார். கிருஷ்ண நாராயணன் தனிமையை அதிகம் விரும்பியுள்ளார். இவருக்கு நண்பர்கள் மிகவும் குறைவு. இதுவும் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன் கிருஷ்ண நாராயணனை பார்க்க வந்த நண்பர் ஒருவரை, "பிறகு பார்க்கலாம்' என கூறி திருப்பி அனுப்பியுள்ளார்.




கிருஷ்ண நாராயணன் பைலட்டாக பணிபுரிவதால், மாதம் ஒரு முறை உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், அவரது உடலில் எந்த பிரச்னையும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு கிருஷ்ண நாராயணன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதை உறுதி செய்ய, போலீசார் அவரது உடலில் இருந்து மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment