
கும்பாபிஷேகம் மற்றும் சித்திரை ஆட்டத்திருநாள் பூஜை முடிந்து சபரிமலை நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மண்டல கால பூஜைக்காக இன்று மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலை சன்னிதானத்தின் சுற்றுக் கோயில்களான கணபதி, நாகராஜா, மாளிகைப்புறம் சன்னதிகள் தங்கத்தால் மாற்றி அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக கடந்த 11-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 13-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இம்மூன்று நாட்களிலும் படிபூஜை நடைபெற்றது. நேற்று மதியம் களபாபிஷேகம் நடந்தது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு பூஜித்த கலசத்தில் சந்தனத்தை நிறைத்து பகவானுக்கு அபிஷேகம் செய்தனர். அத்தாழ பூஜைக்கு பின்னர் நடை அடைக்கப்பட்டது.
இன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. பதவிகாலம் நிறைவு பெறும் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான புதிய மேல்சாந்திகள் சபரிமலை விஷ்ணுநம்பூதிரி, மாளிகைப்புறம் மாதவன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி 18-ம் படியேறி வருவர். சபரிமலை புதிய மேல்சாந்திக்கு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு அபிஷேகம் நடத்தி கோயிலுக்குள் அழைத்து செல்வார். இதுபோல மாளிகைப்புறம் மேல்சாந்திக்கும் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். வேறு பூஜைகள் நடைபெறாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும்.
கார்த்திகை முதல் தேதியான நாளை அதிகாலை நான்கு மணிக்கு புதிய மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் 41 நாள் மண்டலகாலம் தொடங்குவதுடன், நெய்யபிஷேகம் ஆரம்பமாகும். பக்தர்களின் வருகையை எதிர்பார்த்து பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பம்பையில் தற்காலிக ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை சிமென்ட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களின் எண்ணிக்கையை குறைத்து அன்னதான மையங்கள் அதிகரிகப்பட்டுள்ளது. நீலிமலை, அப்பாச்சிமேடு பகுதிகளில் நவீன வசதிகளுடன் இதய நோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம்பையிலும், சன்னிதான நடைப்பந்தலிலும் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
-சன்னிதானம் தினமலர் தகவல்மையம் போன்: 04735 202377
மொபைல்: 094962 02764
No comments:
Post a Comment