
"பஸ்களில் விளம்பரம் செய்வதற்குத் தடை விதிக்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி மீறி, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் விளம்பரம் செய்துள்ளது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி முகோபாதயா, நீதிபதி சுதாகர் ஆகியோர் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
"டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பஸ்களின் கண்ணாடிகளில் விளம்பரங்கள் ஒட்டப்படுவதால், அது வெளிச்சம் பஸ்களுக்குள்ளே செல்வதைத் தடுக்கிறது என்பது தெளிவாகிறது. பெரும்பாலான விளம்பரங்கள், பிற டிரைவர்களுக்கும், சாலையைப் பயன்படுத்துவோருக்கும் இடையூறை ஏற்படுத்தி விபத்தை ஏற்படுத்துகின்றன. பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை, மத்திய மோட்டார் வாகன விதிகளுக்கு முரணாக வைக்கப்பட்ட விளம்பரங்களை அரசு அகற்ற வேண்டும். சட்டத் திருத்தங்கள் கொண்டு வரும் வரை, மாநில அரசு பொது நலனைக் கருத்தில் கொண்டு பரிந்துரைத்த பின்வரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
அதன் விவரம் வருமாறு:
* பஸ்களின் முன்பக்கம், பின்பக்கம் மற்றும் இரு புறமும் உள்ள கண்ணாடிகளில் விளம்பரங்களை வைக்கக் கூடாது.
* பஸ்களின் உள்புறமும், பின்புறத்தில், பாடிகளில் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம். இரு புறங்களிலும் ஜன்னல்களின் மேல்புறத்தில் உள்ள கண்ணாடிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம். இதைச் செயல்படுத்த தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
* போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பஸ் ஆபரேட்டர்கள், மண்டல போக்குவரத்து அதிகாரியிடம் தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 343ன் கீழ் உரிய அனுமதியைப் பெற வேண்டும்.
* விளம்பரங்கள் ஆபாசமாக, ஆட்சேபணைக்குரியதாக இல்லாமலும், சாலையைப் பயன்படுத்துவோரின் கவனத்தைச் சிதறச் செய்யும் வகையிலும் இல்லாமல் இருப்பதை மண்டல போக்குவரத்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
* இந்த விதிமுறைகளுக்கு முரணாக உள்ள விளம்பரங்களை உடனடியாக பஸ் ஆபரேட்டர்களே அகற்ற வேண்டும். தொடர்ந்து விதியை மீறி விளம்பரங்கள் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்களின் அனுமதியை நிறுத்தி வைக்கலாம்.
* இந்த ஆலோசனைகளை அமல்படுத்தும் வகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். மத்திய மோட்டார் வாகன விதி 100க்கு முரணாக, ஜன்னல் கண்ணாடிகளில் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கக் கூடாது. இந்த உத்தரவையும், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளையும் கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, போலீசாருக்கு உத்தரவிடும்படி, உள்துறை செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டது.
No comments:
Post a Comment