Pages

Sunday, November 15, 2009

கோதுமை அல்வா எனக்கு பிடிக்கும் மன்மோகன் சிங்க்



பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்த தேர்வை ஒழிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், வரும் கல்வியாண்டில் இது அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் கபில் சிபல் அறிவித்து இருந்தார். அது குறித்து கேட்ட பள்ளி குழந்தைகளுக்கு பதிலளிக்கையில் பிரதமர் இந்த விளக்கத்தை தெரிவித்தார். நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் சில குழந்தைகள் பிரதமரை அவரது வீட்டில் சந்தித்து பேச ஏற்பாடு செய்தது. மன்மோகன் சிங்கும் அவரது மனைவி குர்சரண் கவுரும் குழந்தைகளை வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் சரமாரியாக கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் புன்சிரிப்புடன் பதில் கூறினார்.

"பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இனி கிடையாது என்று சொல்லி விட்டீர்கள். நாங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்று அப்படி செய்கிறீர்களாக்கும்?"

" அது ஒரு யோசனைதான். விவாதம் நடக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம் "

"நீங்கள் படித்த காலத்தில் செலவு குறைவு. இப்போது ரொம்ப செலவாகிறதே?
தனியார் நிறுவனங்களில் அப்படி இருக்கும். அரசு பள்ளிகளில் செலவு குறைவுதான். பணக்காரர்கள்தான் படிக்க முடியும் என்ற நிலை வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம் "

"குர்சரண்ஜி, நீங்கள் கடைக்கு போய் சாமான்கள் வாங்குவீர்களாமே? விலையெல்லாம் எகிறி விட்டது என்று கணவரிடம் சொல்வீர்களா? "

"சொல்லுவேனே.. நாம் ஏதோ ரொட்டி பருப்பு வாங்கி சாப்பிடுகிறோம்.. வசதி இல்லாதவர்கள் இந்த விலையில் பருப்பு வாங்க முடியுமா என்று கேட்பேன். ‘விலையை குறைப்பது ரொம்ப கஷ்டம், இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்கிறேன்’ என்று எல்லோருக்கும் சொல்லும் பதிலைதான் எனக்கும் சொல்வார். எனக்கென்னவோ வியாபாரிகள் நேர்மையாக நடந்தால் பதுக்கல் குறையும், விலையும் குறையும் என்று தோன்றுகிறது "

"மன்மோகன்ஜி, உங்கள் மனைவி சொல்வதை ஒப்புக் கொள்கிறீர்களா?
பதுக்கல் மட்டுமே காரணமில்லை. சர்வதேச மார்க்கெட்டில் விலை உயரும்போது விவசாயிகளுக்கு நாம் நல்ல விலை கொடுத்தாக வேண்டும். நமது ஜனத்தொகையில் எட்டு சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கு மேல் செலவு செய்ய முடியாதவர்களஅவர்கள் இந்த விலைவாசியை எப்படி தாங்க முடியும்?

"விலை உயர்வில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. சில ஆண்டுகளாக விவசாய பொருட்களின் கொள்முதல் விலையை உயர்த்தி வருகிறோம். ஏனென்றால், விவசாயிகளின் வாங்கும் சக்தி உயர வேண்டும். அது இன்னொரு வகையில் மற்றவர்களை பாதிக்கிறது. சீக்கிரம் விலைகள் ஒரு நிலைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். சாலையோரம் வசிக்கும் குழந்தைகளையும், பிச்சை எடுத்து பிழைக்கும் குழந்தைகளையும் பார்க்கும்போது என்ன நினைப்பீர்கள்? அவர்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? அவர்களை பார்க்கும்போது மனசு வலிக்கும். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் அந்த குழந்தைகளும் கல்வி கற்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்"

"உங்களை மாதிரி பெரிய தலைவராக வர எனக்கு ஆசை. அதற்கு ஐடியா கொடுங்களேன்?
நமது நாட்டில் எல்லா குழந்தைகளுக்கும் நல்ல படிப்பும், மருத்துவ வசதியும் கிடைக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அந்த சூழலில் வளர்ந்தால் எந்த பொறுப்புக்கும் வருவதற்கான தன்னம்பிக்கை கிடைக்கும்"

"ஒரு சாதாரண ஆள் நமது நாட்டில் பிரதமராக முடியுமா?"

"நான் ரொம்ப சாதாரண ஆள்தான். உங்களை விட வசதி குறைந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். நான் கற்ற கல்வியால் தான் இந்த உயர்ந்த பதவிக்கு வந்துள்ளேன். வாழ்க்கையை மாற்றியமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது "

"இந்தியர்கள் வெளிநாடு சென்ற பிறகு நோபல் பரிசு பெறுகிறார்களே, ஏன்?
இந்தியாவில் அதற்கான சூழ்நிலை இல்லை. ஆராய்ச்சி மனப்பான்மையில் சிந்திப்பவர்களுக்கு மேலை நாடுகளில் மதிப்பு அதிகம். அதிகமாக கேள்வி கேட்கும் நடைமுறையே நமது கல்வி அமைப்பில் இல்லை. அதனால்தான் இந்திய குழந்தைகள் வெளிநாடு செல்லும்போது கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகிறார்கள் "

"நேருவை நீங்கள் சந்தித்து இருக்கிறீர்களா?"

"பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக வேலை பார்த்தபோது பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த பிரதமர் நேரு வந்தார். யாரெல்லாம் துணிந்து அவர் அருகில் போனார்களோ அவர்கள் எல்லோருடனும் நேரு சகஜமாக பேசினார். நான் நெருக்கியடித்து போகவில்லை. ஆனால் அது மறக்க முடியாத நாள் "

"உங்களுக்கு பிடித்த ஸ்வீட் எது?"

"கோதுமை அல்வா "

"பாட்டு பாட பிடிக்குமா, கேட்க பிடிக்குமா?"

"இசை, பாடல் ரொம்ப பிடிக்கும். என் மனைவிக்கு நன்றாக பாட தெரியும் "

"சிறு வயதில் எதற்காவது தண்டனை பெற்றதுண்டா?"

"என் அப்பாவின் வாட்சும் கொஞ்சம் பணமும் காணாமல் போய்விட்டது. நான்தான் எடுத்திருப்பேன் என்ற சந்தேகத்தில் அப்பா என்னை அடித்துவிட்டார். வீட்டுக்கு வந்திருந்த வேறு ஒருவர்தான் எடுத்திருக்கிறார் என்று அப்புறம் தெரிந்தது. என்னை தண்டித்ததற்காக அம்மாவும் அப்பாவும் ரொம்ப வருத்தப்பட்டார்கள் "

"எப்போதும் நீல நிற தலைப்பாகை அணியும் மர்மம் என்ன?"
நீலம் எனக்கு பிடித்த கலர். சில ஆண்டுகள் முன்பு வரை பல நிறங்களில் தலைப்பாகை அணிந்தேன். இப்போது நீலம் போதும் என்று அணிகிறேன்.

"அதிகம் பேசுவதே இல்லை, ஏன்?"

"கூட்டணி அரசு நடத்தும்போது அதிகம் பேசுவதில் பயன் இல்லை. பொதுவாக அதிகம் பேசினாலே பிரச்னைதான் என்பது என் கருத்து "

"உங்களை பலவீனமான பிரதமர் என்று அழைக்கிறார்களே?"

"என் மனசுக்கு சரி என்று படுவதை நான் செய்கிறேன். என்னை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் வேலை. அதனால் எனக்கு ஒன்றும் கெட்டு விடாது "

"உங்கள் ஃபேஸ்புக், ஆர்குட், இமெயில் அக்கவுன்ட்ஸ் பற்றி சொல்லுங்கள்..?"

"அதெல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் நான் என்ன வேலை செய்கிறேன் என்ற விவரமெல்லாம் என்னுடைய வெப்சைட்டில் போடப்படுவதாக உதவியாளர் சொன்னார் "

No comments:

Post a Comment