Pages

Tuesday, November 24, 2009

சிங்கப்பூரில் ஸ்டாலின் ?

துணை முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் வந்துள்ளார்.
சிங்கப்பூர்அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அவருடைய நான்கு நாள் அதிகாரபூர்வ பயணம் இடம் பெறுவதாக இந்தியத் தகவல் சாதனங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர் ஸ்டாலின் குழுவில் தொழில்துறை செயலாளர் பாரூக், பிரதான செயலாளர் கே தீனபந்து, தமிழ்நாடு நகர மேம்பாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பனிந்திர ரெட்டி, பொதுப் பயனீட்டுத் துறை செயலாளர் எஸ் ராமசுந்தரம், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.
“180 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் சோழிங்கநல்லூர் திட்டத்தில் நிதி நகரை ஏற்படுத்தும் திட்டமும் இருக்கிறது.
“சிங்கப்பூரின் நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை சோழிங்கநல்லூருக்கு மாற்றலாம். இந்த வழியில் இரு தரப்புகளும் நன்மை அடையலாம்,” என்று தமது பயணத்தைத் தொடங்கும் முன்பாக திரு ஸ்டாலின் சொன்னார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்தது.
மாநிலத்தின் தொழில்துறை மேம்பாட்டுக்கும் பொறுப்பு வகிக்கும் ஸ்டாலின், சோழிங்கநல்லூர் திட்டத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
கணினிப் பேட்டையுடன் நிதி மையமும் வங்கி மையமும் அந்தப் பேட்டையில் இடம்பெறுகின்றன.
“நிதிச் சேவைத் துறையைப் பொறுத்தவரையில் சிங்கப்பூரை முன்மாதிரியாகக் கொண்டு மேம்பட தமிழ்நாடு விரும்புகிறது.
“சிங்கப்பூர் நிறுவனங்கள் கணக்கு, பத்திரப் பணிகளை தமிழ்நாட்டுக்கு மாற்றலாம்,” என்று தமிழ்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
முதலீடுகளைக் கவர்வது ஒருபுறம் இருக்க, சென்னை கூவம் நதியை சுத்தமாக்குவது தொடர்பில் ஆலோசனை , ஆற்றல்களைப் பெறுவதும் ஸ்டாலின் வருகையின் நோக்கம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தமாக்கி, அழகு படுத்தி சுற்றுலா தலமாக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. கூவம் நதியையும் சுத்தமாக்குவது குறித்து சிங்கப்பூர் நிபுணர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி செயல்படுத்த இருக்கிறது.
சிங்கப்பூருக்கு வருவதற்காக
ஞாயிற்றுக் கிழமை இரவு சென்னை விமான நிலையம் சென்ற திரு ஸ்டாலின், அங்கு பல விவரங்களைத் தெரிவித்தார்.
“தமிழகத்தை தொழில் நகரமாக மாற்றுவோம் என்று பட்ஜெட்டில் அறிவித்தோம்.
“அதன்படி தொழில் தொடங்குபவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை, வசதிகளை வழங்கி வருகிறது.
“இதன் காரணமாக தமிழ் நாட்டில் தொழில் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துகொண்டிருக்கின்றன.
“இது குறித்து சிங்கப்பூரில் அந்த நாட்டு தொழில் அதிபர்களைச் சந்தித்து பேச உள்ளேன்.
“அப்போது புதிய தொழில் தொடங்க தமிழ் நாட்டுக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பேன்.
“தமிழக அரசு செய்து கொடுக்கும் வசதிகள் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுவேன்.
“கூவம் நதியையும் சுத்தப் படுத்தி, அழகு படுத்தி, சுற்றுலா தலமாக மாற்ற திட்டமிட்டு உள்ளோம்.

“இதற்காக அந்த நாட்டு வல்லுனர் குழுவுடன் கலந்து ஆலோசிப்போம்.
“சிங்கப்பூரை முன் மாதிரியாகக் கொண்டு நாங்கள் சென்னையை தூய்மை மிகு நகர மாக்குவோம். மழை நீர் ஒரு சொட்டுகூட தேங்காமல் உடனுக்குடன் ஓடிவிடும் அளவுக்கு சாக்கடை வசதிகளை ஏற்படுத்துவோம்,” என்றார் அவர்.

No comments:

Post a Comment