
கோவை, பீளமேடு போலீஸ் எல்லைக்குள் வசித்த தாய், மகள், பேத்தி ஆகியோர் வீட்டில் மர்மமான முறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டனர்; நான்கு ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நடந்தது. வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக் கிய பீளமேடு போலீசார், சம்பவம் நடந்த வீட்டில் குற்றவாளிகளின் விரல் ரேகையை பதிவெடுக்க தேடினர்; ஏமாற்றமே மிஞ்சியது. குற்றவாளிகள் கையுறை அணிந்து கொலை செய்திருப்பதாக முடிவுக்கு வந்தனர், போலீசார்.தனிப்படை அமைத்து பல மாதமாக விசாரித்த போலீசாரால், குற்றவாளிகள் யாராக இருக்கக் கூடும் என்ற அனுமானத்துக்கு கூட வர முடியவில்லை. அந்த அளவுக்கு கொலைத் திட்டம் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டிருந்தது; இதனால், போலீசாரின் புலன் விசாரணை திறன் எடுபடாமல், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
சினிமா பாடகரின் மாமியார் கொலை: கோவை ஆர்.எஸ். புரத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி; இவர், பிரபல சினிமா பாடகரின் மாமியார். வீட்டில் தனியாக இருந்த இவரை கொலையாளிகள் கழுத்தை நெரித்து கொன்று, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்; இச்சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இந்த கொலை வழக்கிலும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.நகை ஊழியர் கொலை: ஆர்.எஸ்.புரம் பகுதி நகைப்பட்டறையில் வேலை பார்த்த ஊழியர் இருவர், மூன்றரை கிலோ தங்கத்துடன் கோவை கூட்ஷெட் ரோட்டில் பைக்கில் சென்றனர். வழிமறித்த கும்பல், ஒரு ஊழியரை கத்தியால் குத்திக் கொன்று நகைகளை வழிப்பறி செய்து தப்பியது. மற்றொரு ஊழியர் மயிரிழையில் உயிர்தப்பினார். இச்சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. வெரைட்டிஹால் ரோடு போலீசார் "மூன்று ஆண்டுகளாக தீவிர விசாரணை(!) நடத்துகின்றனர்.
நகைக் கடை காவலாளி கொலை: சாயிபாபாகாலனி போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நகைக்கடையில் காவலாளியாக வேலை பார்த்தவர் நடராஜன். நள்ளிரவில் இவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது, கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்; நகைக் கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கிலும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை.
இன்ஜினியர் மனைவி கொலை: கணபதி, குமரன் நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்; இவரது மனைவி அகிலா. இவர், சில நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த போது, மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்; தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கிலும் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இவை தவிர, வேறு சில கொலைகளிலும் குற்றவாளிகள் பிடிபடாமல், வழக்குகள் கிடப் பில் போடப்பட்டுள்ளன. நகரில் நிகழும் கொலைகளில் சில வழக்குகளில் குற்றவாளிகளை போலீசார் துரிதமாக கைது செய்துள்ள போதிலும், திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை தொடர்பான முக்கிய வழக்குகள் கிடப்பில் உள்ளன. இந்த கொலைகளை நிகழ்த்திய கொலையாளிகள் யார்? நோக்கம் என்ன? என்ற விபரம் வெளியுலகுக்கு தெரியாமலே போலீஸ் ஸ்டேஷன் கோப்புகளில் புதையுண்டு போயின.
திட்டமிட்டு கொலைகளை கனகச்சிதமாக நிறைவேற்றிய கொலையாளிகள், மக்களோடு மக்களாக சமூகத்தில் கலந்து சுதந் திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். சட்டத்தின் பிடியில் சிக்கி குற்றத்துக்கான தண்டனையை அனுபவிக்காமல் உலாவும் இந்நபர்கள், இன்னும் கொலைகளை நிகழ்த்தமாட்டார்களா? என்பதை பற்றிய கவலை போலீசுக்கு இல்லை. கொலை சம்பவங்களில் உறவை பறிகொடுத்த குடும்பங்களுக்கு சட்டம் கூறும் நிவாரணம் என்ன?காலப்போக்கில் மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட இந்த கொலை வழக்குகளின் கோப்புகளுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா? அல்லது "கண்டுபிடிக்க முடியவில்லை' என காரணத்தை கூறி, "பைல்' மூடப்பட்டுவிட்டதா என்பது, போலீசுக்கே வெளிச்சம்.
துப்பாக்கி வழக்கில் துப்பு இல்லை... :பொதுமக்களுக்கு எதிரான குற்றங்களில் மட்டுமின்றி, போலீசுக்கு எதிராக நடந்த முக்கிய குற்ற வழக்கிலும் கிரிமினல்கள் பிடிபடவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் காந்திபார்க் வழியாக இரவில் ரோந்து சென்ற போலீசாரை தாக்கி, பார்க் வளாகத்தில் கட்டிப்போட்ட சந்தன மரக்கடத்தல் கொள்ளையர், போலீஸ் துப்பாக்கியை பறித்துச் சென்றனர். இவ்வழக்கில் சிலரை கைது செய்து கணக்கு காண்பித்த போலீசாரால், துப்பாக்கியை மட்டும் மீட்க முடியவில்லை. கேரளா வனப்பகுதி கிரிமினல்களுக்கு துப்பாக்கி பறிப்பில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் தெரிவித்த போலீசார், இதுவரை இவ்வழக்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமல், ஏறத் தாழ குழி தோண்டி புதைத்தே விட்டனர்.
-nanri dinamalar chennai
No comments:
Post a Comment